Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

புதன், 17 பிப்ரவரி, 2010



தாய்மை

தொடர்ந்து பேசுவது எழுதுவது என பல விசயங்களுக்குப் பின்னால் பெண்களைப் பற்றியதான பிம்பங்களே தொடர்கின்றன. எவ்வளவோ விசயங்கள் நம்மிலிருந்து மாறிக்கொண்டிருந்தாலும் கதைகளில் இப்பொழுதும் தேவதைக் கதைகள்தான் மிகுதியாய் சொல்லப்படுகின்றன. ஆண்களுக்கான அழகு பொருட்களைவிடவும் பெண்களுக்கான அழகுப் பொருட்கள்தான் அதிகம். வர்த்தகம் அல்லது வியாபாரம் என்பதையும் மீறினதொரு விசயம், நாம் பெண்களை ரசிக்கிறோம். ஆனால் கொண்டாடுகிறமா என்றால் என்னிடமும் பதிலில்லை. நல்லது. ஏன் பெண்கள் ஆச்சர்யமானவர்களாக இருக்கிறார்கள், அல்லது எது பெண்களைப் பற்றி உயர்வாய் நினைக்கிறது. எவ்வளவோ பெண்களை ரசிப்பதற்கும் அல்லது காதலிப்பதற்கும் அழகு சார்ந்த விசயங்கள் மட்டுமே காரணமாயிருப்பதில்லை ஆண்களுக்கு. அதனைத் தாண்டிய ஒரு விசயம் தாய்மையில் உணரமுடிகிற அரவணைப்பும் அன்பும்தான். ரோஸி ஆண்ட்டியைப் பற்றி நண்பர்கள் பலருக்கும் சொல்லியிருப்பேன். பால்யத்தில் நான் கேட்ட எல்லா தேவதைக் கதைகளையும் சொன்னவள்தான். என் கதைகளில் வந்த எல்லா தேவதைகளும் அவள்தான். அனாதை விடுதி என்று அதனை சொல்லக் கூடாது. சில்ரன்ஸ் வில்லேஜ் இப்படித்தான் இன்றளவும் அந்த இடத்திற்குப் பெயர். காட்டுக்குள் பணிரெண்டு வீடுகள், ஒவ்வொரு வீட்டிற்கும் பத்துப் பதினைந்து குழந்தைகள், அவர்களைப் பாதுகாக்க ஒரு அம்மா. நானிருந்தது ரோஸி ஆண்ட்டியின் அரவணைப்பில். ஆண்ட்டியைத் தவிர்த்து மற்ற எல்லோரையும் அம்மா என்றுதான் கூப்பிடுவோம், வாழ்வில் முதலும் கடைசியுமாக ஆண்ட்டி என்று நான் கூப்பிடுவது அவளை மட்டும்தான். அம்மாவிற்கும் மேலாக எல்லாவற்றிற்கும் மேலாக என்மீது அன்பு கொண்டிருப்பவர்கள் யாரெனக் கேட்டால் யோசிக்காமல் அவளின் பெயரைத்தான் சொல்வேன்.


முதலில் இதுமாதிரியான வெளிநாட்டு நிதியுடன் இயங்கும் விடுதிகளைப் பற்றி சொல்ல வேண்டும். நான் இருந்த விடுதியின் கிளைகளே தமிழ்நாட்டில் மட்டும் எட்டு உண்டு. மற்றவற்றைப் பற்றின புள்ளி விவரங்கள் தெரியாது. ஆனால் எதற்காக இவ்வளவையும் வெள்ளைக்காரர்கள் செய்கிறார்கள்?...பத்து வரிக்குள் பதில் கண்டு பிடிப்பவர்கள் தொலை பேசியிலோ அல்லது ஈ மெயிலிலோ அனுப்பி வைக்கலாம். ஆனால் இப்படி வருகிற குழந்தைகளின் மீது அவர்கள் கொள்ளும் அன்பும் காதலும் வெறுமனே சொல்லிவிட முடியாதது. இன்னும்கூட அந்த நாட்கள் நினைவிலிருக்கின்றன.


எப்பொழுதும் ஏதாவதொன்று குறுக்கே வந்து தொந்தரவு செய்து கொண்டுதான் இருக்கிறது. ரோஸி ஆண்ட்டி. எதனால் அவளை தேவதைகளாக பார்க்க முடிந்தது. உடல் முழுக்க அம்மை போட்டுக் கிடந்த நேரம். பொதுவாக அம்மை போட்டால் மருத்துவ மனைக்கோ அல்லது சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கோ அனுப்பி வைப்பார்கள். நான் மட்டும் விதி விலக்கு. என்ன ஆனாலும் நானேபார்த்துக் கொள்கிறெனென எங்கும் அனுப்பாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டாள். தன் குழந்தையான சோஃபியா வைலட் பற்றி சொல்லத் துவங்கினாள் என்றாள் பிறகு பொழுது போவது தெரியாது, வலியும் தெரியாது. என் சமவயதுக் காரியான அவள் வளர்ந்த பிறகு எனக்கே கட்டிக் கொடுப்பதாகவும் இரண்டு பேரையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் மாறி மாறி அவளும் பேசிக்கொண்ட குடும்ப விசயங்கள் பாதி நினைவிலும் பாதி இல்லாமலும் இருக்கின்றன. ஏன் என்னை மட்டும் அவளுக்குப் பிடித்துப் போனது?. சாதாரணமாக புதிதாக வருகிற குழந்தைகள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவார்களென்றால் முதல்நாளே நான் அம்மாவிற்கு டாடா சொல்லி அனுப்பி வைத்திருக்கிறேன். அதிகமில்லை ஜெண்டில்மேன், உமன் அப்பொழுது எனக்கு ஐந்து வயதுதான். இது பிற்பாடு அம்மா சொல்லித்தான் எனக்கும் தெரியும்.


வருடம் வருடம் குழந்தைகள் விழா நடக்கும், விளையாட்டுப் போட்டிகள் பாட்டுப் போட்டி என்று அதுவொரு திருவிழா...அந்த வருடம் என் வயது ஆட்களோடு நான் கலந்து கொண்ட எல்லா போட்டியிலும் நான்.................... கடைசி ஆள். கலந்து கொள்ளாமல் இருக்கலாமென்றால் ஆசை யாரை விட்டது?...அழுகையென்றால் அப்படியொரு அழுகை....அன்று முழுக்க என்னை சுமந்து கொண்டே இருந்தவள் பலமுறை அதைச் சொல்லி சிரித்திருக்கிறாள். சாப்பிடுவதற்கு முன், பிரேயரும், தூங்குவதற்கு முன்பாக ஸ்தோத்திரப் பாடல்களும் நான் விடுதியை விட்டு வந்த பிறகும் கூட பல நாள் பழக்கமாக இருந்தது. அவ்வளவு மவள் சொல்லிக் கொடுத்தவை. விடுமுறை தினங்களில் வீட்டிற்கு அனுப்புவதுகூட அவளே வந்து வீட்டில் விட்டால்தான் மனசாரும். வீடும் ஐந்தாறு கிலோமீட்டர்களுக்குள்தான் என்பதால் பெரிய பயண தூரமில்லை. இப்படி அவளோடு கழிந்த தினங்கள் எப்பொழுதும் வசந்தமானவை. எங்கிருக்கிறாலென தெரியவில்லை. விடுதியிலிருந்து வந்த சில வருடங்களிலேயே அதையெல்லாம் மறந்தும் விட்டிருந்தேன். ஆனால் ஒரு வயதிற்குமேல் எல்லோரிடமிருந்தும் தனிமைப் பட்டு மொழியே தெரியாத குளிர் மிகுந்த ஓரிடத்தில் யாரென்றே தெரியாத ஒரு நண்பனுடன் பயணம் செய்கையில் தற்செய்லாக உடன் பயணம் செய்யும் பெண்ணின் பெயரைக் கேட்டு அவளை நினைவு படுத்தி கொள்ள முடிந்தது. சோஃபியா வைலட். இந்த பெயரைக் கேட்டு எப்படி சும்மா இருந்திருக்க முடியும்?... இதில் சுவாரஸ்யமான விசயம் நண்பர்களே ரோஸி ஆண்ட்டிக்கு திருமணமே ஆகியிருக்கவில்லை...இதுவும் கூட விடுதியை விட்டு வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் எனக்குத் தெரிய வந்திருந்தது. ஆனால் இப்பொழுதும் யாராவது இந்த பெயரை உச்சரித்தால் சில நொடிகளாவது அந்த முகத்தை பார்க்கத் தோன்றும்.

இதற்குப் பின்பாக நான் ஆச்சர்யப்பட்டது. ஒரு பெண்ணால் அல்ல. சில பெண்களால். அக்கா இல்லையென்கிற வருத்தம் எனக்கு எப்பொழுதும் உண்டு.

வீட்டிற்கு ஒரு பிள்ளையாய் பிறப்பதை அதிர்ஸ்டம் என்று சொன்னால் அவர்களுக்காக அனுதாபப்படுவேன். உண்மையில் அப்படியிருப்பது சாபம் நண்பர்களே...உங்களின் சந்தோசங்களை அந்தரங்கத்தினை பகிர்ந்து கொள்ள உங்களோடே ஒரு உயிர் இருப்பதுதான் வரம்,இல்லாத பட்சத்தில் அதற்காக நீங்கள் கொள்ளும் வருத்தம் வேறு உறவுகளால் தீர்த்து வைத்திட முடியாத வொன்று. மிகச் சிறிய வயதிலிருந்தே இந்த வருத்தம் எனக்குண்டு. ஆறாம் வகுப்பு படிக்கையில் இருந்தே பகுதி நேர வேலைகள் பார்க்கத் துவங்கி விட்டேன். பள்ளி முடிந்து வந்ததும், பக்கத்திலிருந்த மெஸ்சில் வேலை.. கடைக்குப் போவது, உணவுகளை எடுத்துக் கொண்டு வழக்கமாக சாப்பிட வருகிற ஹோமியோபதி மாணவிகளுக்கு எடுத்துப் போவது, இதுதான் வேலை. இப்படி நான் சாப்பாடு எடுத்துப் போன மாணவிகள் தான், அக்காவே இல்லாதவனுக்கு அக்காக்களாய் இருந்தவர்கள். ஒரே அறை என்று இல்லாமல் நான்கைந்து அறைகளாக இருப்பார்கள், ஆனால் யாரிடமும் அன்புக்குக் குறையிருக்காது.


சில விசயங்களை எவ்வலவு எழுதினாலும் தீராதுதான் சில விசயங்களை எழுதிவிடுவதை விடவும் பாதுகாத்து வைத்துக் கொள்வதில் பெரிய சந்தோசம் இருக்கவே செய்யும் என்றாலும் இதில் நான் குறிப்பிடக் காரணம். ஒரு சுயநலம்தான். கவனிக்க, திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரியில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் படித்திருந்தால்{பத்து வருடங்களுக்கு முன்பு..} அவர்களிடம் தயவு செய்து இதனை சொல்லி நினைவிருக்கிறதாவெனக் கேளுங்கள். அத்தனை பேரிலும் யாராவது ஒருவரையாவது சந்த்தித்துவிட்டால் போதும் அதைவிட பெரிய சந்தோசம் வேறொன்றுமில்லை.


ஒரேயடியாக செண்டிமெண்டையும் எழுதுகிறேன் என்று கோபப்பட வேண்டாம், எல்லாம் சேர்ந்ததுதானே மனித இயல்பு....அடுத்ததாக எப்பொழுது நினைத்தாலும் சில நிமிடங்கள் என்னை மெளனமாக்கிவிடுகிற விசயம்.......... தொடர்ந்து எந்த வேலைக்குப் போனாலும் இரவு வேலைக்குத்தான் போவேன். போய்விட்டு வந்து பகலில்தான் தூங்குவது, எங்கள் தெரு அடக்கமான தெரு என்பதால் சாலையில் யார் நடந்தாலும் உடனடியாக வீட்டிற்குள்ளிருந்தே தெரிந்து கொள்ள முடியும். பகல் நேரங்களில் உப்பு விற்பதற்கு, கீரை விற்பதற்கென ஆட்கள் வந்து போய்க் கொண்டே இருப்பார்கள். அப்படி வருகிறவர்களில் பக்கத்து ஊரிலிருந்து முறுக்கு சீடை விற்க வருகிற ஒரு பெண். பெயர் வசந்தா என்று நினைக்கிறேன். கருப்பழகி. எல்லோருடனும் ரொம்ப நெருக்கமாகப் பழகக்கூடியவள். பொதுவாக இதுமாதிரியான வியாபாரத்தில் பணம் கொடுப்பது மொத்தமாக கொடுக்கிறேன் பேர்வழி என்று எப்பொழுதும் கொஞ்சம் தொகையினை நிறுத்தி வைத்திருப்பர்கள். எங்கள் தெருவில் அவளிடம் கடன் வைக்காதவர்கள் பாவம் செய்தவர்கள்.


இப்படி தினந்தோறும் வருகிறவளின் மீது தனிப்பட்ட கவனிப்பு எனக்கு எப்போதும் உண்டு. ஒரு முற்பகலில் அப்பொழுதுதான் நான் படுத்திருந்தேன், வழக்கம்போல வியாபாரத்திற்கு வந்திருந்தவள் வீட்டிற்குள் சாதாரணமாக வந்துவிட, பல நாட்களாய் காத்திருந்தவனைப் போல பிடித்து அணைத்துக் கொண்டு முத்தமிடத் துவங்கிவிட்டேன். சில நிமிடங்கள்தான், விடு தம்பி விடு தம்பி என புரட்டித் தள்ளிவிட்டு வெளியேறிப் போய்விட்டாள். எனக்கு அது பற்றியான குற்றவுணர்சியோ அல்லது பயமோ எதுவும் இருந்திருக்கவில்லை. அவளும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போகத் துவங்கியிருந்தது. அப்பொழுதும் கூட அவளைப் பார்க்க முடியவில்லை என்றுதான் வருத்தமாக இருந்தது. என்னடாவென நீங்கள் என்னைப் பற்றி நினைக்கலாம் நண்பர்களே? இதெல்லாம் வெறும் சாம்பிள்தான், முழுதாகச் சொன்னால் காறித்துப்பி விடுவீர்கள். சில நாட்களுக்குப் பின்பாக அவளுக்கு அவளின் அப்பா வரத் துவங்கினார். மெதுவாக அந்த சம்பவத்தையும், அவளையும் மறந்து போய்விட்டிருந்தேன். ஒருநாள் காலையில் சினிமாவிற்குப் போகிற அவசரத்தில் மதுரைக்குப் போகிற பேருந்தப் பிடிக்கிற அவசரத்தில் பெருந்து நிலையத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தேன். சடாரென கையைப் பிடித்து நிறுத்திய பெண்ணை பார்த்ததும் கொஞ்சம் பதட்டமாகி விட்டது. அவளேதான். என்ன பேசுவதெனத் தெரியவில்லை, அல்லது அவள் என்ன கேட்கப் போகிறாள் என்பதும் தெரியவில்லை. எதுக்கு இவ்ளோ அவசரம்? என்றவள் வா டீ சாப்பிடலாம் என்றாள். எனக்கு முன்பை விட குழப்பமும் பத்ட்டமும் அதிகமாகி விட்டது. தயங்கியபடியே நின்றேன். அட வாப்பா....என இழுத்துக் கொண்டு சென்றவள். எப்பொழுதும் போல் வீட்டைப் பற்றி தெருக்காரர்களைப் பற்றி விசாரிக்கத் துவங்கிவிட்டாள். எல்லாவற்றிற்கும் ஒற்றை வரியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். எனது தயக்கத்தைப் புரிந்து கொண்டவளாய், “இன்னுமா அதையே நெனச்சிட்டிருக்க. நல்ல பய போ. நான் அத எப்போவ மறந்துட்டேன்.” என்று சொல்ல முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பது என்று தெரியவில்லை எனக்கு. தண்டிப்பதை விடவும் மன்னிக்கப்படுவது பெரும் வேதனை நண்பர்களே. ரொம்ப நாட்களுக்கு அதனை மறக்க செய்துவிடாமல் துன்புறுத்தும். அப்படித்தான் இதுவும்.

ஏற்கனவே நிறைய சொல்லியாகி விட்டது, இனியென்ன?...இப்படிச் சொல்வதற்கென எல்லோருக்குமே ஏதோ சில விசயங்கள் இருக்கத்தான் செய்யும். அதனால் மிச்ச பக்கத்தினை அவரவர் நினைவுகளால் நிரப்பிக் கொள்ளுங்கள்.....

1 கருத்து:

  1. முழுவதும் படிக்கவில்லை. படித்துவிட்டு எழுதுகிறேன் தம்பி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு