Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

புதன், 15 டிசம்பர், 2010

சமூக கலை இலக்கிய இதழ்



முட்டையிடும் குதிரைகளின் நகரம்...

லக்ஷ்மி சரவணக்குமார்


முகப்பு




குதிரைகளைப் பற்றின கதைகளை அவளுக்கு சொல்லத்துவங்கிய தினத்திலிருந்துதான் அவற்றின் மீதான பிரத்யேகமானதொரு ஆர்வம் இவனுக்குள்ளும் வளரத் துவங்கியிருந்தது. ஓரளவு நடை பழகத்துவங்கியிருந்த நிவேதிதா யார் மூலமாய்த் தெரிந்து கொண்டாளெனத் தெரியவில்லை, பார்த்த மாத்திரத்தில் அதன் தோற்றத்தில் வசீகரிக்கப்பட்டவள் பெயரைக் கேட்டுத்தெரிந்து கொண்டு தான் உச்சரிக்கத் துவங்கியிருந்த ஒருசில வார்த்தைகளோடு குதிரையென அதனையும் சேர்த்துக் கொண்டுவிட்டாள். சிறியதொரு பூவாய் இவளைக் கொஞ்சும் அப்பாவிற்கு சிறுவயதில் குதிரைகளுடனான பரிச்சயமென ஏதுமிருந்திருக்கவில்லை. கதைகளின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டிருந்தான்.


வீட்டிலேயே கூரை வேயப்பட்டதொரு சிறிய கடை வைத்திருந்த இவனுக்கு புற உலகத்துடனான தொடர்புகள் துரதிர்ஷ்டவசமாய் சில கிலோ மீட்டர்களுக்குள்ளேயே இருக்கும்படி குறுகிப் போயிருந்தது. எதன் பொருட்டும் ஏமாந்துவிடக்கூடாதென்கிற தீவிரமான தீர்மானத்தின் காரணமாகவே பல சமயங்களில் ஏமாறக்கூடியவனாகவும் யாரிடமும் கோபப்பட முடியாத அளவிற்கு பயந்த சுபாவமுடையவனாகவும் இருந்தான். உருக்குலைந்துபோன பழைய சைக்கிளொன்றில் கடைக்குத்தேவையான பொருட்களை வாங்குவதற்கென நகருக்குச் செல்பவனிடம் வாங்க வேண்டிய பொருட்கள் குறித்தும் அவற்றின் விலை குறித்தும் எபொழுதும் கணக்கு ஓடியபடியே இருக்கும். அப்படியுமேகூட சில பொருட்களைத் தவறவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தனித்துச் சொல்ல முடியாத நிறத்தில் சிதைந்த சைக்கிளின் தூரமான சாயலில் முதிய குதிரையொன்றினை நினைவுபடுத்திக் கொள்ள முடியும்.


கடல் நுனியில் பெருநாற்றங்கலந்த கருப்பு வர்ண நதி சங்கமிக்கும் இவர்களின் வீடிருக்கிற பகுதியில் ஆடு மாடுகளே அரிதாகிவிட்டிருக்கிற சமீபத்திய நாட்களில் வீதிகளெங்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் நாய்களுமே மிகுந்து கிடந்தனர். மீன் வாசனை மிகுந்த வீதியில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை விரும்பாத மற்றவர்களுக்கு மத்தியில் சற்றே வளரத் துவங்கியிருந்த நெய்தல் நிலத்தின் குட்டிநாயொன்றை இவர்கள் வீட்டில் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். வசீகரமான மென் சலனமாய் அந்நாய்க்குட்டியின் குரலிலும் அருகாமையிலுமே கடந்த சில மாதங்களாக இவளின் வளர்ச்சியுமிருந்தன. குதிரைகளின் மீதான ஆர்வங்கள் விரியத்துவங்கிய தினத்திலிருந்து அங்கு வளர்ந்து கொண்டிருந்த நாயின் மீதான பிரியங்களை தம்மையுமறியாமலேயே தொலைத்து விடத் துவங்கியிருந்தாள். சமயங்களில் இவளை நுகர்ந்து பார்த்து நக்கிக்கொடுக்கும் அந்த நாய்க்குட்டியுடன் சில நிமிடங்கள் விளையாடுபவள் குதிரையினை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கத்துவங்கியதும் வசீகரமற்ற இதனுடலிலிருந்து தம்மை விலக்கிக் கொள்வாள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் துவங்கும் கடலின் உப்பு வாசனையும் குளிர் காற்றும் இரவுகளில் நம்பவியலாததொரு அற்புதமாகவே இவர்களின் வீட்டினை உருவாக்கியிருந்தது. வேயப்பட்ட பழைய ஓடுகளுக்குள்ளாக ஜீவித்துக் கொண்டிருந்த பூச்சிகளும் பல்லிகளும் அவ்வப்பொழுது தங்களின் தரிசனத்தின் மூலம் இவர்களுக்கு விளையாட்டுக் காட்டவும் சகுனம் பார்க்க உதவுவதற்கும் தவறுவதில்லை. பிடிபடாத கனவுகளாய் சிறு சிறு விருப்பங்களும் தூரமாகிக் கொண்டிருந்த அவ்வீட்டில் வெறுமை கருவளையங்காளென படர்ந்துவிட்டிருந்தது.


ஆற்றில் நீர்பெருகத்துவங்கியிருந்த தினத்தில் முதல் முறையாக ‘குதிரை’ வேண்டுமெனக் கேட்டு நிவேதிதா அவனை சலனப்படுத்தினாள். இதற்குமுன் தன்னிடம் எதையுமே அவள் கேட்டிருக்கவில்லையென்பது நினைவிற்கு வந்தவனாய் அந்நகரின் பொம்மைக் கடைகளொன்றில் அன்றைய தினமே குதிரை பொம்மையொன்றை வாங்கி விடுவதென தீர்மானித்துக் கொண்டான். குழந்தைகள் நாய்கள் யானைகளென பிளாஸ்டிக்கிலும் கிளேயிலும் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருந்த ஏராளமான பொம்மைகளுக்கு மத்தியில் எவ்வளவு தேடியும் குதிரையை மட்டும் கண்டுபிடித்திட முடியவில்லை. அதுமட்டுமே வேண்டுமெனன்கிற இவனின் பிடிவாதத்திற்கு மதிப்பளிக்கிற விதமாய் ஒரு கடைக்காரன் இரண்டு மூன்று தினங்களில் எற்பாடு செய்து தருவதாய் கூறி அனுப்பிவைத்தான். ஓரளவு நிறைவுடன் வீடு திரும்பியவனிடம் போதுமானளவு பணமிருக்கும் பட்சத்தில் உயிருள்ளதொரு குதிரையை வாங்கித்தருவதுதான் அவனுடைய தேர்வாயிருந்திருக்கும். உறக்க கலக்கத்தில் அன்றைய தினம் மறந்துபோயிருந்தவள் இரண்டு மூன்று தினங்களுக்குப் பின் கேட்ட பொழுதுதான் சொல்லிவைத்துவிட்டு வந்தது நினைவு வந்தவனாய் மாலையில் நிச்சயம் ஒரு குதிரையுடன் வருவதாக வாக்களித்தான். குதிரைகள் வெகு அரிதாகவே கிடைப்பாதாகக் கூறிய கடைக்காரன் குதிரையின் தோற்றத்திலிருக்கும் வேறொன்றைக் காட்டி விளையடச் செய்யலாமென்கிற யோசனையைக் கூறியபொழுது தன் மகளுக்கு பொய்யானதொன்றை கொடுக்க விரும்பாதவனாய் மறுத்துவிட்டான்.


இரண்டாவது முறையாக ஏறி இறங்கித்தேடியலைந்த பொழுது ஒட்டுமொத்தமாக குதிரைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதில் ஏமாற்றமே மிஞ்சியது. யார் வீட்டிலாவது இரவல் வாங்கினாலென்ன என்று நினைத்தவன் நண்பர்கள் சிலரிடம் யோசனை கேட்கையில் வெறும் யோசனைகளாக மட்டுமே எஞ்சியதேயன்றி சாத்தியமான பயன்களெதுவும் கிடைத்திருக்கவில்லை. சோர்வோடு மாலையில் வீடு திரும்புகையில் மாற்றமெதையும் கொண்டிராத அச்சாலை இவனுக்கு மட்டும் இருண்டும் சூன்யம் நிரம்பியதாகவும் தெரிந்தது. முந்தைய சமயம் போலவே இம்முறையும் தான் கேட்டிருந்ததை அவள் மறந்திருக்க வேண்டுமென்கிற மெல்லிய நம்பிக்கையுடனும், வலிந்து உருவாக்கிக்கொண்ட சமாதானத்துடனும் இவன் விட்டை நெருங்கிய நேரத்தில் அவள் பாதி உறக்கத்திலிருந்தாள். இன்றும் குதிரை தேடியலைந்ததைக் கேட்டு அவன் மனைவிக்கு சற்று கோபமெழுந்த பொழுதும் எவ்வளவு தேடியும் தன்னால் ஒரு குதிரையை வாங்கமுடியவில்லையென அவன் தயங்கி நின்றதைப்பார்த்து இவளுக்கும் வருத்தமாகத்தானிருந்தது.


