Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

செவ்வாய், 27 ஏப்ரல், 2010


Download the original attachment


தெருப்பாடகர்களும், மறக்கவியலாத சில பாடல்களும்....



உலகின் மிகச்சிறந்த பாடகர்கள் உங்களைப் பொறுத்தவரை எப்பொழுதும் நீங்கள்தான். உங்களால் நீங்கள் பாடுவதாக கற்பனை செய்து கொள்ளும் பாடலை எந்தவொரு பாடகனும் பாடிவிட முடியாது. அப்படியிருக்க பெரும்பாலனவர்கள் தங்களின் குரலில் இன்னொருவரின் சாயலைக் கொண்டு வருவதற்கோ அல்லது யாருடைய குரல் யாருடைய சாயலில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும்தான் ஆர்வமாயிருக்கிறார்கள். உண்மையில் மோசமான குரலொன்றோ, கேட்க சகிக்காத குரலென்றோ எதுவுமில்லை. ராகங்களுக்குள் அடங்காவிட்டாலும் அல்லது தாளங்கள் தெரியாவிட்டாலும் பாடுவதில் சுதந்திரமான மனம் வெளிப்பட்டால் எந்த பாடலாயினும் நல்ல பாடல்தான். ஒருவரின் இயல்பினை எப்படி ரசிக்கத்தகாதது என கூறமுடியும்? ரசிப்பதற்கான பக்குவம் இல்லையென்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய எனக்கிருப்பது மட்டும்தான் ரசணை என நம்பியிருக்கக் கூடாது.

பக்கத்து வீட்டு குளியலறைகளிலிருந்து கசியும் பெண்களின் ராக முனுமுனுப்பிலிருந்து முற்றிய போதையில் நண்பர்கள், நானும் பாடுகிற பாடல்கள் வரை ரசித்த குரல்கள் எவ்வளவோ. ஆனால் பாடல்கள்?... கேட்டு கேட்டு பழக்கப்பட்ட பாடல்களை விடவும் ஒரேயொருமுறை கேட்ட பாடலின் ராகம்தான் அதிகமாக இப்பொழுதும் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக வேறெங்கும் இதுவரையும் நான் கேட்டிருக்கவில்லை. சினிமா பாடலில்லை, சிவனைப் பற்றிய பாடல், துரதிர்ஸ்டவசமாக அதனை பதிவு செய்யவும் முடியவில்லை. ஒரு இரண்டு வருடங்கள் வாரத்தில் மூன்று நாட்களாவது ராமேஸ்வரம் போகவேண்டியிருக்கும். பார்த்த வேலை அப்படி. மனல் சப்ளை லாரிகளுக்கு பொறுப்பாளராக இருந்தேன். பெரிய உத்யோகமில்லை. ஆனால் சந்தோசமான வேலை. சதாவும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலும் மணல் அள்ளுகிற ரீச்கள் மதுரையைப் பொறுத்தவரை, வைகையாற்றில் முக்கிய இடங்கள் மூன்று உள்ளன. மானாமதுரைக்கு முன்பாக தூதை, பரமக்குடிக்கு முன்பாக கமுதக்குடி, ராமநாத புரத்திற்கு முன்பாக பாண்டியூர். தேவையைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில் எடுப்பதுண்டு. எனக்கு இங்கு மட்டுமல்லாமல் கரூரிலும் ஒரு வண்டியை பார்த்துக் கொள்கிற பொறுப்பு இருந்ததால் மாறி மாறி ஓடியபடிதான் இருப்பேன். இப்போதைக்கு இதுபோதும்.

பார்ட்டி ஒருவரிடம் வசூலுக்காக ராமேஸ்வரம் சென்றிருந்தேன். இரவு பெரும்பாலும் தங்க வேண்டியிருக்கும். காலை எழுந்து கடலில் நடமாடிவிட்டு கிளம்பினால் சரியாய் இருக்கும். அப்படி அந்த காலையில் வழக்கம் போல அதிகாலை கிளம்பி கடலுக்கு நடந்து கொண்டிருந்தேன். முழுதாக விடயவில்லை. குளிரும் நல்ல குளிர். கோயிலிலிருந்து கடலுக்குப் போகிற பாதையில் ஆண்டிகள் அல்லது உங்கள் மொழியில் பிச்சைகாரர்கள் கொஞ்சம் பேர் எப்பொழுதும் அங்கு இருப்பார்கள். அதிகாலையில் எவ்வளவு சீக்கிரமாக போனாலும் குளித்து பட்டையோடு சிலர் இருப்பதைப் பார்த்து எப்படி சாத்தியமென யோசித்திருக்கிறேன். அதிகமாக இல்லாவிடினும் அவர்களின் உலகோடு எனக்கும் கொஞ்சம் உறவிருண்டிருக்கிறது. ஆனால் அது பழனியில். ரொம்பக் கஸ்டமான வேலை எதுவெனக் கேட்டால் பிச்சையெடுப்பதைத் தான் சொல்லுவேன். கொஞ்சம் கேணத்தனமாக உங்களுக்குத் தோன்றினால் கொஞ்சம் வெயிட்டிங் பாஸ் சீக்கிரமே அதையும் எழுதத்தான் போகிறேன். இப்படி அன்றைய தினம் கடலுக்குப் போகையில்தான் தற்செயலாய் அந்தப் பாடலைக் கேட்டேன். அது என்ன விதமான குரல் என்பதை வரையறுத்தெல்லாம் சொல்லிவிட முடியாது. எல்லாமென் ஈசனே என்றுதான்....பாடல் வரிகள் தொடர்ந்தன. சில நிமிடங்கள் அவருக்கு அருகிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். யார் நின்று கேட்கிறார்கள் யார் தட்டில் காசு போடுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை. தன் போக்கில் பாடிக் கொண்டிருந்தார். நான் கொஞ்சம் அதிகமாகவே அவரைக் கவனிக்கிற அக்கறையில் கூர்ந்து பார்க்கத் துவங்கி விட்டேன். ஏற்கனவே திருட்டுப் பார்வை வேறு? அதிலும் அந்த அதிகாலை இருட்டில் என்னைப் பார்க்க நிச்சயமாக திருடனாகத்தான் தெரியும். நல்ல வேளை சின்னக் குழந்தைகள் யாரும் பக்கத்தில் இல்லை. அந்த சமயத்தில் பார்த்திருந்தால் பூச்சாண்டி என்று அலறியிருப்பார்கள். அவரும் அப்படியான ஓர் அச்சம் கொண்டிருக்க வேண்டும், பாடுவதை நிறுத்திவிட்டு எழுந்து போய்விட்டார். இப்படித்தான் நான் டம்மி பீஸ் என்பது தெரியாமலேயே பலரும் ஏமாந்து போய்விடுகிறார்கள்.

முதலில் அவர் சாதாரணமாகத்தான் எழுந்து போகிறார் என நினைத்துக் கொண்டு நானும் சில அடிகள் அவரைத் தொடர்ந்தேன். கொஞ்சம் போனவுடனேயே திரும்பிப் பார்த்தவர் நான் வருவதைப் பார்த்து கோவமாக மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பினார். பிறகுதான் எனது பெர்சனாலட்டியில் அவர் பயந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் நண்பர்களே அந்தப் பாடலும் அந்தக் குரலும் சத்தியமாக இந்த நிமிடம் நினைத்தாலும் சிலிர்ப்பானது. அதன் பிரகு எவ்வளவோ முறை இப்பொழுது வரை போய் வந்தபடியேதான் இருக்கிறேன், ஆனால் மறுபடியும் அவரை சந்திப்பதென்பது வாய்க்காததாகவே இருக்கிறது. ராமேஸ்வரம் கடற்கரையில் சாதாரணமாக நடந்து போனாலே ஆயிரமாயிரம் கதைகளை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும், இரவு பகலென எல்லா சமயங்களிலும் அந்த ஊருக்கென ஓர் அழகும் ஏதோவொரு விதமான சுவாரஸ்யமும் இருக்கவே செய்கிறது. முக்கியமாக இரவுகளில். ரயில்வே ஸ்டேசனுக்கும் கோவிலுக்குமான வழியில் குதிரை வண்டியில் வருவதும் அல்லது நடந்தே வருவதும் ஊரையே சில நிமிடங்கள் நமக்குள் உள்வாங்கிக் கொள்ளச் செய்துவிடும். இதே போல எவ்வளவோ ஆண்டிகள் அற்புதமான பாடல்களை பாடக் கூடியவர்களாய் இருப்பார்கள், என்ன செய்வது நமக்குத்தான் நின்று கேட்க நேரம் இருப்பதில்லை.

அடுத்து மண்டபம். இதுவும் ராமேஸ்வரம்தான். நான் கடலுக்குள் மீன்பிடி படகுகளில் சென்றதில்லை. இங்கு சென்னையில் சில மீனவ நண்பர்கள் தொடர்ந்து அழைத்தபடியேதான் இருக்கிறார்கள். கொஞ்சம் நேரமின்மை காரணமாக போகமுடியவில்லை. இப்படிச் சொன்னால் நம்பவா போகிறீர்கள். பயம் சாமி பயம்....ஏதாவது ஆயிடுமோன்னு. ஆனாலும் எழுதத் துவங்கியிருக்கும் நாவல் முழுக்க முழுக்க வடசென்னையைப் பற்றியதுதான் என்பதோடு ஒருபகுதி மீனவர்களைப் பற்றியது எனவே சீக்கிரமாகவே போய்த்தான் ஆகவேண்டும். நாவலுக்குப் பேர் “ காம வேதம்.” இப்போதைக்கு இவ்வளவுதான். மண்டபத்தில் நண்பர்கள் கொஞ்சம்பேர் தொழில் நிமித்தமாய் பழகியிருந்தனர். சுருக்கமாக பாண்டியன் டீம். பாண்டியன் மூலமாகத்தான் பழக்கம். மணல் ஜல்லி புரோக்கர், அதனால் அவருக்கும் எனக்கும் நிறையத் தொடர்புண்டு. அந்தப் பகுதியில் பெரும்பாலான ஆர்டர்களும் அவரின் மூலமாகவேதான் கிடைத்திருந்ததால் சுற்றுவதெல்லாம் அவருடந்தான். அப்படி சுற்றுகிற சமயங்களில் இரவுகளில் குடிப்பதற்கும் சுற்றுவதற்கும் மண்டபம்தான் ஸ்பாட்.

ஒரு இரவில் படகுத் துறைப் பக்கமாக நண்பர்கள் கொஞ்சம் பேர் சேர்ந்து குடித்துவிட்டு சத்தமாக பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தோம். அப்பொழுது அதிகமாகக் குடிப்பதில்லை. கொஞ்சமாக குடித்துவிட்டு நானும் சந்தோசமாக பாடிக் கொண்டிருந்தேன். உடனிருந்த ஒருவர், வயது எப்படியும் நாற்பதுக்குக் குறையாது. பார்க்க முரட்டுத் தேகம். கடலுக்குப் போவதில் உப்புக் காத்தும் உழைப்பும் கொடுத்த இறுக்கமான உடல். அமைதியாக இருந்தவர் சத்தமாக பாடத் துவங்கினார். எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம். எல்லோரும் அமைதியாகி விட்டதில் அவருக்குக் கொஞ்சம் வெட்கம் வந்திருக்கும் போல எல்லோரையும் ஒரு மாதிரியான சங்கடத்துடன் பார்த்துக் கொண்டவரை நாங்கள் உற்சாகப் படுத்த குஷி வந்தவராய் தொடர்ந்து பாடினார். அவ்வளவும் பழைய எம். ஜி. ஆர் , சிவாஜி கணேசன் பாடல்கள். பாதி டூயட் பாடல்களும், தத்துவப் பாடல்களுமாய் சளைக்காமல் மனிதர் பாடியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நேரம் போனதும் தெரியவில்லை. நேரம் ஆக, ஆக முதல் சில வரிகளை அவர்பாட மற்றவர்கள் அடுத்த அடுத்த வரிகளைப் பாடுவதுமாய் உற்சாகமாக போய்க்கொண்டிருந்தது. களைப்பும் தெரியவில்லை,குடித்ததும் தெரியவில்லை. அப்படியொரு சந்தோசம். முக்கியமாக அவருடைய குரல். வழக்கமான அல்லது வேறு எந்த குரலோடும் ஒப்பிட முடியாதபடி பாடுவதற்கு சம்பந்தமே இல்லையென சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு மாதிரியான குரல். ஆனால் அதில் அவர் வெளிப்படுத்திய ஜீவன் மிக்க உணர்வுகள்தான் அவ்வளவு தூரத்திற்கு ரசிக்க வைத்தது. அதன் பிறகு எவ்வளவோ முறை அவரைப் பாடச் செய்து கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் தான் பாடுவதை அவ்வளவு ரசித்து பாடக்கூடிய அவரின் சந்தோசம் சிலிர்ப்பானது. இசைக்கான இலக்கனமெல்லாம் தெரியாது எனக்கு, ஆனால் ரசிக்க முடியும். ரசிப்பதற்கும் வரையறை வைத்துள்ளவர்களைப் பற்றி எப்பொழுதுமே எனக்குக் கவலையில்லை.

இப்படி ஆங்காங்கே ரசித்த குரல்கள் நிறைய இருந்தாலும் எனக்கு பல வருட பரிட்சயம் தர்மா. சிலர் அவரைப் பைத்தியமென்று சொல்வார்கள். ஆனால் அற்புதமான ஓவியன். தெரு ஓவியங்கள் கடை விளம்பரங்கள் என ஏரியாவில் குறைந்த விலையில் முடிக்க வேண்டிய வேலைகளுக்கு இவரைத்தான் அனுகுவார்கள். சம்பளமென்று கொடுப்பதில்லை, எல்லாம் சரக்குதான். மனிதான் எவ்வளவு குடிக்கிறோம் என்றெல்லாம் கணக்கு வைத்டுக் கொள்வதில்லை, இஷ்டம்போல குடிப்பார். வேலையில்லாவிட்டால் கொஞ்சம் சிக்கல்தான், கலந்து வைத்த வர்ணங்களை எடுத்து தலையில் பூசிக் கொள்ளத் துவங்கிவிடுவார். எப்பொழுதுமே பல்வேறு வர்ணங்கள் கலந்ததாகவே இருக்கும், அவருடைய தலை. பெரும்பாலும் மஞ்சளும் அரக்கு நிறமும். குடித்து விட்டு தனியாக இருக்கும் பொழுதுகளில் இவர் பாடுகிற காதல் பாடல்களுக்கு அவ்வளவு ரசிகர்கள் இப்பொழுதும் ஏரியாவில் இருக்கிறார்கள்.

ஒரு இரவு தெருப் பையன்கள் கொஞ்சம்பேர் அவருக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து விட்டு சத்தமாக பாடச் சொல்லி வரிசையாக காதல் பாடல்கள்தான். நேரமும் இரண்டு மணியை நெருங்கி விட்டிருந்தது. புதிதாக வந்திருந்த லேடி எஸ் ஐ நள்ளிரவில் ரவுண்ட வந்தவர் என்ன சத்தமென இறங்கிவர, பயல்கள் அவ்வளவு பேரும் எஸ்கேப். ஆனால் மிகுந்த கடமை உணர்ச்சியோடு இவர் பாடிக் கொண்டிருக்க முதலில் அந்தம்மா இவரைப் பைத்தியம் என்று நினைத்திருகிறார். துரதிர்ஸ்டவசமாக கையில் புகைந்து கொண்டிருந்த கஞ்ச சிகரெட்டை உடனிருந்த போலீஸ்காரர் காட்டிக் கொடுத்துவிட, குண்டுக்கட்டாக அள்ளி வண்டியில் போடத் தயாரானார்கள். உனக்கேண்டா அந்த சிரமமென இவரே சென்றவர், அந்தம்மாவைப் பார்த்து பட்டு வண்ண ரோசாவாம்....என பாடத் துவங்கி விட்டார். ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த அவ்வளவு பேருக்கும் அடக்க மாட்டாத சிரிப்பு. சத்தமாக சிரித்தால் இவர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்பதால் யாரும் மூச்சுக் காட்டவில்லை.

மறுநாள் அதிகாலையில் விசயம் கேள்விப்பட்ட தெருப் பெரியவர்கள் கொஞ்சம்பேர் போய்க் கூட்டிவரச் சென்றிருக்கின்றனர். அந்தம்மாவிற்கு அவ்வளவு கோபம், அவர் கஞ்சா சிகரெட் குடித்ததை விடவும் என்னப் பாத்து எப்படி சார் அப்பிடிப் பாடலாம். ராத்திரி முழுக்க பாட்டு. என முந்தைய இரவு இம்சையை சொல்லியிருக்கிறார், இவர் ரொம்ப அப்பிரானியாக அப்பிடியாங்க நான் பாடினேன் என்று கேட்டிருக்கிறார். என்ன செய்வதெனத் தெரியவில்லை. இனிமேல் கண்ணிலேயே பார்க்கக் கூடாதெனத் திட்டி அனுப்பி வைத்து விட்டார்கள். அதன் பிறகு எப்பொழுது கேட்டாலும் உடனடியாக அவருடைய நினைவுதான் வரும். தெருவிலும் முந்தைய பெயர்களை மறந்து விட்டு பட்டு வண்ண ரோசா என்றுதான் எல்லோரும் கூப்பிடத் துவங்கினார். இங்கு நான் தெரு என்று குறிப்பிடுவது திருமங்கலம் நகருக்குள்ளிருக்கிற ஒரு கிராமத்தினை. எல்லா மொள்ளமாரித்தனங்களும் காவாளித்தனங்களும் சர்வ சாதாரணமாக நடக்கும். ஊரில் வந்து தெருவின் பெயரைச் சொன்னாலே உங்களை ஒரு மாதிரிதான் பார்ப்பார்கள். ஆனாலும் கொஞ்சம் பாசக்கார பயல்கள், உடன் தீவிரமான இதற்கும் மேல் வார்த்தைகளிருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள் சாதி வெறி பிடித்தவர்கள். அது மட்டும்தான் பிரச்சனை. பெரும்பான்மை ஒரு சாதி மட்டும்தான். அதனால் மற்றவர்களை{அதாவது மற்ற சாதிக் காரர்களை} சுத்தமாக மதிக்க மாட்டார்கள். எதற்கு இப்பொழுது தர்மாவைப் பற்றி சொல்ல வந்தது தர்மாவோடு போகட்டும்.

எங்கோ நீங்கள் கேட்கிற சிறியதொரு முனுமுனுப்புகூட சில சமயங்களில் அற்புதமானவையாய் இருக்கலாம். ஆனால் அதனை மற்றவற்றோடு ஒப்பிடாமல் ரசிப்பதில்தான் அவற்றைப் புரிந்து கொள்வதிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக