Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

புதன், 28 ஏப்ரல், 2010



இந்தியாவின் தொலைந்து போன நகரங்களில் எப்பொழுதும் ஆச்சர்யப்படுத்துகிற நகரம் ஹம்பி. பெளத்தமும் சமணமும் விட்டுப்போன அற்புதங்களை அதிகபட்சமாய் இன்று மனித நடமாட்டமில்லாத மலைகளில்தான் பார்க்க வேண்டியுள்ளது. சமணம் பற்றி விரிவாக தெரிந்த நண்பர்கள் கொஞ்சம் பேசினாலோ எழுதினாலோ மகிழ்வேன். இது மதப் பிரச்சாரத்திற்கானதல்ல. ஒரு கலாச்சாரம் என்னவானது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிற சிறு முயற்சிதான்

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

Download the original attachment
2000 ற்குப் பிறகான தமிழ் சினிமா



(யாருடைய காலகட்டம் ? ....)


வன்முறை, சாதியம், கொஞ்சம் ஊறுகாய் அரசியல்




எந்த அடிப்படையில் சினிமாவை வேறொன்றாக அது கொண்டிருக்கும் கோணல் மானலான விதிமுறைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டியுள்ளது? ஒரு சமூகத்தின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிற கலையாகவும் எல்லை தாண்டி எல்லோருடனும் அது கொண்டிருக்கும் உறவிலிருந்தும்தான் அதற்கான முக்கியத்துவத்தினை உணரமுடிகிறது..

ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் நிகழும் மாற்றங்களை சற்று நிதானிதுக் கவனித்தால் அதன் பின்பாக வெவ்வேறான சமூக நிகழ்வுகளின் மாற்றங்களும் பிணைந்து போயிருப்பதை நாம் உணரமுடியும்? எழுச்சியும் வீழ்ச்சியும் மாறி மாறி தொடரும் இங்கு பத்தாண்டுகளுக்கோ அல்லது சில ஆண்டுகளுக்காகவேனும் யாராவது சிலரின் காலகட்டமாகவே பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும். கடந்த பத்தாண்டுகளில் தொழில் நுட்ப வளர்ச்சி, கூடுதலாக திரைப்படங்கள் சர்வதேச அளவில் சந்தைப்பட்டுப் போயிருக்கும் விஸ்தாரமென நிதானித்து யோசிக்கையில் மலைப்பான எவ்வளவோ விசயங்கள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரே சம்யத்தில் சராசரி ரசிக மனமாகவும், தொடர்ந்து திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பதும் அல்லது அத்துறையுடன் தொடர்புடையன் என்கிற முறையிலும் மிக முக்கியமான இக்காலகட்டத்தினை பதிவு செய்ய வேண்டியதை அவசியமெனக் கருதுகிறேன்.

தற்செலாகவோ, அல்லது துரதிர்ஸ்டவச்மாகவோ, புதிய இயக்குநர்கள் வந்து ஒட்டு மொத்தமாக சூழலை மாற்றுவது என்கிற விசயம் 2000 த்திற்கு முன்பு வரையிலும் அபூர்வமானதொன்றாகவே இருந்துள்ளது. குறிப்பாக தொண்ணூறுகள். அதன் இறுதி ஆண்டுகளில் சேதுவிலிருந்து துவங்கின இயக்குநர் பாலாவின் வருகைக்குப் பின்னால் அடுத்த தலைமுறை சிந்தனைகளுக்கான பெரும் வாசலொன்று திறந்து விடப்பட்டதைப் போலானது. விஜய், அஜித் இருவரும் வெற்றி தோல்வி என மாறி மாறி தந்து கொண்டிருக்க, இயக்குநர்களுக்கான இடமென்பது இரண்டாம்பட்சமாகவே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் குஷியிலிருந்துதான் தன்னுடைய வலுவான இடத்தை விஜயால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. இதேபோல் அஜித்துக்கு வாலி. இவ்வாண்டுகளின் துவக்கத்தில் சந்தேகமே இல்லாமல் விக்ரமன் மாதிரியான இயக்குநர்களின் செண்ட்டிமெண்ட் படங்களாலும் எஸ். ஏ. ராஜ்குமார் மாதிரியான இசையமைப்பாளர்களின் லாலலா விலும்தான் தமிழ் சினிமாவின் பெரும்பாலான ரசிர்கள்களும் கட்டுண்டு கிடந்தனர். இன்றுவரையிலும் வானத்தைப்போல படம் 200 நாட்களைத் தாண்டி ஓடினது நம்பவியலாத விசயம்தான். அதிர்ஸ்டவசமாக அதன் பிறகு விக்ரமனின் படங்களை பெரும்பாலான ரசிகர்கள் போஸ்டர் பார்த்தாலே ஜெர்க்காகி ஓடுகிற அளவிற்கு எச்சரிக்கையாகி விட்டார்கள். இருந்தும் இந்த துவக்க ஆண்டுகளில் எஸ். ஏ. ராஜ்குமாரின் கோரசும் தேவாவின் டவுன்லோட் கம் கானா கீதங்களும்தான் எல்லா ஊர்களிலும் ராஜபவனி வந்து கொண்டிருந்தன.

சேதுவிற்குப் பிறகு விக்ரம்

பல வருடங்களாகக் கண்டு கொள்ளப்படாமல் இருந்து மிகப் பெரிய வெளிச்சத்திற்கு வருவதுடன் தொடர்ந்து தில், தூள், காசி சாமி என ஒரு புறம் வெற்றிப் படங்களையும் இன்னொரு புறம் அதற்கு இணையாக சில தோலிவிப் படங்களையும் கொடுத்தபடியேதான் வந்துகொண்டிருக்கிறார். இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் அவரின் வெளிப்பாடுகளின் மூலமாய் தவிர்க்கவியலாத ஒரு இடட்த்திற்கு நகர்ந்து விடுகிறார். இதே காலகட்டத்தில் அலைபாயுதேவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகிற மாதவன் அடுத்த இளம் தலைமுறையினரின் வரவுகளுக்கு துவக்கமாக அமைய, தொடர்ந்து துள்ளுவதோ இளமையிலிருந்து தனுஷும், காதல் அழிவதில்லை படத்திலிருந்து சிம்புவும் வருகிறார்கள். இன்னொரு புறம் அற்புதமான ஒளிப்பாதிவாளராக அறியப்பட்டிருந்த இயக்குநர் ஜீவா 12 பியின் மூலமாய் இயக்குநராக, பெரும் நாயக எதிர்பார்ப்புடன் கவனிக்கப்பட்ட ஷாம் சத்தமே இல்லாமல் காணாமல் போய்விட்டார். இன்னொரு புறம் சிம்ரனும் ஜோதிகாவும் பல இளைஞர்களின் ஆதர்ஷமாக இருந்தனர். உடைகள் உணவு போன்றவற்றில் இருந்த நடிக நடிகையரின் பேஃஷன் அடையாளங்கள் ஹேர் கிளிப்பில் துவங்கி எல்லாவற்றிலும் ஊடுருவியிருந்தது இந்த காலகட்டம்தான். ஒருபுறம் இளம்பெண்கள் ஜோதிகா கிளிப், சிம்ரன் டாப்ஸ் என்று ரவுண்டு கட்ட இன்னொரு புறம் ஆண்கள் தில் கட்டிங் ஆளவந்தான் ஸ்டைல் உடற்கட்டு என பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகளில் களமிறங்கினர். இங்கு பலருக்கும் ஆச்சர்யமான விசயமாய் இருந்தது மொத்தமாக நாற்பது கிலோ இருந்தாலும் ஆச்சர்யப்படவேண்டிய தனுஷ் அறிமுகமான புதிதிலேயே பட்டையைக் கிளப்ப, அந்த படத்திற்குப்பின் கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து படங்கள் அதே மாதிரியான முயற்சியில் இறங்கி பெருந்தோல்விகளையும், அதிர்ஸ்டவசமாக சுமாரான வெற்றிகளையும் பெற்றன.

மின்னலே படத்தின் மூலமாக இயக்குநராகிய கெளதம் கம் கெளதம் மேனன் புதுவிதமான டோனோடு தன்னைத் தனித்துவப் படுத்துகிறார், கருத்தியல் ரீதியாக இவரின் படங்களில் கொள்ளும் விமர்சனங்களுக்கப்பால் புதுவிதமான முயற்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலமாய் அவருக்கான பிரத்யேகமான இடத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அற்புதமான மெல்லிசையோடு இசையமைப்பாளராகிய ஹாரிஸ் ஜெயராஜ் தனது பாடல்களை தனியாகத் தெரியம்படி தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த காலகட்டம் துவங்கி சமீபமான நாட்கள் வரையிலும் பெரும்பாலான நல்ல பாடல்களை அல்லது ரசிகர்களை முனுமுனுக்கச் செய்யும் பாடல்களை தந்து கொண்டிருக்கிறார். மின்னலே, காக்க காக்க, சாமி, என தொடரும் வரிசையில் சமீபத்திய வாரணம் ஆயிரம் அயன் வரை ஹாரிஸின் இடம் பிரமாதமானது. துள்ளுவதோ இளமையில் திரைக்கதையாளராகவும் பின்பு காதல் கொண்டேன் படத்தின் மூலமாய் இயக்குநராகவும் வந்த செல்வராகவன் நிச்சயமாக ஒரு புதிய திருப்பு முனையாகவே பார்க்கப்பட வேண்டியவர். ஏனெனில் உச்ச நட்சத்திரங்கள் அவ்வளவு பேரும் பரபரப்பில் இருக்க சிறிதும் எதிர்பாராமல் இந்தப்படம் கண்ட வெற்றி மலைப்பானது. யுவன் ஷ்ங்கர் ராஜாவின் அற்புதமான பாடல்கள், அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு என இளைஞர்களாக சேர்ந்து மொத்த திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்தனர். தொடர்ந்து சரியான படங்களுக்கான போராட்டத்தில் தடுமாறிக் கொண்டிருந்த சூர்யா, பாலாவின் மூலமாய் நந்தாவிலும், கெளதம் மேனனின் மூலமாய் காக்க காக்கவிலும் ஆக்ரோஷமான நடிப்பாற்றலை வெளிப்படுத்த திறமையானவர்களென சொல்லிக் கொள்ளும் படியான நிறையபேர் வந்து விட்ட ஒரு பிம்பத்தினைக் கொடுத்தது.

இவ்வளவு இளைஞர்களுக்கு மத்தியில் தொடர்ந்து தங்களின் இடத்தினை உறுதிப்படுத்த மூத்த இயக்குநர்கள் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பெருந்தோல்வியிலேயே முடிந்தது. பாலச்சந்தர் அவர்களின் பார்த்தாலே பரவசம், பொய். பாலு மகேந்திரா அவர்களின் அது ஒரு கனாக்காலம், பாரதிராஜாவின் ஈர நிலம், கடல்பூக்கள், பொம்மலாட்டம் போன்ற படங்கள். ஆனால் இவற்றுள் பாலுமகேந்திரா அவர்களின் அது ஒரு கனாக் காலமும் பாரதிராஜாவின் கடல்பூக்களும் அற்புதமான படங்களாக வந்திருக்கவேண்டியவை. வெளியாவதில் ஏற்பட்ட காலதாமதம் அப்படங்களின் மீதான நம்பிக்கைகளை குறைத்து விட்டிருந்தது. இது ஒருபுறமிருப்பினும் அத்தனைப் புது இளைஞர்களுக்கும் சவால் விடக்கூடியவராகத்தான் இசைஞானியின் பாடல்கள் இருந்தன. ஃபிரண்ட்ஸ், காசி பிதாமகன் என கிராமியத்தின் மிச்சங்களை தன்னுடைய பாடல்களாய்த் தந்து கடைக்கோடி ரசிக்கனுக்கானவராய் இருந்தார்.

எப்பொழுதுமே பரபரப்பான விசயங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் பெரும் வீச்சு ஒன்று வெளிப்பட்டு வெடிக்கும். குறிப்பிட்ட எந்த இஸ்ங்களுக்குள்ளும் தமிழ்ப் படங்களை நிறுத்திப் பார்த்துவிட முடியாதென்பதால், உதாரணங்கள் எதனையும் இதற்குக் கூறிவிட முடியாது. ஆனால் இப்படி வெடித்து வெளிப்படுவதற்குப் பின்னாலிருக்கும் வீர்யம் என்ன மாதிரியானதாய் இருக்குமெனக் கேட்டால் யோசிக்காமல் சொல்வேன், ஏ. ஆர். முருகதாஸையும், அமீரையும் சற்று கவனியுங்கள் என்று. இரண்டு பேருக்குமே முதல் படங்கள் சுமாரான வெற்றியைத் தந்த படங்கள்தான். என்றாலும் அஜித்தைத் தலையாக்கியது முருகதாஸ்தான். ஆனால் அடுத்தடுத்த படைப்புகளிலேயே ஒட்டுமொத்தமான இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்ததிலதான் இன்று பாலிவுட் வரை, முருகதாஸின் இமாலய வெற்றி. தன்னுடைய படங்களுக்கென முருகதாஸ் எடுத்துக் கொள்ளும் கதைகள் மிகச் சுருக்கமாக சொல்ல முடிந்திடக் கூடியவை. ஆனால் ஒரு டெக்னீஷியனாக படத்தினை உருவாக்குகிற விதம் அற்புதமானது. அதேபோல் அமீர், முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் எப்படி சம்பந்தமில்லையோ அதேபோல்தான் மூன்றாவது படமும். அதுவரையிலும் தமிழ் சினிமாவில் பார்த்த கிராமத்திலிருந்து விலகி மிக நெருக்கமான ஊரையும் ஊர்க்காரர்களையும் இப்படம் பதிவுசெய்ததில் இசைக்கும் பெரும் பங்குண்டு. அசலான கிராமத்து மேள தாளங்களோடு பட்டையைக் கிளப்பிய பாடல்கள்தான் இன்னும் நிறைய அலைவரிசைகளில் நேயர் விருப்பப் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இது எதிலும் சேராமல் இயக்குநராக தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டிருந்த சேரன் அவர்கள் நாயகனாக அறிமுகமாக முதல் படம் கைகூடா விட்டாலும் அவரே இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. இன்னும் சொல்லப்போனால் மொத்த இண்டஸ்ட்ரியும் சற்று வலு குறைந்து போயிருந்த நேரத்தில் சேரனின் இந்த வெற்றியானது மிகுந்திருந்த டப்பிங் படங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கத் துவங்கியது. நம்பவே முடியாத ஆச்சர்யம், நேரடித் தமிழ்ப் படங்களுக்கு இணையாக டப்பிங் செய்யப்பட்ட பிற மொழிப்படங்களின் எண்ணிக்கையும் வெற்றியும் மிரட்சியூட்டுவதாக இருந்தது. ஜாக்கிச்சான் பேசுகிற ஜாலித்தழிலை ரசிப்பதற்கு பெருங்கூட்டம் திரண்டது. போதாக்குறைக்கு எம். ஜி. ஆர் அவர்களின் பழைய படங்கள் மறுவெளியிடு செய்யப்பட நூறுநாட்கள் ஓடி அப்படங்கள் இன்னும் தங்களுக்குள்ள வீர்யத்தினை வெளிப்படுத்தின. இதே காலகட்டத்தில் அழகி படத்தின் மூலமாய் பரபரப்பாகப் பேசப்பட்ட இயக்குநர் தங்கர்பச்சன் அவரின் படங்களைக் காட்டிலும் அவருடைய பத்திரிக்கை பேட்டிகளுக்காவே கவனிக்கப் பட்டார். வார இதழ்க்காரர்கள் மிக அதிகமாக இந்த காலகட்டத்தில் பயன்படுத்திய கேலிசித்திரக் கதைகள் இவரைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

இதுபுறமிருக்க என்ன நடந்தாலும் எப்படி நடந்தாலும் அதைப்பற்றி எந்தக் கவலைகளுமில்லாமல் படம் எடுத்துக் கொண்டிருந்த ஆட்களும் இந்த வரிசையில் இருக்கிறார்கள். எல்லா மொழியிலும் எப்படி சிறந்த பத்து இயக்குநர்கள் என ஒரு வரிசையை உருவாக்க முடியுமோ அப்படி இங்கு மிக கொடுமையான பத்துபேர் என வரிசைப்படுத்தும் அளவிற்கு உள்ளது நிலமை. வருடத்திற்கு இரண்டு படங்களென ஏ.வெங்கடேஷ், பேரரசு, ஷ்க்தி சிதம்பரம், கே.எஸ். ரவிக்குமார், ஹரி போன்ற ஆட்கள் விக்ரமன், வீ.சேகரின் மிச்சங்களாய் வலுவாகத் தங்களின் இருப்பை நிலைவைத்திருக்கிறார்கள். அதுசரி, சினிமாவென்றால் எல்லாவிதமான ஆட்களும் வேண்டும்தானே, அதற்காக எல்லா கொடுமைகளுக்கும் ஒரு அளவில்லாமலிருப்பதுதான் தாங்க முடியாததாக உள்ளது. அதிலும் பேரரசுவின் படங்கள் இங்கு படுத்திய பாடு கொஞ்ச நஞமில்லை. டி. ஆர்.ன் மிச்ச பஞ்ச் டயலாக்குகளுடனும் கொஞ்சம் டண்டனக்காவுடனும் களமிறங்கி இரண்டு ஹிட் கொடுத்துவிட்டு பிற்பாடு நடந்த காமெடிகளெல்லாம் என்னத்தை சொல்வது? இவர்களில்லாமல் ஷங்கரிடமிருந்து வெளிவந்த பாலாஜி சக்திவேல் தன்னுடைய முதல் படமான சாமுராய் தோல்விக்குப் பின்பாக காதலையும், வசந்தபாலன் ஆல்பம் தோல்விக்குப் பின்பாக வெயிலையும் தந்து ஏராளமான கவனிப்பையும் விவாதங்களையும் துவக்கி வைத்தனர். இப்படி ஆச்சர்யப்படுத்திய இன்னொரு ஆள் சிம்புதேவன். தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமாகியிருந்த தன்னுடைய இம்சை அரசனையே கதைக் களமாக்கி மாபெரும் வெற்றியைக் கொடுத்து பிரம்மிக்க வைத்தார்.

படத்தயாரிப்புகள் ஒரு புறம் மிக அதிகமானதாகவும் இன்னொரு புறம் கடும் தோல்விகளின் காரணமாக சரிவுகளையும் ஒரே சமயத்தில் சந்தித்ததில் மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தந்து கொண்டிருந்த ஏ.எம் ரத்னம் மிக மெதுவாக காணாமல் போய்விட்டார். அதிலும் இந்தக் காலகட்டத்தில் அவர் படங்கள் கண்ட வெற்றிகள் கற்பனை செய்ய முடியாதது, தூள், கில்லி, 7 ஜி ரெயின்போ காலனி என இவ்வரிசை அதிகம். பிற்பாக பாய்ஸின் பிரம்மாண்டத்திலும், தன் மகனின் எனக்கு இருபது உனக்கு பதினெட்டின் சம்பந்தமில்லாத பிரம்மாண்டத்திலும் பெரும் வீழ்ச்சியை இவரால் சந்திக்க நேர்ந்தது. மாறாக, ஆளவந்தனின் இழப்பில் சுதாரித்துக் கொண்ட கலைப்புலி எஸ். தானு காக்க காக்க, தொட்டி ஜெயா, என தேர்ந்தெடுத்த படங்களின் மூலமாய் சரிவிலிருந்து மீண்டெழுந்தார்.

நாயகர்களுக்காக படம் என்கிற பிம்பங்களையெல்லாம் சராசரி ரசிகன் பொய்யாக்கின காலகட்டம் இது. ரஜினி, கமல் அஜித், விஜய் என அத்தனை பெரிய நாயகர்களும் பெருந்தோல்வியை சந்திக்க நேர்ந்ததில் நம்பவியலாத அதிர்ச்சி இருந்தும் கூட, இவர்களுக்கான வருமானம் கோடிகளில் உயர்ந்ததே ஒழிய குறையவில்லை. இந்த காலகட்டத்தில் கமலின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பேசப்பட்ட படங்கள் தொடர்ந்து வணிகரீதியாக தோல்வியை மட்டுமே சந்தித்தன. ஹேராம், அன்பே சிவம், ஆளவந்தான், மும்பை எக்ஸ்பிரஸ் என அடி வாங்கினாலும் மிக சாதாரணமாக கதைகளுடன் வந்த தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற படங்கள் குறைந்த பட்ச வெற்றிகளுடன் காப்பாற்றி நின்றது. ஆனாலும் இவரின் ஹேராமும், விருமாண்டியும் மிக முக்கியமான முயற்சிகள். அதேபோல் அதிகம் பேசி காணாமல் போன ரஜினிகாந்த்தின் பாபாவிற்குப் பின்னால் சந்திரமுகியை ஆச்சர்யப்படும் விதமாக பெரும் வெற்றிப் படமாக்கினர். வெற்றிக்கான காரணம் ? ரஜினி? கதை ? ஜோதிகா ? ம்ஹூம்....தொடர்ந்து சிவாஜியில் எவ்விதமுமான தயக்கமுமின்றி ஸ்ரேயா மாதிரியான இருபது வயது பெண்ணுடன் டூயட் பாடியும், ஒரே சமயத்தில் இருபது ரவுடிகளைப் புரட்டி எடுத்தும் நானும் யூத்தான் என வரிந்து கட்டிக் கொண்டு வந்து நிற்க முடிந்ததுஅவரால்.

மிக அதிகமாக ரீமேக் படங்கள் எடுக்கப்பட்ட அதே வேளையில் ரீமிக்ஸ் பாடல்களுக்கான ஒரு ட்ரெண்ட்டையும் உருவாக்கினார்கள். இதன் சிறப்பான துவக்கம் நிச்சயமாக யுவன் ஷங்கர் ராஜாதான். அதை சிறப்பாக செய்திருப்பவரும் அவரே. பிற மொழிப்படங்கள் நேரடியாக டப் செய்யப்பட்டது போதாதென பெரிய நாயகர்களின் படங்கள் பெரும்பாலும் பிற மொழி வெற்றிப் படங்களை வாங்கி எடுத்துதாகத்தான் இருந்தது. பெருமளவில் சொல்ல முடியாவிடினும் ரஹ்மானின் சில பாடல்களும் இக்காலகட்டத்தில் சிறப்பான கொண்டாட்டங்களைப் பெற்றது. குறிப்பாக, ரிதம் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். அதேபோல் பெரிய அளவில் இல்லாத போதும் குறிப்பிடத் தகுந்த அளவில் நல்ல படங்களில் சத்தமில்லாமல் ஜீவாவும், ஜெயம் ரவியும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவை சந்தைப் படுத்தலில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியின் காரணமாய் இக்காலகட்டத்தில் ஏராளமான தமிழ்ப் படங்கள் வெளியில் பரவலாக்கப்படத் துவங்கியிருக்கின்றன. இருந்தும் திரைப்படங்களுக்கான காப்பி ரைட் போன்ற விசயங்களில் பெரிய அளவில் இன்னும் மாற்றம் வந்திருக்கவில்லை. பாலிவுட்காரர்கள் இந்த விசயத்தில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கி விட்டிருக்கின்றனர். இங்கே ஒரு சிலரின் படங்களைத் தவிர்த்து பெரும்பாலானவர்கள் இந்த விசயங்களைக் கண்டுகொள்வதில்லை என்பது வருத்தமான விசயம். சமீபத்திய வருடங்களில் வரிந்து கட்டிக் கொண்டு வந்த கார்ப்ரேட் நிறுவணங்கள் ஒட்டுமொத்தமாக சினிமாவையே மாற்றி விடுகிற பில்டப் களுடன் நுழைய, நுழைந்த வேகத்திலேயே பெரிய படங்கள் கண்ட பெரிய தோல்விகளால் கடையை மூடிவிட்டுக் கிளம்பிவிட்டனர். கார்ப்ரேட் நிறுவணங்களின் தயாரிப்பு அதிகமாகும்போது அவற்றால் ஏற்படப்போகும் நன்மைகளும் தீமைகளும் சம அளவில் உள்ளன. இப்போதிருக்கும் குறைந்த பட்ச முயற்சிகள்கூட ரிமோட்டாக மாறி சிதைந்து போகக்கூடிய அபாயம் இருப்பதை மிக முக்கியமானதொரு விவதமாக கையிலெடுக்க வேண்டும். அதே சமயம் முன்பு சொன்ன காப்பிரைட் போன்ற விச்யங்களில் இவர்களுக்கு இருக்கும் பரிட்சயம் மிக முக்கியமான அம்சமும் கூட.

சமீபத்திய வருடங்கள் என்னவாயிருக்கிறதென கவனித்தால், நான்கு நபர்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டியுள்ளது. சசிகுமார், மிஷ்கின், வெங்கட் பிரபு, கற்றதுதமிழ் ராம். சென்னை 28 என சாதாரணமாக தெருவோர கிரிக்கெட்டை கையிலெடுத்து பிரமாதமான படத்தைக் கொடுத்த வெங்கட் செல்வராகவனுக்குப் பின் புதுவிதமான டோனை கொடுத்ததுடன் அடுத்த படமான சரோஜாவிலும் தன்னுடைய திறமையை பிரமாதமாக வெளிப்படுத்தினார். மாறாக, பாலா அமீரிடமிருந்து வெளிப்பட்ட சசிகுமார் ஒரே சமயத்தில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என அவ்வளவிலும் மொத்தமாக களமிறங்கி சுப்ரமண்யபுரத்தின் மூலமாய் அவ்வளவு பேரையும் திரும்பிப்பார்க்க செய்தார். இதில் அவ்வளவையும் சிறப்பாக செய்திருந்ததுதான் இவரின் மீதான ஆச்சர்யங்களுக்குக் காரணம். தயாரிப்பாளராகத் தொடர்ந்து பசங்க படத்தினையும், நடிகனாக நாடோடிகளும் தொடர்ந்து மிகப் பெரிய வெற்றிகளாக, நிறைய புது இயக்குநர்களுக்கு சந்தேகமே இல்லாமல் இன்று ஆதர்ஷம் சசிகுமார்தான். வெறுமனே இதனை வார்த்தைக்காக சொல்லிவிட முடியாது. சுப்ரண்மன்யபுரம் படத்தின் திரைக்கதை அமைப்பிலும் உருவாக்கத்திலும் கொள்ளப்பட்டிருந்த அக்கறை உழைப்பு அபரிமிதமானது. இவர்கள் அவ்வளவு பேரிலிருந்தும் மாறுபட்டு தனித்தக் கவனத்தினை ஏற்படுத்தியிருப்பது மிஷ்கின். சித்திரம் பேசுதடி கொஞ்சமாக கவனத்தைக் கொடுத்திருந்தாலும் அஞ்சாதேவில் திரைக்கதை மேற்கொள்ளப்பட்டிருந்த விதமும், மேக்கிங் என்று சொல்லப்படுகிற பட உருவாக்கமும் தனியானதொரு அடையாளத்துடன் இருந்தது. நந்தலாலா இன்னும் வெளியாகாத நிலையில் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அடுதடுத்த படங்களுக்கான மிஷ்கினின் காத்திருப்பும் அவரின் மீதான கவனிப்பை அதிகப்படுத்துகிறது. இதுவல்லாமல் ராமை நான் குறிப்பிடுவதற்கான காரணம், மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய கற்றது தமிழ் அப்படம் கொண்டிருந்த சிறு சிறு பிழைகளின் காரணமாய் வெற்றி பெறாவிடினும் உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் அது மிக முக்கியமான படம்தான்.

இவற்றையெல்லாம் தாண்டி உள்ளடக்கமெனப் பார்த்தால் வன்முறை, மலிவான பாலியல் அல்லது மேலோட்டமான அரசியல் என ஒரு பக்கமாகவும் வழக்கமான ஸ்டேண்டப் காமெடி வகையறா படங்களும் இப்பத்தாண்டுகளில் பெரும் அளவில் வந்துள்ளன. குறிப்பாக, ரவுடியிசம். ஒரே கதையை எத்தனைபேர் எத்தனை விதமாக எடுத்துத் தீர்க்க முடியுமோ அப்படி எடுத்துத் தீர்த்திருக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி பருத்தி விரன், காதல், கல்லூரி, புதுப்பேட்டை, கற்றது தமிழ், சுப்ரமண்யபுரம் போன்ற படங்களும் இன்னும் சில படங்களும் மிக முக்கியமான விவாதங்களுக்குண்டான படங்கள்தான். மிகக்குறிப்பாக, புதுப்பேட்டையும், கற்றது தமிழும். முன்பே சொன்னபடி இப்படங்களின் திரைக்கதையில் குறைகள் உள்ளதனை மறக்கவே முடியாதுதான், ஆனால் லும்பன்களின் படமாக இந்தப் பத்தாண்டுகளில் இந்த இரண்டு படங்களைமட்டும்தான் சொல்ல முடியும். கொக்கி குமாரும் சரி, பிரபாகரும் சரி தீவிரமாக அவர்களின் பாத்திரங்களின் அடிப்படையில் விவாதிக்கப்பட வேண்டியவர்கள்.

சமீபநாட்களில் அதிகரித்திருக்கிற வலைப்பூக்கள் எழுதும் நண்பர்களுக்கு மத்தியில் கடுமையான வியாதி பெருகியிருக்கிறது. உலகின் எல்லாப் படங்களும் இன்று காணக்கிடைக்கிற அளவிற்கு எளிமையாகி இருப்பதுடன் நம்மில் சில படங்கள் வெளிநாட்டுப் படங்களை தழுவியிருப்பதும் உணமைதான். ஆனால், படம் வெளியாவதற்கு முன்பாகவே அப்படம் இந்தப்படத்தின் தழுவல் அல்லது காப்பி என்று எழுதுவதெல்லாம் பெரிய அயோக்கியத்தனம். யாரும் யாரையும் விமர்சனம் செய்வதற்கு உரிமை உண்டுதான். ஆனால், வேறு எந்த வகையிலும் பேர் வாங்கமுடியாதெனத் தெரிந்து தொடர்ந்து சினிமாக்காரர்களை காயப்படுத்துவது அவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. அதிலும் சிலர் முதல் ஷோ பார்த்தவுடனேயே வந்து அப்படம் எந்தப்படத்தின் தழுவல் என வலைதளத்தில் எழுதுகிறார்களாம். சரி, இதில் என்ன கிடைக்கிறது? தியேட்டர் போகிறவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதுடன் திருட்டு டி வீ டிக்களை அதிகப்படுத்துகிற செயல்தான் இவையெல்லாம். நியாயமாக சொல்ல நினைப்பவர்கள் அல்லது எல்லா சினிமாவையும் கரைத்துக் குடித்திருப்பவர்கள் பெரிய அளவில் இல்லாவிடிலும் ஒரு குறும்படத்தையாவது எடுத்துக் காட்டட்டுமே, அதை விட்டுவிட்டு பூதக்கண்ணாடி போட்டு ஆராய்ச்சி செய்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

சரி, இவ்வளவிற்கும் பின்னால் இந்தப் பத்தாண்டுகளின் தமிழ் சினிமா யாருடைய ஆளுமையில் கிடந்திருக்கிறது? இப்படி ஒரு கேள்வி எழுகையில் இதை வாசித்துக் கொண்டிருக்கிற உங்களுக்குமே கூட அதற்கான பதிலிருக்குமா என சந்தேகம் வரும்தான். ஆனால், நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் காமெடியாகக்கூடப் பார்க்கலாம். அப்படிப் பார்த்தாலுமேகூட உண்மை அதுதான். இந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து தன்னை வெற்றியாளனாய் வைத்திருப்பது .......... வடிவேலு மட்டும் தான். சரியாக கவனித்தால் 2000 ஆம் ஆண்டு வெளியாகிற மாயி படத்திற்குப் பின்பாகத்தான் இவரின் உச்சம் துவங்குகிறது. அதிலிருந்து இப்பொழுதுவரை வருடத்திற்கு மூன்று நான்கு படங்கள் தனியாக வடிவேலுவின் பெயரைச் சொல்லுமளவிற்கு இருக்கின்றன. இது சற்றுக் குழப்பமானதும் கூட, இவ்வளவு திறமையான புதிய இளைஞர்களின் காலகட்டத்திலும்கூட தன்னுடைய பேச்சு மொழிக்காகவும், உடலசைவுகளுக்காகவும் கொண்டாடப்படும் நடிகன். நாயகனாகவும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க முடிந்திருக்கிறதென்றால் ஆச்சர்யமான மாற்றம் என்பதைத் தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு வார்த்தைகளையும் எல்லா தரப்பிலும் வயது வித்யாசமில்லாமல் பலரும் பயன்படுத்திக் கொண்டிருப்பது வடிவேலுவிடமிருந்து பெற்றுக் கொண்டதுதான். சிறு பத்திரிக்கை நண்பர்களில் ஒரு பெரும் கூட்டமே வடிவேலுவைப் பற்றி எழுதுவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நானுட்பட. இன்னொரு வகையில் மிக முக்கியமானதொரு சமூக நிகழ்வாகக்கூட இதனைக் கொள்ள முடியும்.

சரி, இவற்றிற்கெல்லாம் அப்பாலும் மிக முக்கியமான மாற்றங்களாக இளைஞர்களின் வரவு நிறைய நல்ல ஒளிப்பதிவாளர்களையும், திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களையும் நமக்குத் தந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் தியேட்டர் வந்து படம் பார்க்கிற ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிற வேளையில் புதிய சிந்தனைகளுடன் புறப்படுகிறவர்களால் மட்டும்தான் பார்வையாளர்களை மீண்டும் தியேட்டர்களுக்குள் வரச் செய்ய முடியும். இன்னும் சில வருடங்களில் பெருகப்போகும் டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சியினைப் புரிந்து கொள்வதோடு பட்ஜெட் என்கிற விசயத்திலிருந்து மிக எளிதில் விடுபட்டு நியூவேவ் திரைப்படங்களை உருவாக்க முடியும். ஆனால், வெறுமனே தொழில் நுட்பத்தினைத் தெரிந்து கொள்வதால் மட்டும் ஆரோக்கியமான திரைப்படங்களை உருவாக்கிவிட முடியாது. அதைத் தாண்டி, புதிய விசயங்களையும் கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. பார்க்கலாம், என்ன நடக்குமென.

Download the original attachment


தெருப்பாடகர்களும், மறக்கவியலாத சில பாடல்களும்....



உலகின் மிகச்சிறந்த பாடகர்கள் உங்களைப் பொறுத்தவரை எப்பொழுதும் நீங்கள்தான். உங்களால் நீங்கள் பாடுவதாக கற்பனை செய்து கொள்ளும் பாடலை எந்தவொரு பாடகனும் பாடிவிட முடியாது. அப்படியிருக்க பெரும்பாலனவர்கள் தங்களின் குரலில் இன்னொருவரின் சாயலைக் கொண்டு வருவதற்கோ அல்லது யாருடைய குரல் யாருடைய சாயலில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும்தான் ஆர்வமாயிருக்கிறார்கள். உண்மையில் மோசமான குரலொன்றோ, கேட்க சகிக்காத குரலென்றோ எதுவுமில்லை. ராகங்களுக்குள் அடங்காவிட்டாலும் அல்லது தாளங்கள் தெரியாவிட்டாலும் பாடுவதில் சுதந்திரமான மனம் வெளிப்பட்டால் எந்த பாடலாயினும் நல்ல பாடல்தான். ஒருவரின் இயல்பினை எப்படி ரசிக்கத்தகாதது என கூறமுடியும்? ரசிப்பதற்கான பக்குவம் இல்லையென்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய எனக்கிருப்பது மட்டும்தான் ரசணை என நம்பியிருக்கக் கூடாது.

பக்கத்து வீட்டு குளியலறைகளிலிருந்து கசியும் பெண்களின் ராக முனுமுனுப்பிலிருந்து முற்றிய போதையில் நண்பர்கள், நானும் பாடுகிற பாடல்கள் வரை ரசித்த குரல்கள் எவ்வளவோ. ஆனால் பாடல்கள்?... கேட்டு கேட்டு பழக்கப்பட்ட பாடல்களை விடவும் ஒரேயொருமுறை கேட்ட பாடலின் ராகம்தான் அதிகமாக இப்பொழுதும் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக வேறெங்கும் இதுவரையும் நான் கேட்டிருக்கவில்லை. சினிமா பாடலில்லை, சிவனைப் பற்றிய பாடல், துரதிர்ஸ்டவசமாக அதனை பதிவு செய்யவும் முடியவில்லை. ஒரு இரண்டு வருடங்கள் வாரத்தில் மூன்று நாட்களாவது ராமேஸ்வரம் போகவேண்டியிருக்கும். பார்த்த வேலை அப்படி. மனல் சப்ளை லாரிகளுக்கு பொறுப்பாளராக இருந்தேன். பெரிய உத்யோகமில்லை. ஆனால் சந்தோசமான வேலை. சதாவும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலும் மணல் அள்ளுகிற ரீச்கள் மதுரையைப் பொறுத்தவரை, வைகையாற்றில் முக்கிய இடங்கள் மூன்று உள்ளன. மானாமதுரைக்கு முன்பாக தூதை, பரமக்குடிக்கு முன்பாக கமுதக்குடி, ராமநாத புரத்திற்கு முன்பாக பாண்டியூர். தேவையைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில் எடுப்பதுண்டு. எனக்கு இங்கு மட்டுமல்லாமல் கரூரிலும் ஒரு வண்டியை பார்த்துக் கொள்கிற பொறுப்பு இருந்ததால் மாறி மாறி ஓடியபடிதான் இருப்பேன். இப்போதைக்கு இதுபோதும்.

பார்ட்டி ஒருவரிடம் வசூலுக்காக ராமேஸ்வரம் சென்றிருந்தேன். இரவு பெரும்பாலும் தங்க வேண்டியிருக்கும். காலை எழுந்து கடலில் நடமாடிவிட்டு கிளம்பினால் சரியாய் இருக்கும். அப்படி அந்த காலையில் வழக்கம் போல அதிகாலை கிளம்பி கடலுக்கு நடந்து கொண்டிருந்தேன். முழுதாக விடயவில்லை. குளிரும் நல்ல குளிர். கோயிலிலிருந்து கடலுக்குப் போகிற பாதையில் ஆண்டிகள் அல்லது உங்கள் மொழியில் பிச்சைகாரர்கள் கொஞ்சம் பேர் எப்பொழுதும் அங்கு இருப்பார்கள். அதிகாலையில் எவ்வளவு சீக்கிரமாக போனாலும் குளித்து பட்டையோடு சிலர் இருப்பதைப் பார்த்து எப்படி சாத்தியமென யோசித்திருக்கிறேன். அதிகமாக இல்லாவிடினும் அவர்களின் உலகோடு எனக்கும் கொஞ்சம் உறவிருண்டிருக்கிறது. ஆனால் அது பழனியில். ரொம்பக் கஸ்டமான வேலை எதுவெனக் கேட்டால் பிச்சையெடுப்பதைத் தான் சொல்லுவேன். கொஞ்சம் கேணத்தனமாக உங்களுக்குத் தோன்றினால் கொஞ்சம் வெயிட்டிங் பாஸ் சீக்கிரமே அதையும் எழுதத்தான் போகிறேன். இப்படி அன்றைய தினம் கடலுக்குப் போகையில்தான் தற்செயலாய் அந்தப் பாடலைக் கேட்டேன். அது என்ன விதமான குரல் என்பதை வரையறுத்தெல்லாம் சொல்லிவிட முடியாது. எல்லாமென் ஈசனே என்றுதான்....பாடல் வரிகள் தொடர்ந்தன. சில நிமிடங்கள் அவருக்கு அருகிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். யார் நின்று கேட்கிறார்கள் யார் தட்டில் காசு போடுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை. தன் போக்கில் பாடிக் கொண்டிருந்தார். நான் கொஞ்சம் அதிகமாகவே அவரைக் கவனிக்கிற அக்கறையில் கூர்ந்து பார்க்கத் துவங்கி விட்டேன். ஏற்கனவே திருட்டுப் பார்வை வேறு? அதிலும் அந்த அதிகாலை இருட்டில் என்னைப் பார்க்க நிச்சயமாக திருடனாகத்தான் தெரியும். நல்ல வேளை சின்னக் குழந்தைகள் யாரும் பக்கத்தில் இல்லை. அந்த சமயத்தில் பார்த்திருந்தால் பூச்சாண்டி என்று அலறியிருப்பார்கள். அவரும் அப்படியான ஓர் அச்சம் கொண்டிருக்க வேண்டும், பாடுவதை நிறுத்திவிட்டு எழுந்து போய்விட்டார். இப்படித்தான் நான் டம்மி பீஸ் என்பது தெரியாமலேயே பலரும் ஏமாந்து போய்விடுகிறார்கள்.

முதலில் அவர் சாதாரணமாகத்தான் எழுந்து போகிறார் என நினைத்துக் கொண்டு நானும் சில அடிகள் அவரைத் தொடர்ந்தேன். கொஞ்சம் போனவுடனேயே திரும்பிப் பார்த்தவர் நான் வருவதைப் பார்த்து கோவமாக மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பினார். பிறகுதான் எனது பெர்சனாலட்டியில் அவர் பயந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் நண்பர்களே அந்தப் பாடலும் அந்தக் குரலும் சத்தியமாக இந்த நிமிடம் நினைத்தாலும் சிலிர்ப்பானது. அதன் பிரகு எவ்வளவோ முறை இப்பொழுது வரை போய் வந்தபடியேதான் இருக்கிறேன், ஆனால் மறுபடியும் அவரை சந்திப்பதென்பது வாய்க்காததாகவே இருக்கிறது. ராமேஸ்வரம் கடற்கரையில் சாதாரணமாக நடந்து போனாலே ஆயிரமாயிரம் கதைகளை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும், இரவு பகலென எல்லா சமயங்களிலும் அந்த ஊருக்கென ஓர் அழகும் ஏதோவொரு விதமான சுவாரஸ்யமும் இருக்கவே செய்கிறது. முக்கியமாக இரவுகளில். ரயில்வே ஸ்டேசனுக்கும் கோவிலுக்குமான வழியில் குதிரை வண்டியில் வருவதும் அல்லது நடந்தே வருவதும் ஊரையே சில நிமிடங்கள் நமக்குள் உள்வாங்கிக் கொள்ளச் செய்துவிடும். இதே போல எவ்வளவோ ஆண்டிகள் அற்புதமான பாடல்களை பாடக் கூடியவர்களாய் இருப்பார்கள், என்ன செய்வது நமக்குத்தான் நின்று கேட்க நேரம் இருப்பதில்லை.

அடுத்து மண்டபம். இதுவும் ராமேஸ்வரம்தான். நான் கடலுக்குள் மீன்பிடி படகுகளில் சென்றதில்லை. இங்கு சென்னையில் சில மீனவ நண்பர்கள் தொடர்ந்து அழைத்தபடியேதான் இருக்கிறார்கள். கொஞ்சம் நேரமின்மை காரணமாக போகமுடியவில்லை. இப்படிச் சொன்னால் நம்பவா போகிறீர்கள். பயம் சாமி பயம்....ஏதாவது ஆயிடுமோன்னு. ஆனாலும் எழுதத் துவங்கியிருக்கும் நாவல் முழுக்க முழுக்க வடசென்னையைப் பற்றியதுதான் என்பதோடு ஒருபகுதி மீனவர்களைப் பற்றியது எனவே சீக்கிரமாகவே போய்த்தான் ஆகவேண்டும். நாவலுக்குப் பேர் “ காம வேதம்.” இப்போதைக்கு இவ்வளவுதான். மண்டபத்தில் நண்பர்கள் கொஞ்சம்பேர் தொழில் நிமித்தமாய் பழகியிருந்தனர். சுருக்கமாக பாண்டியன் டீம். பாண்டியன் மூலமாகத்தான் பழக்கம். மணல் ஜல்லி புரோக்கர், அதனால் அவருக்கும் எனக்கும் நிறையத் தொடர்புண்டு. அந்தப் பகுதியில் பெரும்பாலான ஆர்டர்களும் அவரின் மூலமாகவேதான் கிடைத்திருந்ததால் சுற்றுவதெல்லாம் அவருடந்தான். அப்படி சுற்றுகிற சமயங்களில் இரவுகளில் குடிப்பதற்கும் சுற்றுவதற்கும் மண்டபம்தான் ஸ்பாட்.

ஒரு இரவில் படகுத் துறைப் பக்கமாக நண்பர்கள் கொஞ்சம் பேர் சேர்ந்து குடித்துவிட்டு சத்தமாக பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தோம். அப்பொழுது அதிகமாகக் குடிப்பதில்லை. கொஞ்சமாக குடித்துவிட்டு நானும் சந்தோசமாக பாடிக் கொண்டிருந்தேன். உடனிருந்த ஒருவர், வயது எப்படியும் நாற்பதுக்குக் குறையாது. பார்க்க முரட்டுத் தேகம். கடலுக்குப் போவதில் உப்புக் காத்தும் உழைப்பும் கொடுத்த இறுக்கமான உடல். அமைதியாக இருந்தவர் சத்தமாக பாடத் துவங்கினார். எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம். எல்லோரும் அமைதியாகி விட்டதில் அவருக்குக் கொஞ்சம் வெட்கம் வந்திருக்கும் போல எல்லோரையும் ஒரு மாதிரியான சங்கடத்துடன் பார்த்துக் கொண்டவரை நாங்கள் உற்சாகப் படுத்த குஷி வந்தவராய் தொடர்ந்து பாடினார். அவ்வளவும் பழைய எம். ஜி. ஆர் , சிவாஜி கணேசன் பாடல்கள். பாதி டூயட் பாடல்களும், தத்துவப் பாடல்களுமாய் சளைக்காமல் மனிதர் பாடியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நேரம் போனதும் தெரியவில்லை. நேரம் ஆக, ஆக முதல் சில வரிகளை அவர்பாட மற்றவர்கள் அடுத்த அடுத்த வரிகளைப் பாடுவதுமாய் உற்சாகமாக போய்க்கொண்டிருந்தது. களைப்பும் தெரியவில்லை,குடித்ததும் தெரியவில்லை. அப்படியொரு சந்தோசம். முக்கியமாக அவருடைய குரல். வழக்கமான அல்லது வேறு எந்த குரலோடும் ஒப்பிட முடியாதபடி பாடுவதற்கு சம்பந்தமே இல்லையென சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு மாதிரியான குரல். ஆனால் அதில் அவர் வெளிப்படுத்திய ஜீவன் மிக்க உணர்வுகள்தான் அவ்வளவு தூரத்திற்கு ரசிக்க வைத்தது. அதன் பிறகு எவ்வளவோ முறை அவரைப் பாடச் செய்து கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் தான் பாடுவதை அவ்வளவு ரசித்து பாடக்கூடிய அவரின் சந்தோசம் சிலிர்ப்பானது. இசைக்கான இலக்கனமெல்லாம் தெரியாது எனக்கு, ஆனால் ரசிக்க முடியும். ரசிப்பதற்கும் வரையறை வைத்துள்ளவர்களைப் பற்றி எப்பொழுதுமே எனக்குக் கவலையில்லை.

இப்படி ஆங்காங்கே ரசித்த குரல்கள் நிறைய இருந்தாலும் எனக்கு பல வருட பரிட்சயம் தர்மா. சிலர் அவரைப் பைத்தியமென்று சொல்வார்கள். ஆனால் அற்புதமான ஓவியன். தெரு ஓவியங்கள் கடை விளம்பரங்கள் என ஏரியாவில் குறைந்த விலையில் முடிக்க வேண்டிய வேலைகளுக்கு இவரைத்தான் அனுகுவார்கள். சம்பளமென்று கொடுப்பதில்லை, எல்லாம் சரக்குதான். மனிதான் எவ்வளவு குடிக்கிறோம் என்றெல்லாம் கணக்கு வைத்டுக் கொள்வதில்லை, இஷ்டம்போல குடிப்பார். வேலையில்லாவிட்டால் கொஞ்சம் சிக்கல்தான், கலந்து வைத்த வர்ணங்களை எடுத்து தலையில் பூசிக் கொள்ளத் துவங்கிவிடுவார். எப்பொழுதுமே பல்வேறு வர்ணங்கள் கலந்ததாகவே இருக்கும், அவருடைய தலை. பெரும்பாலும் மஞ்சளும் அரக்கு நிறமும். குடித்து விட்டு தனியாக இருக்கும் பொழுதுகளில் இவர் பாடுகிற காதல் பாடல்களுக்கு அவ்வளவு ரசிகர்கள் இப்பொழுதும் ஏரியாவில் இருக்கிறார்கள்.

ஒரு இரவு தெருப் பையன்கள் கொஞ்சம்பேர் அவருக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து விட்டு சத்தமாக பாடச் சொல்லி வரிசையாக காதல் பாடல்கள்தான். நேரமும் இரண்டு மணியை நெருங்கி விட்டிருந்தது. புதிதாக வந்திருந்த லேடி எஸ் ஐ நள்ளிரவில் ரவுண்ட வந்தவர் என்ன சத்தமென இறங்கிவர, பயல்கள் அவ்வளவு பேரும் எஸ்கேப். ஆனால் மிகுந்த கடமை உணர்ச்சியோடு இவர் பாடிக் கொண்டிருக்க முதலில் அந்தம்மா இவரைப் பைத்தியம் என்று நினைத்திருகிறார். துரதிர்ஸ்டவசமாக கையில் புகைந்து கொண்டிருந்த கஞ்ச சிகரெட்டை உடனிருந்த போலீஸ்காரர் காட்டிக் கொடுத்துவிட, குண்டுக்கட்டாக அள்ளி வண்டியில் போடத் தயாரானார்கள். உனக்கேண்டா அந்த சிரமமென இவரே சென்றவர், அந்தம்மாவைப் பார்த்து பட்டு வண்ண ரோசாவாம்....என பாடத் துவங்கி விட்டார். ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த அவ்வளவு பேருக்கும் அடக்க மாட்டாத சிரிப்பு. சத்தமாக சிரித்தால் இவர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்பதால் யாரும் மூச்சுக் காட்டவில்லை.

மறுநாள் அதிகாலையில் விசயம் கேள்விப்பட்ட தெருப் பெரியவர்கள் கொஞ்சம்பேர் போய்க் கூட்டிவரச் சென்றிருக்கின்றனர். அந்தம்மாவிற்கு அவ்வளவு கோபம், அவர் கஞ்சா சிகரெட் குடித்ததை விடவும் என்னப் பாத்து எப்படி சார் அப்பிடிப் பாடலாம். ராத்திரி முழுக்க பாட்டு. என முந்தைய இரவு இம்சையை சொல்லியிருக்கிறார், இவர் ரொம்ப அப்பிரானியாக அப்பிடியாங்க நான் பாடினேன் என்று கேட்டிருக்கிறார். என்ன செய்வதெனத் தெரியவில்லை. இனிமேல் கண்ணிலேயே பார்க்கக் கூடாதெனத் திட்டி அனுப்பி வைத்து விட்டார்கள். அதன் பிறகு எப்பொழுது கேட்டாலும் உடனடியாக அவருடைய நினைவுதான் வரும். தெருவிலும் முந்தைய பெயர்களை மறந்து விட்டு பட்டு வண்ண ரோசா என்றுதான் எல்லோரும் கூப்பிடத் துவங்கினார். இங்கு நான் தெரு என்று குறிப்பிடுவது திருமங்கலம் நகருக்குள்ளிருக்கிற ஒரு கிராமத்தினை. எல்லா மொள்ளமாரித்தனங்களும் காவாளித்தனங்களும் சர்வ சாதாரணமாக நடக்கும். ஊரில் வந்து தெருவின் பெயரைச் சொன்னாலே உங்களை ஒரு மாதிரிதான் பார்ப்பார்கள். ஆனாலும் கொஞ்சம் பாசக்கார பயல்கள், உடன் தீவிரமான இதற்கும் மேல் வார்த்தைகளிருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள் சாதி வெறி பிடித்தவர்கள். அது மட்டும்தான் பிரச்சனை. பெரும்பான்மை ஒரு சாதி மட்டும்தான். அதனால் மற்றவர்களை{அதாவது மற்ற சாதிக் காரர்களை} சுத்தமாக மதிக்க மாட்டார்கள். எதற்கு இப்பொழுது தர்மாவைப் பற்றி சொல்ல வந்தது தர்மாவோடு போகட்டும்.

எங்கோ நீங்கள் கேட்கிற சிறியதொரு முனுமுனுப்புகூட சில சமயங்களில் அற்புதமானவையாய் இருக்கலாம். ஆனால் அதனை மற்றவற்றோடு ஒப்பிடாமல் ரசிப்பதில்தான் அவற்றைப் புரிந்து கொள்வதிருக்கிறது.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஒரு பொறுப்புள்ள மனிதனாக மாறுவதற்கான ஆகச்சிறந்த பயிர்சிகளை பொருப்புள்ள தந்தைமார்களும் இன்னும் பொறுப்புள்ள ஆசிரியப் பெருந்தகைகளும், கூடுதலாக பொறுப்புள்ள நண்பர்களும் இன்னும் பொறுப்பான எவ்வளவோ உரவுக்காரர்கள் சதாவும் நினைவுபடுத்தும் நல்ல மனிதனாக வாழ்தலை அல்லது ஒழுக்கமான வாழ்வைப் பற்றின தங்களின் தொடர் பாடங்களில் எப்பொழுதும் அவர்கள் மற்ந்துவிடுவதுண்டு ஒழுக்கமாக வாழ்தலில் இருக்கும் துயரையும் பொய்மையையும்.
உண்மையில் நான் எழுதவிழைந்த விசய்ம் இதில் எதுவும் சம்மந்தப்படாதது. நீங்கள் அருவருப்பு கொள்கிற சொல்ல பேசத் தயங்குகிற எல்லாவற்றிற்குள்ளும் இருக்கும் அடிப்படையான உண்மைகளையும் அழகையும் பல சமயங்களில் உங்களால் புரிந்து கொள்ளாமலேயே போவது துரதிர்ஸ்டவசமானது. இருப்பின் அர்த்தங்களை விருப்பங்கள் தவிர்த்து பார்ப்பதில் எல்லாவற்றையும் பொய்யாகவே பார்த்துப் பழக இச்சமூகம் உங்களைப் பழக்கியிருக்கிறது.
நான் உங்களையென சேர்ப்பதில் தவிர்க்கவே முஇட்யாமல் சில சமயங்களில் நானும் சேர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மெது மெதுவாக பாம்பு தன் தோலுரித்துக் கொள்வதைப்போல் நம்மால் ஒழுக்கம் போர்த்தியிருக்கும் சட்டையைப் பிரித்தெடுக்க முடிந்தால் எவ்வளவு இலகுவாக இருக்கும். சதாகாலமும் யாரோவொருவரால் கண்கானிக்கப் படுவதான உணர்வு கொஞ்சம் அச்சத்தையும் அருவருப்பையுமே தருகிறது.
கடுமையான வேலை நெருக்கடியிலும் படிக்க நேர்ந்த என் காதலன் செல்மா பிரியதர்ஸ்னின் தெய்வத்தை புசித்தல் தொகுப்பில் படிக்க நேர்ந்த சில கவிதைகளும், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் தொகுப்பில் படிக்க நேர்ந்த சில கவிதைகளும் பெரும் ஆசுவாசம் தருகின்ரன. தமிழச்சியின் வெயில் ருசி பற்றின கவிதைகளில் வீட்டில் திண்பண்டம் கேட்கும் குழந்தைக்கு சில்லுக்கருப்பட்டியில் வழியும் வெயிலை எப்படி ருசிக்கக் குடுப்பது என்கிற நான்கு வரிகள் எங்கள் பகுதி எழுத்தாளர்கள் அவ்வளவு பேருக்குள்ளும் ஓடியிருக்கும் வெயில் குறித்து தீவிரமாக யோசிக்க வைக்கிறது. சீக்கிரத்தில் இப்புத்தகம் குறித்து விரிவாக எழுத வேண்டும். செல்மா எனது காதலன் என்பதால் அவனுக்கு எழுதுவது காதலுக்கு விசுவாசமாக இருப்பதற்காக எழுதியதாகி விடும். ஆக..எப்பொழுதும்போல் அவனுக்கு ஆயிரம் முத்தங்கள்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இந்த காலகட்டத்தின் சகிக்கவியலாத இம்சைகளை ஒவ்வொரு முறையும் படைப்பாளிகள் மட்டுமே சந்திக்க வேண்டியுள்ளது. வெறும் நூறுபேர்களைத் தாண்டி வாசிக்காத தமிழின் சிற்றிதழ் எழுத்தாளனை பொழுதுபோகாமல் போகிற வருகிறவனெல்லாம் வம்பிக்கு இழுப்பதும் பதில் சண்டைக்கு நாம் வரிந்து கட்டி நிற்பதும் கொஞ்சம் சோர்வாகத்தான் இருக்கிறது.இவ்விசயத்தில் எழுதப்படுகிற விசயம் அதற்கு எழும் எதிர்ப்புகள் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். குப்பைக்குக்கூட ஆகாதவர்களுக்கெல்லாம் கேட்கிறார்களேவென பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது.
ஒரு விசயத்தை சொல்வதற்கும் அதை என்னமாதிரி சொல்வேன் என்பதும் எழுதுகிறவனின் தனிப்பட்ட உரிமை, உங்களுக்கு ஏதாவதொரு வகையில் தொந்தரவு செய்தால் நீங்கள் படிக்காமல் இருக்கலாம். நீங்கள் படித்து விமர்சிக்க அல்லது பாராட்ட வேண்டுமென எழுத்தாளன் எவனும் உருகித் தவம் கிடக்க வில்லை. சமூகத்தைப் புரட்டிப் போட வேண்டுமென்கிற கடப்பாடு படைப்பாளிக்கு இல்லை. இங்கு இருப்பதை பகடி செய்வதும் சுட்டிக் காட்டுவதும் முக்கியமே தவிர, ஒரே நாளில் புரட்சியை வெடிக்க வைத்துவிட முடியாது.
பொது சமூகத்தின் இயல்பான வெளியில் யாருக்கும் படைப்பாளிகள் என்ன செய்கிறார்கள் எனக் கவனிக்கவோ அல்லது விமர்சிக்கவோ எந்த அவகாசமும் இல்லை. அப்படியிருக்க அவ்வப்பொழுது இதுமாதிரியான சமாச்சாரங்களுக்கு நேரத்தை வீணடிப்பதைவிட ஏதாவது இலக்கிய சந்திப்புகளை நடத்தலாம்.

புதன், 7 ஏப்ரல், 2010

சாருவுக்கு

எனக்கு மிக விருப்பமான காமெடியர்களில் சாருவுக்கு எப்பொழுதுமே முக்கிய இடமுண்டு. தான் என்ன பேசுகிறோமோ அதற்கு எதிராக மட்டுமே செயல்படுவதும் எல்லாம் தெரிந்த அறிவுஜீவி தனமும் சேர்ந்து தன்னை எல்லோரும் வியப்பாகவே பார்ப்பதுபோல் இருக்கும் ஒரு ஆளை வேறு எப்படி சொல்வது. சினிமாவைப் பற்றி ஒரு சராசரி ரசிகனுக்கு இருக்கும் பிரக்ஞை கூட இல்லாமல் விமர்சனம் எழுதுவது நிச … Read More்சயமாக சாருவுக்கு மட்டுமே சாத்தியம்.சராசரி ரசிகனுக்கு எந்த claim மும் இருப்பதில்லை. நம்மாளுக்கு அப்படியா? நல்ல படம் என்றால் அதில் மூத்திரம் பெய்வதை காட்ட வேண்டும், அல்லது கள்ள உறவுகளை மட்டுமே முன்னிறுத்த வேண்டும், இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமானால் சைக்கோதனமான கதையாக இருக்க வேண்டும். சமீபகால நிபந்தனை என்றால் ஒன்றுதான். நித்யானந்தாவை நாயகனாகவும் ரஞ்சிதாவை நாயகியாகவும் போட வேண்டும். அப்படியிருந்தால் மட்டும்தான் அது நல்ல படம். நீண்ட நாட்களாகவே நாயகனாக மட்டுமே நடிப்பேனென சாரு சொல்லிக்கொண்டு திரிவதை நினைக்கையில் அவருக்கான படங்களை எடுப்பவர்களிடம் இன்னும் அனுகவில்லையோ என்று தோன்றியது. இப்பொழுது நித்யானந்தரின் வீடியோ பார்த்த பின் மிக விரைவிலேயே சாரு கதாநாயகனாக நடிக்கும் படம் வெளிவரும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. முப்பது வருடமாக சமரசம் செய்யாமல் எழுதுகிறேன் என்று சிரிக்காமல் உங்களால் மட்டும்தான் சொல்ல முடியும் போங்கள். அங்காடித் தெரு உங்களுக்கு பிடிக்காமல் போனதற்கு நீங்கள் சொல்லும் மேம்போக்கான காரணங்களை வெளியில் சொல்லிப் பாருங்கள் காறித் துப்பிவிடுவார்கள். தொடர்ந்து நீங்கள் எழுதும் கேவலமான சினிமா விமர்சனங்களை படிக்கிறவன் என்கிற முறையிலும் கொஞ்சம் சினிமா பார்க்கிறவன் என்கிற முறையிலும் ஒன்று கேட்கிறேன். சினிமாவைப் பற்றின அடிப்படை பிரிதல் உங்களிடம் என்னவாய் இருக்கிறது. நீங்கள் வரிசையாக கொண்டாடி எழுதிய படங்களின் விமர்சனங்களை நீங்களே ஒரு முறை திரும்பப் படித்து பாருங்கள், ஆங்காங்கே நீங்கள் அள்ளித் தெளித்த மேதைகளின் பெயர்களும் அவர்களின் படங்களையும் தவிர்த்து திரைக்கதையைப் பற்றின புரிதல்களோ தொழில்நுட்பம் குறித்த பிரக்ஞையோ எதுவும் இல்லாத குப்பைகளாகத்தான் இருக்கும். அங்காடித்தெருவில் இருக்கும் நியாயமான விசயங்களை மறைத்து நீங்கள் எழுதுவதில் உங்களின் பெரு முதலாளி விசுவாசம் தெரிகிறது. உங்களின் ஆஸ்தான புரவலரும் ஜவுளிக்கடை முதலாளியாய் இருப்பதில் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டுத்தான் ஆக வேண்டும், அதில் எந்த தவறும் இருக்கப் போவதில்லை சாரு. அதற்காக எழுத்திற்கு நேர்மையாக இருப்பதாக பச்சைபொய் சொல்லாதீர்கள். எழுத்தை நேசிக்கும் எவனும் உங்களை மன்னிக்க மாட்டான். நண்பர்களுக்கு ஒரேயொரு வேண்டுகோள்...யாராவது சினிமா ரசனை வகுப்பு எடுத்தால் தயவு செய்து சாருவை மாணவனாக சேர்த்துக் கொள்ளுங்கள்.