அரையிருளில் அக்கடையைப் பார்க்கிறவர்களுக்கு கூரை வேயப்பட்டதொரு சிறிய வெளியென்பதைத்தாண்டி வேறொன்றும் தோன்றுவதற்கான சாத்தியமில்லை என்கிறபடி குறைவான அடையாளங்களுடனேயே இருந்தது. எல்லாவற்றிலிருந்தும் எழுந்து வந்த மட்டமான சமையல் எண்ணையின் வாசனையும் மாலை நேர மீன்வாசனையும் வீட்டுக்குள் மெல்லிய விகிதத்தில் பரவிநிரம்பத் துவங்கியது. உறக்கம் கலைந்து எழுந்த நிவேதிதா மின்விளக்கின் மஞ்சளான வெளிச்சத்தில் இவனைக் கண்டதும் எதிர்பார்ப்புகள் மிகுந்த ஆசையோடு வாசலை எட்டிப்பார்த்தாள். கொடுமையான இவனின் சைக்கிளைத்தவிர வேறொன்றுமில்லாத ஏமாற்றத்தில் ‘குதித எங்கப்பா?’ என்று கேட்டபடியே நெருங்கி வந்தாள். வரப்பொகும் குதிரையில் ஊர்சுற்ற நினைத்திருந்தவள் உயிருள்ளதொரு குதிரையைத்தான் விரும்பியிருக்கிறாளென்பதை அப்பொழுது தெரிந்து கொண்டவன் அவளையனைத்து மடியில் உட்கார வைத்துக்கொண்டான். தலை களைந்து சில மணிநேரத் தூக்கத்தில் உப்பியிருந்த முகத்துடன் மௌனமாக தம்மை கவனிக்கும் மகளிடம் தேவதைகளின் சாயல்களிருப்பதாய்த் தோன்றியதவனுக்கு. இவளுக்காகவென்றே வாங்கியிருந்த அற்புதமான குதிரையை ஏராளமானாவர்கள் தங்களுக்குத்தரும்படி துரத்த யாருக்கும் தரமறுத்துவிட்டிருந்தான். ஊரை அடையுமுன்பாக வழியில் எதிர்ப்பட்ட அய்யனார் சாமி வருத்தத்துடனிருப்பதைக் கண்டு விசாரித்திருக்கிறான். தம்மிடமிருந்த குதிரைகளிளொன்று மூப்பின் காரணமாய் தவறிப்போனதால் ஊரை வலம்வர புதியதொரு குதிரைக்காக காத்திருப்பதாக கூறியவர் அப்படிக் கிடைக்கிற வரையிலும் ஊர்காவலுக்கு செல்வதில்லையெனக் கூறிவிட்டார். ஊரின் நலன் கருதி இவளின் குதிரையைக் கொடுத்துவிட்டு வந்ததாக இவன் கூறியபொழுது அய்யனாரைப் பற்றியெல்லாம் பெரிய விவரங்களெதையும் அறிந்திராதவள் நினைத்த மாத்திரத்தில் பறக்க முடிகிற சாமிக்கு எதற்காக குதிரை? ஆசையோடு காத்திருந்த ஒரு சிறுமியிடமிருந்துதான் அதையும் பறிக்க வேண்டுமா? அவர்மீது கோபமெழுந்தது. சோறூட்டியபடியே அடுத்த வாரமோ அதற்கடுத்த வாரமோ நிச்சயமாக ஒன்றை வாங்கி வருவதாகக்கூறினான்.


எப்பொழுதும் போலவே அன்றிரவும் இவன் சொன்ன பறக்கும் குதிரைகளின் கதைகளை புதுவிதமான குதூகலத்துடன் கேட்டுக்கொண்டிருந்த மகளைப் போலவே இவனுக்கும் குதிரைகளின் மீதான காதல் மிகுதியடைந்துவிட்டிருந்தது. உறக்கத்தில் வெள்ளை நிறக்குதிரையில் பறந்து கொண்டிருந்தவள் தான் எங்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறோமென உளறுகையில் தொடர்ந்து அவளின் விருப்பமனைத்தும் எல்லவற்றையும் மீறி பறந்து விரிந்த அந்த கடலைத்தவிர தாண்டிச் செல்வதற்கென்று ஒன்றுமில்லை என்பதைப்போலிருந்தது. வெவ்வேறு திசைகளில் உடலைப் பொருத்தி உறங்கிக்கொநண்டிருந்த மகளின் கனவுகளுக்குள் நுழைந்துகொண்டவன் அவள் பறந்து கொண்டிருந்ததை பரவசத்துடன் பார்த்துக் கொந்திருந்தான். அரைகுறையாய் படிந்து கிடந்த அவளின் விரல்களில் யாரும் பார்த்திட முடியாததொரு ஓவியத்தினைத் தீட்டிக் கொண்டிருந்தது காற்று.


