Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இந்த காலகட்டத்தின் சகிக்கவியலாத இம்சைகளை ஒவ்வொரு முறையும் படைப்பாளிகள் மட்டுமே சந்திக்க வேண்டியுள்ளது. வெறும் நூறுபேர்களைத் தாண்டி வாசிக்காத தமிழின் சிற்றிதழ் எழுத்தாளனை பொழுதுபோகாமல் போகிற வருகிறவனெல்லாம் வம்பிக்கு இழுப்பதும் பதில் சண்டைக்கு நாம் வரிந்து கட்டி நிற்பதும் கொஞ்சம் சோர்வாகத்தான் இருக்கிறது.இவ்விசயத்தில் எழுதப்படுகிற விசயம் அதற்கு எழும் எதிர்ப்புகள் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். குப்பைக்குக்கூட ஆகாதவர்களுக்கெல்லாம் கேட்கிறார்களேவென பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது.
ஒரு விசயத்தை சொல்வதற்கும் அதை என்னமாதிரி சொல்வேன் என்பதும் எழுதுகிறவனின் தனிப்பட்ட உரிமை, உங்களுக்கு ஏதாவதொரு வகையில் தொந்தரவு செய்தால் நீங்கள் படிக்காமல் இருக்கலாம். நீங்கள் படித்து விமர்சிக்க அல்லது பாராட்ட வேண்டுமென எழுத்தாளன் எவனும் உருகித் தவம் கிடக்க வில்லை. சமூகத்தைப் புரட்டிப் போட வேண்டுமென்கிற கடப்பாடு படைப்பாளிக்கு இல்லை. இங்கு இருப்பதை பகடி செய்வதும் சுட்டிக் காட்டுவதும் முக்கியமே தவிர, ஒரே நாளில் புரட்சியை வெடிக்க வைத்துவிட முடியாது.
பொது சமூகத்தின் இயல்பான வெளியில் யாருக்கும் படைப்பாளிகள் என்ன செய்கிறார்கள் எனக் கவனிக்கவோ அல்லது விமர்சிக்கவோ எந்த அவகாசமும் இல்லை. அப்படியிருக்க அவ்வப்பொழுது இதுமாதிரியான சமாச்சாரங்களுக்கு நேரத்தை வீணடிப்பதைவிட ஏதாவது இலக்கிய சந்திப்புகளை நடத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக