Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

ஞாயிறு, 27 ஜூன், 2010

லக்‌ஷ்மி சரவணக்குமார் கவிதைகள்..........

1





இரைச்சல் மிகுந்த வாகனங்களின் டீசல் நெடி. காத்திருத்தலின் அவகாசத்தில், துவங்கும் நேசத்தின் ரேகைகள் உறிஞ்சுகின்றன மொத்த உயிரின் ஈரத்தையும். முழு தினத்தையோ அல்லது தவறிப்போன நிமிடத்தையோ சேமித்தலில் கொள்ளும் தாய்ப்பாலின் ருசி. வளை காதுகளாடும் வெண் முயல்களின் உடற்சூடாய் கசிகின்றன சொற்கள், வெளிறிய செந்நாவிலிருந்து. திமிறலின் தயக்கம். வெட்கத்தின் ரேகைகளாய் நெளிந்தோடும் புன்னகையில் காட்டுப்பூக்களின் வாசம். இடறி வீழ்கையில் மிளிரும் விளக்கின் வெளிச்சத்தில் இயக்கம் நிறுத்தத் தயங்கும் விழிகள். இதழ் விளிம்பில் படர்ந்து உலரும் வார்த்தைகள் பார்வையால் அவள் புரிந்து கொண்டவை. கரு மரங்களின் நிழல் வீழும் நெடுஞ்சாலையோர கட்டிடங்களென எதிரெதிரில் மெளனத்திருக்கும் இடைவெளி. நம்மில் யாரிடமுமில்லை சிறு துண்டுக் காதலும், துயரத்தின் உதிரமற்ற கைப்பிடியளவு கனவும்......

பப்புவிற்கு.......
























2


பனங்கள் குடித்த மதர்ப்பில் துவங்கும் களி நடனம். பரி நிர்வாணத்தில் சுழலும் கால்களில் அயற்சியை மீறின பரவசம். மரப்பட்டைகளின் துவர்ப்பில் படையலாக்கப்பட்ட இரைச்சித் துண்டங்களை ருசிகின்றனர் வன தேவதைகள். சித்திரக்காரர்களின் உக்கிர வர்ணங்களில் தெறித்துத் தழும்பும் சாமியாடிகளின் உருவங்கள். நீல மலர்களை சூடியவனாய் விரகத்தின் மூர்க்கத்தில் விழி பிதுங்கி நின்றவனிடம் யாசகம் கேட்கும் பெண் பூனைகள். பாறை விளிம்புகளின் சிறு பள்ள நீரள்ளி தீர்த்தமென வீசும் நாட்டுப் பாடகன், சந்தன மரங்களின் உலர் இலைகளில் பற்றும் நெருப்பில் குளிர் காய்ந்த இரவு. கந்தக அடர்த்தியில் பிணைந்த குரலில் காதலியை புணராத துயரம். இன்னும் மிச்சமிருகிறது அடுத்த இரவிற்கென மதுவும், நீர்த்துப் போகாத மோனமும்............



































3





பகலின் வெளிறிய முகத்திலிருந்து வழியும் துர் கனவுகள். நக இடுக்குகளில் கசியும் வியர்வை பசபசப்பு. தீர்க்கவியலா வன்மங்களுடன், ரூபாய்க்கு மூன்றென குறுங்கத்திகள் விற்குமொருவனை கொலை செய்ய வேண்டி அலைகிறேன். வெங்களத்தின் உதிரம் வடியா ஈரத்துடன் பாதுகாக்கப்படும் நூற்றாண்டுகளைக் கடந்த கத்தியுண்டு என்னிடம். சிவந்து பிதுங்கும் விழிகளில் மீந்த போதை. முந்தைய இரவிற்கான கஞ்சாவைக் கொடுத்தது இடது கையில் சூடு வைத்துக் கொண்ட முதியவனொருவன். இறப்பிற்குக் காத்திருக்கும் தெரு நாயொன்றின் சாயல் என்னைப் போலவே அவனுக்குமிருந்தது. தீவிரமாக காதலிக்கும் கோத்தியொருவளுடன் நிகழ்ந்த புணர்தலுக்குப்பின் விடியத் துவங்கியிருந்தது இரவு. சப்வே பிச்சைக்காரி ஒருத்தி சுயமைதுனம் செய்து கொள்வதற்காக கடைசியாக பயன்படுத்தப்பட்ட கத்தியினை, தோலுரிந்த ஒரு கையில் அவளின் இன்னொரு கை ஓய்வின் விருப்பில் சொரிந்திருக்கையில் திருடியிருந்தேன். எல்லா திருப்பங்களிலும் கிழிக்கப்பட்ட சினிமா போஸ்டர்களைத் திண்ணும் வழக்கமுடைய நான் கொலை செய்ய வேண்டியவன் மூத்திரச் சந்தொன்றினுள் உறங்கிக் கொண்டிருந்தான். கத்திகளின் ருசி தெறிந்த அவன் சருமத்தில் லாவகமாய் என் கத்தி சென்று திரும்புகையில் கசிந்து வந்தது அம்மாவின் முலை வாசனை......




லக்‌ஷ்மி சரவணக்குமார். 9790577460