குதிரையொன்றை எப்படியும் வாங்கிவிடுவதென அவன் கொண்டிருந்த தீர்மானம் அடுத்தடுத்த நாட்களிலும் ஏமாற்றத்துடனேயே கழிந்து கொண்டிருந்ததில் வருத்தமுற்றவன் யாரிடம் முறையிடுவதெனத்தெரியாமல் தவிப்புகளுடன் ஒரு மாலையில் ஊரெல்லையிலிருந்த அய்யனாரிடமே கேட்டு விட்டான். இவன் தன் மகளுக்கு சொல்லும் கதைகளிலொன்றை சொல்லச் சொல்லி அவர் பதிலுக்கு கேட்டு நின்றதைக்கண்டு வெறுப்புற்றவன் தயங்கியபடியே நினைவின் இழைகளிலிருந்து பிரித்து ஓர் கதையை அவருக்குக் கூறத்துவங்கினான். பறத்தலின் சுகத்தினை விவரித்த அவன் கதையில் கரைந்து போனவர் நெடுநாட்களுக்குப் பின் ஆழ்ந்த உறக்கத்திழாழ்ந்தார். ஒவ்வொரு முறையும் இவன் வாங்கி வரும் குதிரைகள் யாரோ சிலரால் களவாடப்படுவதிலும், இரவல் வாங்கிக்கொள்ளப்படுவதிலும் புரிந்து கொள்ளவியலாத விசித்திரமிருப்பினும் பின்புலத்தில் மெல்லிய சந்தோசமும் படர்ந்து விரிந்தது. இத்தனை குதிரைகளும் வீடு திரும்புகிற நாளில் உலகிலேயே ஏராளமான குதிரைகள் வைத்திருப்பவர்கள் இவர்கள் தானென்கிற உண்மையினை அவன் விவரித்ததில் ஒரே சமயத்தில் பல நூறு குதிரைகளில் பறப்பதனை கற்பனை செய்து கொண்டாள். வெளிச்சத்தின் முகம் மாறும் மாலை வேலைகளில் அப்பகுதி முழுக்கவும் தெரியத்துவங்கிய குதிரைகளின் நடமாட்டத்தில் அய்யனாரின் இருப்பினை இவர்கள் உணர்ந்துகொண்டனர்.


சில நாட்களுக்குள்ளாகவே குதிரைப் பாப்பா வேண்டுமெனக் கேட்கிற அளவிற்கு தன் மகளுக்கு அவற்றின் மீதிருக்கும் காதலைப் புரிந்து வைத்திருந்த அம்மா விலங்குகளுக்கான சேனலில் இவளுக்குக் குதிரையைக் காட்டினாள். நீண்ட நேரமாய் அந்தக் குதிரை பறக்காமலேயே அசமந்தமாய் நின்றிருந்ததில் அது பொய்க்குதிரையோவென்கிற நினைப்புதான் இவளுக்கு முன்நின்றது. தொலைக்காட்சிகளில் வரும் குதிரைகளை சில நிமிடங்களுக்குள்ளாகவே வெறுக்கத்துவங்கிவிட்டாள் என்பதைத் தெரிந்து கொண்ட அம்மா தன் கணவனைப் போல் ஏராளமான கதைகளை சொல்ல முடியாதவளாதவளாய் இருந்த பொழுதும் அந்த வீட்டிற்கு குதிரை வந்து சேரும் உத்தேசமான நாளைக் கூறி சமாதானப்படுத்தினாள். முதலாவதாக வாங்கிவந்து சாமிக்கு கொடுக்கப்பட்ட குதிரை முட்டையிட்டதும் அந்த முட்டையிலிருந்து வெளிவரும் குட்டிக்குதிரை இவர்களுக்குத் தானென அம்மா சொன்னதில் விருப்பமான நிறத்தில் குட்டிக் குதிரையொன்றை தன்னளவில் அவள் உருவகித்துக் கொண்டதுடன் ஆண் குதிரை பெண் குதிரைகளென அத்தனை குதிரைகளும் அவளுலகில் முட்டையிட்டுக் கொண்டிருந்தன.

பொம்மைகளின் இருப்பு வெவ்வேறாக மாறத்துவங்கிய நகரில் மனிதர்கள் பலருமே பொம்மையென மாறிப்போனவர்களாய் இருந்தனர்.இவன் பிளாஸ்டிக் துணிபொம்மைகளென சாத்தியமுள்ள ஏராளமான வழிகளில் தேடித்தோற்றபின் தெரிந்தவொருவரிடம் மரத்தினாலான பொம்மையை செய்து தரச்சொல்லிக் கேட்டான். ஒரு காலையில் கடைக்கு வந்திருந்த பொம்மைக்காரரிடமிருந்து பொம்மையைப் பெற்றுக்கொண்டவன் அந்தநொடியில் அதீதமான அதிர்ஷ்டக்காரன் தான்மட்டுமேயென பெருங்களிப்புற்றவனாய் சோர்வுற்றுக் கிடந்த மனதினை இலகுவாக்கிக்கொண்டான். காரை உதிர்ந்து பொலிவிலந்து போயிருந்த அவ்வீடு நொடிப்பொழுதில் உற்சாகத்துடன் பிரகாசித்தது. முந்தைய இரவின் கதையில் விடுபட்ட நிலவெளியில் தம் குதிரைகளுடன் பறந்து கொண்டிருந்த மகளிடம் குதிரையை கொடுத்துவிட்டு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் உற்சாகத்துடன் ஓடத்துவங்கிவிட்டிருந்தது குட்டிக்குதிரை. சில மணி நேரங்களுக்குள்ளாகவே அதனோடு நெருக்கமாக பேசிப்பழகி விட்டவள் அன்றைய இரவில் அக்குதிரை பறக்கப் போவதை பார்க்கும் ஆர்வத்துடன் காத்திருந்தாள். நீண்ட இவளின் காத்திருப்பினைப் பொருட்படுத்தாமல் மௌனித்திருந்த குதிரைக் குட்டி இவளுறங்கிய பிறகு மூன்று முறை ஊரை வலம் வந்ததை காலையில் அப்பா சொல்லித்தான் தெரிந்து கொண்டாள். கோபத்தில் அதனோடு டூ விட்டுக்கொண்டவள் அந்த நேரத்தில் தன்னை எழுப்பாததற்காக இவர்களிடமும் பேசாமலிருந்தாள். தவிட்டுச் சிதறலாய் பொன் நிறத்தில் உதிரத்துவங்கிய சாரல் மெல்ல மெல்ல மழையாக வலுக்கத்துவங்கியது அந்தப் பகலில். கடலோர உப்பின் வாசனையோடு அதுமாதிரியானதொரு கனத்தில் சாலையில் நடந்து செல்லுதலென்பது அனுபவிக்க நேர்கிற அபூர்வமான சந்தோசங்களிலொன்று. குதிரையுடன் விளையாடிக் கொண்டிருந்த மகளைத் தம் சைக்கிளில் கூட்டிக்கொண்டு சந்தோசமாக வெளியில் கிளம்பியவன் அந்த சாலையின் முடிவுவரை சென்று விடுவதென சீரான வேகத்தில் சைக்கிளை மிதித்தான். மழைக்கான உடையில் முகம் மட்டும் வெளித்தெரிய தம்முடலை ஒளித்துக் கொண்ட இவர்களிருவரின் மீதும் சில நொடிகள் மட்டும் தீட்டப்பட்டு உருகும் ஓவியமாய் வழிந்தபடியிருந்தது மழைத்துளிகள். ஊரின் எல்லையைக் கடந்த நேரத்தில் நீரலைகள் புரளும் அவ்வெளியில் அய்யனாருக்குத் தாம் அளித்திருந்த குதிரையைக் காட்டிவிடுவதென இவளை அழைத்துக் கொண்டு போனான்.


மழையின் சப்தத்தினைத்தவிர பெரிய சலசலப்புகளில்லாத அவ்விடத்தில் பிரம்மாண்டமாய் நின்றிருந்த வெள்ளைக் குதிரைகளில் தம்முடையது எதுவென அடையாளங்கான விரும்பியவள் இறங்கிச்சென்று அதன் காலடியில் நிற்கையில் குதிரையின் உடலிலிருந்து வழியும் நீர் தெறித்து சிறியதொரு பூவாய் மலர்ந்திருந்தாள். நீண்ட நேரம் மழையில் நனைந்திருந்த குளிரையும் பொருட்படுத்தமல் இவளைப் பார்த்து சிரித்த குதிரை பேசவும் துவங்கியபின் அதன் மீதிருந்த தன் கோபத்தினை மறந்துவிட்டு பெயறற்ற அதற்கொரு பெயர் வைக்க வேண்டுமென தன் பெயரையே அதற்கும் வைத்தாள். அற்புதங்களிலொன்றாக இவர்களின் சுவாரஸ்யமான உரையாடலைக் கவனித்டதுக் கொண்டிருந்த மழையும் இவனும் மெல்ல மெல்ல தங்களின் இயக்கத்தினை மறக்கத்துவங்கினர். ஒவ்வொரு குதிரையும் பிரத்யேகமாக தங்களை இவளிடம் ஆர்வத்தோடு அறிமுகப்படுத்திக்கொண்டன. அங்கிருந்தவை மட்டுமின்றி உலகிலுள்ள அத்தனை குதிரைகளும் தம் மகளுடன் பேசுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன என்கிற கர்வம் இவனுக்குள் சந்தோசமாய் எழுந்தபொழுது தேசமற்ற தன் ராஜ்ஜியத்தின் இளவரசியாய் அவளை நினைத்துக் கொண்டான். தனியாக இருக்கும் பட்சத்தில் சாமி பயந்துபோகக்கூடுமென கருதி வீடு திரும்புகையில் தன் குதிரைகளை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வந்தாள். இவள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மறுத்திருந்த அய்யனாருக்கு கோபமெதுவும் இல்லாத பொழுதும் பெருமளவில் பொறாமையிருந்தது. இருப்பினும் வெளிக்காட்டிக் கொள்ளாதவராய் இவள் கிளம்புகையில் குனிந்து முத்தமிட இவளும் பதிலுக்கு முத்தமிட்டாள். குதிரைகளையும் ஒவ்வொன்றாய் முத்தமிட்டுவிட்டு அவள் சென்றபின் சந்தோசத்தில் இவர்கள் உற்சாகமாக நடனமாடத் துவங்கினர்.


மழையில் குளித்து பளபளப்புற்றிருந்த சைக்கிள், கண்ணாடிச் சிதறல்களென சாலையில் வழிந்தோடிய நீரைக்கிழித்தபடி திரும்பிக்கொண்டிருக்க ‘குதிரை முட்டை எப்படியிருக்குமென இவனிடம் அவள் கேட்டதில்‘ மெல்லிய அதிர்ச்சிக்குப்பின் சமாளித்தவனாய் பிரம்மாண்டமான அம்முட்டையின் நிறத்தைப் பற்றியும் வாசனையையும் விரிவாகக்கூறி கூடிய விரைவில் சில முட்டைகள் வீடு வந்து சேருமென்றான். நிறைய இல்லாவிட்டாலும் ஒன்றை மட்டுமாவது பார்க்க வேண்டுமெனக் கேட்டவளுக்கு அடுத்த தினமே ஒன்றைக்கொண்டுவந்து தருவதாக நம்பிக்கையளித்தான். குதிரைகளைப்பற்றின கதைகளில் தன் மகளை லயிக்க வைத்திருந்த இவர்களிருவருக்கும் மனிதர்களைப்பற்றி குதிரைகளின் சேமிப்பிலிருக்கும் கதைகளைக் கூறி உறங்கப்பழக்கினாள். நீண்ட நேரமாய் கானாமல் போயிருந்த குட்டிக்குதிரையின் நினைவெழுகையில் முந்தைய தினத்தினைப் போன்றே இரவின் கதைகளை சேகரித்துக் கொண்டு தன்னிடம் வந்துசேரக்கூடுமென நம்பிக்கையுடன் இவன் தோள்களில் சாய்ந்து உறங்கிப்போனாள்.


வெண்மையும் சாம்பல்நிறமும் ஊடாக மெல்லிய ஆரஞ்சு நிரமும் கலந்த பெரிய முட்டையொன்றை மறுநாள் வீட்டிற்குக் கொண்டு வந்தவன் முந்தையதினம் இவளளித்த முத்தங்களுக்குப் பரிசாக அக்குதிரைகளிலொன்று கொடுத்தனுப்பியதாய்க் கூறினான். இவளால் தூக்க முடியாத அம்முட்டையினை அம்மா பாதி நீர் நிரப்பிய தொட்டியில் வைத்துவிட்டுத்திரும்பி வந்தாள். அதிலிருந்து குட்டி வெளிவரும் குறிபிட்ட தினமெதுவும் தெரியாததால் அதுவரையிலும் காத்திருப்பதுடன் புதிய குட்டிகளெதையும் கேட்கக்கூடாதென இவளிடம் கேட்டுக்கொண்டனர். உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை அரவணைக்கும் தாயின் பரவசமாய் அம்முட்டையை இவள் கவனித்துக் கொண்டாள். தன்னோடு பேசுகிற நேரத்தைக் குறைத்துக் கொண்டாளென இதுகுறித்து முதலில் வந்த குதிரை வருத்தங்கொண்ட நாளில் அதனோடு மட்டுமே விளையாடி சமாதானப்படுத்தினாள். அன்பின் நெருக்கமான மகிழ்ச்சியில் புளங்காகிதம் கொள்ளத்துவங்கிய குட்டிக்குதிரையின் மொழியினைக் கற்றிருந்தவள் இனிய பாடலொன்றைப் பாடி வரப்போகும் புதிய நண்பர்களைப்பற்றின ஆர்வத்தினை அதற்கும் ஏற்படுத்திவிட முயன்றாள்.


சற்றே சமாதானம் அடைந்து விட்டிருந்த அதன் நடவடிக்கைகள் அடம் பிடிக்கும் சிறுகுழந்தையை நினைவு படுத்துவதாகவே இருந்தது. தானனுப்பிய முட்டையைப் பற்றிக்கேட்டுக் கொண்டதுடன் விருப்பப்பட்டால் இன்னொரு முட்டையினை அனுப்பி வைப்பதாகவும் ஊர்சுற்றப் போயிருந்த இதனிடம் சாமிக்குதிரைகள் அன்றைய இரவில் சொன்னதென இவளிடம் சொன்னதற்கு வேண்டாமென மறுத்தவள் மௌனித்திருந்தாள். மௌனமுற்ற இவளின் முகத்தினை சலனமின்றிப் பார்க்கும் பொறுமையற்று நகர்ந்து மீண்டும் திரும்பியதனிடம் அது வளர்ந்துகொண்டிருப்பதாகக் கூறினாள். வளர்ச்சியென்பது இயல்புதானென்கிற பிரக்ஞையிலிருந்த இதற்கு அவள் சொல்ல விரும்புவதின் சூட்சுமம் புரியாமலிருந்தது. ‘நீயும் வளந்திட்டா என்ன விட்டுட்டுப் போயிடுவியா?’ ஏக்கத்தோடு அவள் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாத துயருடன் ‘வளரும் போது நெருக்கமானவர்களைப் பிரிந்து செல்லத்தான் வேண்டியிருக்கிறது’ தனக்குள்ளாகவே முனகிக்கொண்டது. இவளின் அவ்வருடப் பிறந்த தினம் வருவதற்கு இரண்டு தினங்கள் முன்பாக சற்றே வளர்ந்த குதிரைக்குட்டி முட்டையிலிருந்து வெளிவந்துவிட்டிருந்ததை அப்பா கூட்டிச்சென்று காட்டியபொழுது ஓரளவு வளர்ந்திருந்த அதன் தோற்றத்தில் கவலையுற்ற பழையகுட்டி ‘நிச்சயம் அவள் தன்னை மறந்துவிடக்கூடுமென வருத்தங்கொண்டது.’ புதிதாக வந்ததை கட்டியணைத்து முத்தமிட்டதுடன் இன்னொரு கையில் இதனையும் வாரியிழுத்துக்கொண்ட பொழுதுதான் பெரும் நிம்மதி திரும்பி வந்தது.


புதிதாக வந்திருந்த குட்டி ஓரளவு ஓடக்கூடியதென்கிற விவரம் சில நாட்களுக்குப் பின்பாகவே இவளுக்குத்தெரிய வந்தது. அதன் மீது இவளை ஏற்றி உட்கார வைத்துவிட்டு அசைத்துவிட்டவன் அது கடந்துசெல்வதற்கு ஏதுவாய் வழிவிட்டு ஒதுங்கி நின்று கொண்டான். அவசரமோ ஆர்ப்பாட்டமோயின்றி எந்தவிதத்திலும் இவளை அச்சுருத்திவிடக்கூடாதென்கிற எச்சரிக்கையோடு நிதானமாகவே ஓடியது. சில நிமிடங்களிலேயே தம் தாயின் இருப்பிடத்தினை அடைந்துவிட்ட அதனிடம் இவ்வளவு வேகம் வேணாமென செல்லமாகக் கோபப் பட்டுக்கொண்டாள். நீண்ட தூரம் பயணம் செய்ய நேர்கிற பட்சத்தில் இவர்கள் தங்களின் பாதையை மறக்க நேருமென்பதை எச்சரித்த தாய்குதிரை குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே சுற்றும்படி அறிவுறுத்தியது. ஒரே நாளில் நகரை இரண்டு மூன்று முறை சுற்றி வந்ததில் ஊரின் மீதான ஆர்வங்களெல்லாம் தீர்ந்துபோனதுடன் வீட்டிற்கு அருகிலேயே துவங்கும் பிரம்மாண்டமான கடலைத்தாண்டிச் செல்ல வேண்டுமென்கிற ஆர்வமெழுந்தது. நீண்ட தூரப் பயணத்தினை மேற்கொள்ள வேண்டுமெனில் இக்குட்டி இன்னும் சிறிதளவேனும் வளரவேண்டுமென்கிற பிரக்ஞையுடன் இதன் தாய் சொன்னபடி பாதையை மறக்கக்கூடிய அபாயமும் இருப்பதால் பொறுத்திருப்பதுதான் சரியெனப்பட்டது. வீடு முழுக்க விளையாடுகிற இவர்களைப் பார்க்கிற பகல் வேளைகளில் அம்மாவிற்குத் தானும் குழந்தையாகிப் போய்விடக்கூடாதாவெனத் தோன்றும். அவனும் இவளும் ஓரிரவில் குழந்தையாய் மாறி மகளின் தோளர்களென குதிரைகளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் அவற்றுடன் நகருலாச் செல்லக் கிளம்பினர். இரண்டு பேரையும் சிரமமின்றி எப்படி இக்குட்டியால் தூக்கமுடிகிறதென இவர்களுக்கு ஆச்சர்யம்தான். சுமையிருப்பதான உணர்வேயின்றி சாதாரனமாக பறந்து கொண்டிருந்த குட்டியின் மீதிருந்து நகரைப் பார்க்கையில் அறிமுகமற்ற ஏதோவொரு ஊருக்குள் சென்றுவிட்ட உணர்வே இவர்களுக்கிருந்தது. அன்றிரவு தூங்கச்செல்கையில் இறுதியாய் அக்குதிரையளித்த முத்தங்களைத் தவிர வேறொன்றும் நினைவிலில்லை. பாதி இரவில் விழிப்புற்றவனாய் எழுந்துகொண்டு மகளைத் தேடிய பொழுது அவள் உறங்கிகொண்டிருந்த இடம் காலியாயிருந்ததுடன் குதிரைகளும் காணாமல் போய் விட்டிருந்தன. வழக்கம்போல் ஊர்சுற்ற சென்றிப்பவர்கள் திரும்பிவரட்டுமென காத்திருந்தவன் விடியத்துவங்கியதும் மெல்லிய அச்சங்கொண்டவனாய் மனைவியையும் எழுப்பி இரண்டு பேருமாகத் தேடத்துவங்கி விட்டனர். இருவரும் திசைக்கொருவராய்ப் பிரிந்து சென்ற அந்த அதிகாலையில் அப்பகுதியெங்கும் மகளைக் கூப்பிடும் இவர்களின் குரல் எழுந்துவரத்துவங்கியது. சுழன்று சுழன்று நீளும் இவ்வளவு வீதிகளில் எங்காவதொரு இடத்தில் களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்களென அவனின் நம்பிக்கைகளை வெறுமையுற்ற எல்லா வீதிகளும் சிதறடித்துக் கலங்கப்படுத்தின. அய்யனாரிடமிருந்த குதிரைகளைப் பார்த்து விசாரிக்கலாமென்றால் அவ்விடத்திலிருந்து அவர்களும் காணாமல் போயிருந்தனர். சில நொடிகள் ரௌத்ரமான அய்யனாரின் முகத்தினை கண்முன் நிறுத்திப் பார்த்துக்கொண்டவன் அவருமா தொலைந்து போக வேண்டுமென வருத்தங்கொண்டான். சித்த சுவாதீனமுற்றவனாய் அந்நகரின் மறு எல்லையிலிருந்த வீதிகள் பக்கத்து ஊர்களென இயன்றவரை தேடியலைந்து வீடு திரும்பியவனை கவனிக்கும் நிலையற்று உடல் வதங்கிப் போயிருந்தவளாய் இவன் மனைவி எதையோ வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரைகளின் காலடித்தடங்கள் வீடு முழுக்க காய்ந்த சுவடுகளாய் முதல் முறையாக வெளித்தெரியத் துவங்கியது. அவளை கவனிக்கவோ சமாதானப்படுத்தவோ திராணியற்றவனாய் வெளியேறி கடலை நோக்கி ஓடியவன் ஆத்திரத்தோடு கடலை சபிக்கத்துவங்கினான். இவன் திட்டுகிற ஒவ்வொரு சொல்லுக்கும் பதிலளித்த அலைகள் தொடர்ந்து வந்தபடியிருக்க காறியுமிழ்ந்துவிட்டு திரும்பி நடக்கத்துவங்கினான். தம் மகளில்லாத வெறுமையிலிருந்து என்னசெய்தும் மீள முடியாதென்கிற துயரில் சரிந்து ம்ணலில் விழுந்தவனின் கன்னங்களில் அழுது வடிந்திருந்த கண்ணீரின் உப்புத்தடமும் மணலும் அழுத்தமாக ஒட்டியிருந்தன. எவ்வளவு நேரமென்கிற பிரக்ஞையின்றி மயங்கிக் கிடந்தவனுக்கு மேலாக இருள் முழுமையாய் போர்த்திவிட்டிருந்தது. நீண்ட நேரத்திற்குப் பின்னால் குதிரைகள் கனைக்கிற ஒலி சன்னமாய்க் கேட்டு சலனமுற்றவன் விழித்துப்பார்க்கையில் கடலின் தென் திசையிலிருந்து வெவ்வேறு நிறங்களில் ஏதோ அசைவதைப் பார்த்தான். நகர்வதற்கான திராணியே இல்லாதிருந்தும் மூர்க்கத்தோடு கடலை நோக்கி ஓடியவனிடம் குறுகிய நிமிடங்களுக்குள்ளேயே அவர்கள் வந்து சேர்ந்துவிட்டனர். அடர்த்தியான அவ்விருண்மையிலுங்கூட உருவிழந்துபோன அவளிடமிருந்து ஒட்டுமொத்தமான குழந்தமையும் தொலைந்து போயிருந்ததை தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்ததவனால். உயிரியக்கம் மட்டுமே எஞ்சியிருந்த அவளுடன் வந்திருந்த இன்னொரு சிறுமி இந்த நூற்றாண்டு உயிரென்பதற்கான இருப்பின் அடையாளங்களெதுவும் அற்று சுருங்கிப்போயிருந்தாள். தீக்காயங்களும் பல்லாண்டுகளாய்க் கொல்லப்பட்ட உயிர்களிலிருந்து கசிந்த பச்சையான குருதி நாற்றமும் இவர்களிரண்டுபேரின் உடலிலும் மிகுந்திருந்ததில் நிகழ்ந்து கொண்டிருந்ததின் தீவிரமெதுவும் உடனடியாகப் புரிபடவில்லை. சாமியின் ஒரேயொரு குதிரைமட்டும் சூன்யம் நிரம்பிய விழிகளோடும் அறுபட்ட வாலோடும் திரும்பியிருந்தது. காறியுமிழ்ந்த கடலுக்கு மகளை திருப்பியனுப்பியதற்காக நன்றி கூறியவன் நீரள்ளி அச்சிறுமிகளின் உடல்களைக் கழுவ எத்தனிக்கையில் பதறி விலகிய இரண்டுபேரும் இவனின் அருகாமையில் அச்சமுற்றனர். சலனமின்றி நின்றிருந்த குதிரையை திரும்பிக்கூட பார்க்க விரும்பாதவளாய் குட்டிப்பாதங்கள் மணலில் புடைய பதற்றத்துடன் நடந்தபடியே அவள் ‘தனக்கு இனியொருபோதும் குதிரைகளே வேண்டாமென்றாள்.













உரிமை © 2009, சிக்கிமுக்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக