Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

சனி, 20 பிப்ரவரி, 2010

Download the original attachment
நிலாப்பார்த்து கழிந்த ஆற்றுமணல் இரவுகள் ......




வாழ்வின் எல்லா காலங்களிலும் தொடர்ந்து நம்மோடு வருகிறவை சில விசயங்கள் மட்டும்தான். ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக எவ்வளவோ விசயங்கள் இப்படியிருக்கிறதுதானெனினும் பால்யத்திலிருந்து எப்பொழுதும் எல்லோராலும் பிரித்து விட முடியாத விசயம் நிலா மட்டும்தான். எவ்வளவோ இடங்களில் எவ்வளவோ நாட்கள் வெவ்வேறான வடிவத்தில் நிலாவைப் பார்க்கையில் ஒவ்வொரு சமயமும் புதிதான தோற்றத்திலேயே தன்னை அது மாற்றிக் கொண்டிருப்பதாக படும். சில தினங்களுக்கு முன்பு நெரிசலான டிராஃபிக்கில் டூவீலரில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் மந்தமான நிறத்தில் முழுமைக்குக் கொஞ்ச்ம் குறைவாயிருந்த நிலாவைக் கவனித்து இரண்டு பேருமே சில நிமிடங்கள் எதையும் பேசிக்கொள்ளாமல் அதனைக் கவனித்துக் கொண்டிருந்தோம். ஒரு வகையில் இப்படி ஓவ்வொரு முறை அதனைக் கவனிக்கிற பொழுதும் சொல்லி மறந்த அல்லது சொல்லவேபடாத எவ்வளவோ கதைகளை உணர்த்துவதாகவே அது குறித்து நினைக்கத் தோன்றும். எல்லாக் கதைகளும் நிலாவிலிருக்கிற பாட்டிக்காகவே சொல்லப்படுகிறதென்றும் அவ்வளவும் அவள் சொல்லிவிட்டுப் போன கதைகள்தான் என்றும் நினைப்பது கொஞ்சம் முட்டாள்தனமானதாகத் தோன்றினாலும் சந்தோசமானதுதான்.

சில வேலைகளை அதிகமாக நான் விரும்பியிருந்ததற்குக் காரணம் அதிலிருந்த சுதந்திரமும் இஸ்டத்திற்கு ஊர் சுற்ற முடிந்ததும்தான். எல்லா சமயங்களிலும் எந்தக் கட்டுப்பாடுகளையும் வைத்துக் கொள்ளாமல் சுற்றுவதைத்தான் எப்பொழுதுமே விரும்புகிறவனாக இருக்கிறேன். இப்படி கட்டுப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகையில் தானாகவே அடுத்த வேலையை நோக்கி நகர்ந்து விடுவேன். வாழ்தலென்பது பெரும் பொருளாதாரம் சார்ந்ததொன்று என்பதைவிட எளிமையான சந்தோசங்களில் மட்டும்தான் அர்த்தப்படுகிறதென்பதில் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டவன் நான்.

நீங்கள் உங்கள் பயணங்களில் அதிகமாக திட்டுகிறவர்களில் முக்கியமானவர்களாய் எப்பொழுதும் மணல் அள்ளுகிற லாரிக்காரர்கள் இருப்பார்கள். எதற்காக இவ்வளவு வேகம் என்பதுதான் உங்களின் கோபமாக இருக்கும், உண்மையில் அந்த வேகத்தில்தான் அவர்களின் அன்றாடம் தீர்மானிக்கப்படுகிறது. லாரிக்காரர்களைப் பற்றி பொதுவிலிருக்கும் பேச்சுக்கள் எப்பொழுதுமே குடிகாரர்களாகவும் ஸ்த்ரீ லோலர்களாகவும் அவர்களை நினைக்க செய்வதைத் தவிர்த்து வேறு எதுவுமிருக்காது. இதில் சிறிதளவு உண்மையிருந்தாலும் அவர்களிடமிருக்கும் நல்ல விசயங்களுக்கு மத்தியில் இதுவெல்லாம் பொருட்டல்ல. நிலாவையும் லாரிக்காரர்களையும் ஒரே நேரத்தில் பேசுவதில் காரணமில்லாமலில்லை. ஏனெனில் நிலாவைப் போலவே எனக்கு அதிகம் நெருக்கமானவர்கள் லாரிக்காரர்கள்தான். பயணங்களுக்கான எவ்வளவோ தருணங்களில் பணமே இல்லாதிருந்தாலும் யோசிக்காமல் ஏதாவது வண்டிகளை மறைத்து சுற்றிக் கொண்டிருப்பேன். இப்பொழுது வரை அதில் கொஞ்சம் சுவாரஸ்யமும் சந்தோசமும் இருக்கவே செய்கிறது. இப்படி நிறைய பேரோடு பழகியிருப்பதோடு ஒரு வருடத்திற்கும் அதிகமாக மணல் அள்ளுகிற லாரிகள் வைத்திருந்த ஒரு சிறிய டிரான்ஸ்போர்ட்டில் சூப்பர்வைசராக இருந்ததால் அவர்களின் மீது தனிப்பட்ட அன்பும் உரிமையும் எனக்கிருக்கிறது.

வழிமறிக்கும் போலிஸ்க்காரர்களுக்கான மாமூல், குறிப்பிட்ட நேரத்திற்குள் மணலை இறக்கிவிட்டு பக்கத்தில் எங்காவது ஜல்லி ஏற்றவேண்டிய அவசரம், ஆர்.டி.ஓக்களின் பிரச்சனையன எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அதைப்பற்றியான பதற்றமே இல்லாமல் வேலை பார்க்கிறவர்களுக்கு ஆற்றில்தான் எல்லா சந்தோசமும். மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரையுள்ள நான்கு மணல் குவாரிகளிலும் லாரிகள் அணிவகுத்து நிற்பதைப் பார்க்கையில் இவ்வளவு மணலும் எங்கு போகிறது என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கும். இவ்வளவுதான் ஒரு வண்டிக்கு அள்ளவேண்டும் என்கிற கட்டுப்பாடுகளை எல்லாம் பார்த்தால் வண்டிக்காரர்களுக்கு முதலுக்கு மோசமாகிவிடும் என்பதால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் கொஞ்சம் கூடுதலாக மணலை எடுப்பதற்கான எல்லா மேல்வேலைகளுக்கும் ஓட்டுநர்களை பழக்கி வைத்திருப்பார்கள். இதனாலேயே ஓட்டுநர்களுக்கும் பொக்லைன் ஆப்ரேட்டர்களுக்கும் ஒரு நல்ல புரிதலும் உறவும் எப்பொழுதும் இருக்கும். இதில் வழக்கமாக ஒரே இடத்திற்கு வருகிறவர்கள், நிறைய வண்டிகள் வைத்திருக்கிற கம்பெனியென்றால் டிரைவர்களுக்கும் சூப்பர்வைசர்களுக்கும் நல்ல மரியாதை இருக்கும். இந்த மரியாதை என்பது ஒன்றாக சேர்ந்து குடிப்பதில் துவங்கி, ஆத்தோர கிராமங்களில் இருந்து இரவுகளில் வந்துபோகும் பெண்களைப் பகிர்ந்து கொள்வது வரை சகஜமாக இருக்கும்.

நல்ல மணல் எடுக்க வேண்டுமா மதுரையைப் பொறுத்தவரை கமுதக்குடிதான் வாடிக்கையாளர்களின் விருப்பமாயிருக்கும், ஆனால் ஓட்டுநர்களுக்கு ஆகாத இடமென்பதால் பலரும் அதைப் புறக்கணிப்பார்கள். முதல் காரணம், விலை அதிகம் இரண்டாவது இணக்கமாக இருக்க மாட்டார்கள். இதனாலேயே தூதை குவாரிக்கும் பாண்டியூர் குவாரிக்கும் நிறையபேர் செல்வார்கள். அதிலும் மழையில் ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் வழியே இல்லாமல் பாண்டியூர்தான் அவ்வளவு பேரும் வரவேண்டும். இதுமாதிரியான சமயங்களில் மூன்று நாட்கள்கூட ஆகும் மணல் கிடைப்பதற்கு. அவ்வளவு வண்டிகள் ஓரிடத்திலிருந்தால் கேட்கவா வேண்டும். கும்மாளமும் குத்தாட்டமுமாய் திரிவார்கள். நானும் ராமநாதபுரமே கதியென கிடப்பதால் பாண்டியூர்தான் விருப்பமான இடம். வசூல் வேலைகளுக்காக சிவகாசி, கரூர், மதுரையென வெவ்வேறு ஊர்களுக்கு சுற்ற வேண்டியிருந்தாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக முடித்துவிட்டு திரும்பிவிடுவேன். மிக முக்கியமான காரணம், பாண்டியன் என்கிற நண்பர், அடுத்து ராமேஸ்வரத்திற்கும் தணுஷ்கோடிக்கும் சுற்றுவது கடைசியாக பாண்டியூரிலிருந்த திலகா. திலகா தொழிலுக்கு வந்துபோகும் பெண். அதிகம் போனால் முப்பது வயதிருக்கும். நிறையபேருக்கு விருப்பமானவளாக இருந்தாள். எனக்கு சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்கான மாத்ருபூதம். என்ன சந்தேகமெனக் கேட்டால்? விடுங்கப்பா...

ராமாநாதபுரத்தின் அத்தனை வீதிகளிலும் இரவுகளில் சுற்றித் திரிவதும் எங்காவது வம்பிழுத்து சண்டை போடுவதும்தான் அந்நாட்களில் எங்களின் பிரதான பொழுதுபோக்கு. எங்கள் கம்பனி ஓட்டுநர்களோடு பழக்கத்திலிருக்கும் உள்ளூர் லாரி ஓட்டுநர்களும் பின்பாக சேர்ந்து கொண்டனர். குடிப்பதிலும் பென்களைப் பற்றிப் பேஎசுவதிலும் இருந்த நட்பு ஆற்றில் மணல் அள்ளுவதில் பிரச்சனை வராமல் இருந்து கொள்வதற்கும், சப்போர்ட்டாகவும் இருந்தது. மற்ற கம்பெனிகளுக்கெல்லாம் இன்சார்ஜ்ஜாக வருகிறவர்கள் குறைந்தது முப்பது வயது முப்பத்தைந்து வயது ஆட்களாகத்தான் இருப்பார்கள். நான் மட்டும்தான் விதிவிலக்கு. மொத்தமாக நாற்பது கிலோவைத் தாண்டாத உடல், டூவீலரும் ஓட்டத்தெரியாது என்பதால் ஆற்றுக்குள் வண்டியைப் பார்க்க வரவேண்டுமென்றால் பஸ்விட்டு இறங்கி நடந்து வரவேண்டும். பகல் நேரங்களில் மூளை முழுவதுமாக உருகி மூக்கு வழியாய் வந்துவிடும் அளவிற்கு இருக்கும் வெயில். கொஞ்சம் உள்ளூர் ஆட்களின் ஆதரவு இருந்ததுடன் முக்கால்வாசி நேரம் ஆற்றிலேயே கிடப்பதால் பெரும்பாலனவர்களையும் நன்கு தெரிந்து கொண்டவனாய் இருந்தேன். இதில் ஒரே சிக்கல் சில சமயங்களில் குடிப்பதற்கு பணமில்லாமல் போனால் அலுவலக பணத்தில் எடுத்துவிட்டு பிறகு சமாளிக்க பாண்டியனை நாடவேண்டும்.

ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருந்த நாட்கள். நிறைய வண்டிகள் மணல் அள்ள ஆற்றுக்கு வருவதில்லை. மணல் குவாரியும் ஒன்று மட்டும்தான் என்பதால் அரிபரியில் மாட்டிக் கொள்ள வேண்டாமென நினைத்திருப்பார்கள். ஒரு புறம் புனுபுனுவென மழை பெய்தாலும் அதோடு சேர்த்து லோடு ஏற்றுவதும் நடந்து கொண்டேதான் இருந்தது. எங்கள் வண்டிகள் இரண்டை வரிசையில் போட்டு இரண்டாவது நாள் இரவு, அப்பொழுதும் ஜே சி பி வண்டியை நெருங்குவதற்கு வழியில்லை. நான் போய்ப் பார்ப்பதும் மழை காரணமாய் ஆத்துக்குள் தங்க முடியாமல் ராமநாதபுரத்திற்கு ஓடிவந்து விடுவதுமாய் இருந்தேன். அன்றைய தினம் டிரைவர்கள் என்னவானாலும் குடிக்க வேண்டுமென அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். தூரல் நின்றபாடில்லை. பாண்டியூர் ஊருக்குள் சென்று சரக்குகள் இறைச்சியென அவ்வளவையும் வாங்கி வந்து விட்டார்கள். அந்தத் தூரலிலும் தார்ப்போய் போர்த்திய வண்டிகளை அண்டி தொழிலுக்கு பெண்கள் வந்து விட்டிருந்தனர். அப்பொழுது கொஞ்சமாக குடித்தாலே தடுமாறக்கூடியவன் அன்று கொஞ்சம் அதிகமாகவே குடித்து விட்டிருந்தேன். நல்ல போதையில் முதலில் நினைவிற்கு வந்தது திலகாதான். யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் மலங்கழிக்கப் போகிறவனைப்போல் இறங்கி ஊருக்குள் புகுந்து போய்விட்டேன். அதற்கு முன்பு வரையிலும் அந்த பகுதியில் பெண்களுடன் போனதில்லை என்பதால் டிரைவர்கள் அதைப் பற்றி நினைக்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அவர்கள் யாரிடமும் நான் சொன்னதில்லை. எவ்வளவு தேடியும் திலகாவைப் பிடிக்க முடியாமல் வெறுப்போடு மீண்டும் ஆற்றுக்குள் வந்து கொண்டிருந்தேன், வண்டி கொஞ்சம் முன்னால் நகர்ந்து போயிருந்தது. நான் அதற்கு எதிர்த் திசையில் நடந்து கொஞ்ச தூரம் போனால் யாரோவொரு ஆளிடம் நம்மால் பேரம் பேசிக்கொண்டிருந்தது. பக்கத்தில் போய் கேவலமாக ஒரு சிரிப்போடு நின்றேன். என்ன ராசா ?’ என சந்தேகம் வந்திருப்பேனென்று நினைத்த கேட்டவளை தனியாகக் கூப்பிட அதற்கு ஆச்சர்யம். இன்னொரு புறம் நான் கூப்பிடவும் சிரிப்பு தாங்கவில்லை. அதான உன்னைய என்னவோன்னு நெனச்சேன் பரவாயில்ல. எனச்சொல்லிவிட்டு இரண்டு பேரும் எங்கள் வண்டிக்கு நடந்தோம். எங்கள் ஆட்களுக்கு தெரியக்கூடாதென அந்தப் போதையிலும் பிடிவாதமாய் இருக்க வேறு வழியே இல்லாமல் மீண்டும் ஊருக்குள் சென்றோம். திலகாவின் வீடுதான் இறுதியாக அமைந்தது. அதற்கு முன்பு தொழிலுக்குப் போகும் பெண்கள் எவ்வளவோ பேருடன் பழகியிருந்தாலும் முதல்முறையாகப் புணர்ந்த விலைமாது திலகாதான்.

இரண்டு நாட்கள்கூட போயிருக்கவில்லை எங்கள் ஆட்கள் அவ்வளவு பேருக்கும் விசயம் தெரிந்து போய் பாடாய்படுத்தி விட்டார்கள். அதன்பிறகு ஆற்றுக்குள் நல்லபையன் வேஷத்திற்கெல்லாம் இடமில்லை. தொடர்ந்து பாண்டியூர் மணல் குவாரிக்கு வண்டிகளை அனுப்புவதில் கடுப்பாகிப்போன முதலாளியுமேகூட, மதுரைக்குப் பக்கத்தில டெலிவரின்னா தூதையிலயே எடுக்க வேண்டிதானடா? என்பார். சாதாரணமாக பார்ட்டிகள் இதைத்தான் கேட்கிறார்களெனச் சொல்லித் தப்பித்துவிடுவேன். அந்தளவிற்கு அந்த குவாரியை விரும்பியதற்கு திலகா மட்டும் காரணமில்லை. இரவில் அந்த குவாரியினைச் சுற்றின ஒவ்வொரு விசயங்களும் அவ்வளவு அழகு, கருவேலங்காடுகளும், ஆறும் கலந்து பிணைந்து ஓடும் ஆற்றுநீரில் கடலுக்குப் போவதிலிருக்கிற குதூகலமோ, பரபரப்போ எதுவும் இருக்காது. அவ்வளவு அமைதியாக நகரும் நீரில் சிதறலாய்க் கிடக்கும் நிலாவைப் பார்க்கையில் பொறுக்கியெடுத்தால் அந்த இரவிற்கு என்றில்லாமல் எல்லா இரவுகளுக்குமாய் மனதில் கிடக்கும். இப்படி நான் அள்ளிச் சேகரித்த எவ்வளவோ நிலாக்கள் இன்னும் பத்திரமாய் இருப்பதினால்தான் சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்தும்கூட ஆறும் ஆற்றுப்பகுதி மனிதர்களும் வாசனை மாறாமல் என்னுடன் இருப்பதை உணரமுடிகிறது. சேகரித்து வைத்திருக்கும் அவ்வளவு நிலவுத் துண்டுகளிலிருந்தும் தேவைப்படுகையில் எடுத்துக் கொண்டே இருக்கிறேன் கதைகளை சொல்வதற்காக. என் கதைகள் பார்த்ததில் பாதியும் சொன்னதில் பாதியும் அந்த மனிதர்களைப் பற்றிதான். என்னைப் பொறுத்த வரையில் அது ஆறு மட்டுமேயல்ல, சிதறிக்கிடக்கும் அவ்வாற்றின் நிலவுத் துண்டுகள் வெறும் நிலவுத் துண்டங்கள் மட்டுமல்ல.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக