Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

சனி, 20 நவம்பர், 2010

சுதந்திரம் நோக்கி நகர்தல்…
THE MOST IMPORTANT THING IN ART AND IN LIFE IS TO BE FREE” – IANNIS XENAKIS.
நானொரு ஓரினப் புணர்ச்சியாளனும்கூட. முதல் வரியிலேயே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்க நேர்ந்ததற்கு ஏராளமான காரணங்களிருக்கின்றன. தொடர்ந்து என்னுடைய கதைகளையும் கவிதைகளையும் வாசித்து வருகிற நண்பர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சந்தேகமிருந்ததை நன்கறிவேன். அவர்களுக்கு இதனை தெளிவுபடுத்திவிட வேண்டுமென்கிற எந்த கட்டாயங்களும் எனக்கில்லை, எனினும் ஒரு படைப்பாளியாய் மிக முக்கியமான கட்டத்தில் இதனை பிரகடனப் படுத்துவதை அவசியமெனக் கருதுகிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரத்யேகமான அடையாளங்களில் என்னை ஓரினப் புனர்ச்சியாளனாக மட்டுமே ஒட்டுமொத்த அடையாளமாக மற்றவர்கள் மாற்றிக் கொள்வதில் விருப்பமில்லை. ஒருபால் ஈர்ப்பு என்பது அடிப்படையில் தனிப்பட்ட மனிதர்களின் சுயம் சார்ந்த விசயம், வெகு சாதாரணமாக நிகழ்கிற உறவு முறைகளைப் போல். அகம் சார்ந்த விசயங்களை மட்டுமே கொண்டு ஒரு தனிமனிதனின் அரசியல் நிலைப்பாட்டில் கொள்ளும் சந்தேகங்களும் ஆளுமையின் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் மிக அபத்தமானவை.
ஓரினப் புணர்ச்சி சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுவதாக தில்லி உயர்நீதிமன்றத்திலிருந்து வந்த தீர்ப்பினையும் வந்த வேகத்திலேயே எழுந்த எதிர்ப்பின் காரணமாக மீண்டும் தடையுத்தரவு என அபத்தமானதொரு அரசியல் நாடகத்தின் பெரும்பாலான காட்சிகளை முன்பே தெரிந்து வைத்துதானிருந்தேன். வரிசைமாறாமல் அவற்றை பார்க்க நேர்ந்ததில் வெறுப்பாகவும் சோர்வாகவும்தானிருந்தது. ஒருவேளை தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டாலுமே இங்கு என்னமாதிரியான மாற்றங்களை அரசாங்கத்தால் கொண்டுவந்துவிட முடியும்? ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போல் பெரியளவிற்கு இல்லாவிடினும் குறைந்தபட்சம் இவர்களால் எந்த முற்சிகளையும் செய்யமுடியாது என்பதுதான் நிதர்சனம். தீர்ப்பு வந்த தினத்திலேயே இங்கிருந்த அரசியல் தலைகள் பலரும் எதிர்த்துக் கொந்தளித்ததையும் மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என கருத்துக் கேட்கவும் வரிந்துகட்டிக் கொண்டு முன்னால் நின்றன நமது பிரபல பத்திரிக்கைகள் பலவும். ஓரிணப்புனர்ச்சியாளர்களைப் பற்றின செய்திகளையும் திருநங்கைகள் குறித்தும் முடிந்தவரை கீழ்த்தரமாக செய்திகள் எழுதும் இவர்கள் எங்கே நமது தேசத்தின் இறையான்மை போய்விடுமோ என்கிற அச்சத்தில் இதுமாதிரியெல்லாம் செய்கிறார்கள் போல, அதிலும் முக்கியமானவர்கள் என்ன சொல்கிறார்களென்கிற கருத்துக் கணிப்பு வேறு, கருமம் இவர்களெல்லாம் என்ன சொல்ல வேண்டும்? எதற்காக சொல்ல வேண்டும்? ஒரு தனிமனிதனின் உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த விருப்பங்களை கேள்விகேட்பதற்கும் விமர்சனம் செய்வதற்கும் இவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது. அதிலும் இந்த மதத் தலைவர்கள் ‘ இறைவன் இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டாரென வருத்தமும் வன்மமும் கலந்து சொல்கிறார்கள். நல்லது, “நான் யாருடன் உறவு கொள்ள வேண்டுமென்பதும், அதுவென்ன மாதிரியான உறவென்பதும் என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதற்கும் வழியில்லையெனில் பின்னெதற்காக மனித உரிமை கழகம்?”
சரி தவறென எந்தவொரு விசயங் குறித்தும் முடிவெடுக்கக் கூடிய அல்லது தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் பெற்றவர்களாய் விடாப்பிடியான பிற்போக்குத்தன வாதிகளே இருக்கின்றனர். கருத்தரிப்பிற்கின்றி நிகழும் பிறவெல்லா புணர்ச்சிகளும் இயற்கைக்குப் புறம்பானது என்றுதான் படித்த பதர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றன. இயற்கைக்கு புறம்பானது அல்லது விரோதமானதென எதுவுமில்லை. குழந்தை பிறப்பில்லாத உடலுறவு இயற்கைக்கு விரோதமானதென்றால் சுயமைதுனம் செய்துகொள்வதும் குற்றம்தான். இப்படி மிகமோசமாக வெகுஜன சிந்தனைகளை மழுங்கடித்திருப்பதில் ஊடகங்கள் அதிகாரமையங்கள் என எவ்வளவோ பேருக்கு பங்கிருக்கிறது. மற்றவர்களின் எதிர்பார்ப்பிற்காகவும் கட்டாயத்திற்காகவும் தங்களின் சுயவிருப்பங்களையும் நேசத்தினையும் மறைத்து இயல்பான காதலை சொல்ல பயந்தே தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள் எவ்வளவோபேர்.
ஒரு ஆண் இன்னொரு ஆணை விரும்புவதற்கு அடிப்படையாய் என்ன காரணமிருக்குமென பலரும் கேட்பதுண்டு. ‘TOP, BOTTOM, VERSATILE’ என ஓரினப் புணர்ச்சியாளர்கள் குறித்து பொதுவாக சொல்லப்படுகிற மூன்று வகைகளில் TOP வகையினர் தங்களின் குறியை பிற ஆண்களிடம் சுவைக்கக் கொடுக்க விரும்புகிறவர்களாகவும் BOTTOM வகையினர் பிற ஆண்களின் குறிகளை சுவைக்க விரும்புகிறவர்களாகவும் குத புணர்ச்சியை விரும்புகிறவர்களாகவும் இருப்பர். மூன்றாவது வகையான VERSATILE வகையினர் பரஸ்பரம் தங்களின் குறிகளை சுவைக்கிறவர்களாக இருக்கிறார்கள். எந்த வயதில் இதுமாதிரியான விருப்பங்கள் துவங்குகிறது என்பது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியாதவொன்று. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணங்களைக் கூறுகிறார்கள். தோழி லிவிங் ஸ்மைல் வித்யா தனது வாழ்க்கைக் குறிப்புப் புத்தகத்தில் குறிப்பிடுவதுபோல் சிலருக்கு இயற்கையிலேயே தங்களின் பெண் தன்மையை உணர்ந்துகொள்ள முடிகிறது. இதுதவிர சில சமயங்களில் தவிர்க்கவியலாத காரணங்களால் ஒரே வகையான உடல்களை விரும்புவதும் நிகழ்கிறது. மாணவவிடுதிகள் சிறைச்சாலைகள் போன்றவற்றில் மிகுதியான தனிமை உடல்வேட்கை ஏற்படுத்தும் பெரும் தவிப்புகளென சகிக்கவியலாத துயரங்களுக்குப்பின் தனக்கு இணக்கமான உடலை சிலர் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். நாம் ஹோமோக்களை பேசுகிற அளவிற்கு இன்னும் லெஸ்பியன்களைப் பற்றி பேசத்துவங்கவில்லை. விரைவில் அதுவும் பேசப்பட வேண்டியது அவசியம்.
மருத்துவ ரீதியாக என்ன மாதிரியான காரணங்களைச் சொல்கிறார்கள்? குரோமோசோம்கள் பிரச்சனை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன? உடலிலுள்ள X Y குரோமோசோம்களில் ஆண்களுக்கான Y குரோமோசோம் முழுமையாக மூளைக்கு செல்லாதிருக்கும் பொழுதுதான் திருநங்கைகளாகின்றனர். இதன் அளவு வெவ்வேறாக இருப்பதைப் பொறுத்துதான் GAYயினரில் வெவ்வேறான பிரிவினர் வருகிறார்கள். மற்றபடி சூழல் காரணமாக சொல்லப்படுவது மிகக் குறைவான விகிதத்தில்தான். இன்னும் சொல்லப்போனால் தங்களை அடையாளங் கண்டுகொள்கிறார்கள் என்பதுதான் சரியாயிருக்கும். வளரத்துவங்குகிற நாட்களில் இந்த உணர்வு மனதில் ஏற்படுத்துவது ஒருவிதமான தவிப்பினையும் தனிமையுணர்வினையும் தான், மற்றபடி உடல்ரீதியான எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. சிலர் ஓரினப்புணர்ச்சியாளர்கள் எப்பொழுதும் உடலுறவிற்கான வேட்கையிலேயே இருப்பார்களென கற்பனை செய்துகொள்வதுண்டு, இயல்பான அவர்களின் உணர்வுகளை முடிந்தவரை கொச்சைப் படுத்த வேண்டும் என்பவர்கள் மட்டும்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள். வளரும் பருவத்தில் தங்களின் உடல் பற்றின சந்தேகங்களை தைர்யமாக கேட்கும்படி நமது குழந்தைகளைப் பழக்கினால் பரஸ்பரம் பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்குமான புரிந்துணர்வு ஏற்பட்டுவிடும்.
பொதுவன அனுபங்களிலிருந்து சில சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது.
ஊரில் சில மாதங்கள் PIMP ஆக வேலை பார்த்த அனுபவம் எனக்குண்டு. நான் பார்த்தது பெண் விபச்சாரிகளுக்கானதுதான் எனினும் தொழில் நடக்கும் முள்ளுக்காட்டில் ஓரிணப் புணர்ச்சியாளர்களும் கூடுவதுண்டு. என் ஊரான திருமங்கலத்தில் ஓரினப்புணர்ச்சியாளர்கள் கூடுவதற்கென நிரந்தமான இரண்டு இடங்களுள்ளன, ரயில்வே ஸ்டேசன் ஒட்டிய பகுதி மட்டும் ஊரின் எல்லையிலிருக்கும் எங்கள் பகுதி முள்லுக்காடு. இதுதவிர தற்காலிகமான இடங்கள் சிலவும் உள்ளன. பெரும்பாலனவர்கள் இவர்களில் TOP கவும் கொஞ்சம்பேர் BOTTOM ஆகவும் இவர்களில் இருப்பார்கள், இந்த பகுதியைப் பற்றி சொல்லும்போது சட்டத்திற்குப் புறம்பான பகுதியென சிலர் குறிப்பிடுவதுண்டு. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மதுரையில் உடலுறவு தேர்வு குறித்து நடத்தப்பட்ட தொண்டு நிறுவணம் ஒன்றிற்கான கனக்கெடுப்பில் ஆயிரத்தி நானூறு பேர்வரை double ducker களாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். முதலில் இதற்கான அர்த்தம் எனக்குப் புரிந்திருக்கவில்லை. விசாரித்தபின்புதான் இவர்கள் இருபால் புணர்ச்சியையும் விரும்புபவர்கள் எனத்தெரிந்தது.
தமிழ் திரைப்படங்கலைப் பொறுத்தவரை திருநங்கைகள் நாயகனை சந்தோசப்படுத்தும் ஊறுகாயாகவோ பாடல்களில் செயற்கை முலை காட்டி வந்து ஆடிச்செல்பர்களாகவும்தான் இருக்கிறார்கள். மிகமோசமாக சித்தரிப்பது, அல்லது கேவலமான sentiment காட்சிகளால் கொலைசெய்வது இதைத்தான் செய்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் ஓரினப் புணர்ச்சியாளர்கள் குறித்தும் திருநங்கைகள் குறித்தும் மிகச்சிறந்த திரைப்படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. WANG-KAR-WAI ன் HAPPY TOGETHER, KIM-KI-DUK ன் BREATH என தொடர்கிற வரிசையில் ஹாலிவுட்டின் பிரபலமான நாயகர்களான கெய்னு ரீவ்ஸ், ஷ்யான் பென் போன்றோர்கூட ஓரினப் புணர்ச்சியாளர்களாய் நடிக்கிறார்கள். நமது நிலை?
எல்லாதரப்பிலிருந்தும் இந்த விசயம் மட்டும் எதிர்க்கப்படுவதற்கு என்ன காரணமாயிருக்குமென யோசிக்கையில் வலுவாக இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் சம்பிரதாயங்கள் ஒழுக்கங்கள் அனைத்தையும் மீறுவது அல்லது கேள்விகேட்பது என்பதால்மட்டும்தான். பலகாலமாக பலவிசயங்களுக்காக விடுதலை வேண்டுமென கேட்டுப் போராடுபவர்கள் அல்லது மக்களின் தொண்டர்களாய் தங்களைக் கூறிக் கொள்பவர்கள் அத்தனைபேரின் போலித்தனங்களும் வெளிப்பட்டுவிடும். வெகுஜன மக்களின் பார்வை இவ்விசயத்தில் என்னவாயிருக்கிறதென நம்மிலிருந்தே பாருங்கள். தான் ஒருபாலீர்ப்பு கொண்டவன் என்று சொல்பவரை ஏற்றுக் கொள்ளும் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் இங்கு எத்தனைபேர்? சர்வதேச குற்றவாளிகளைப் பார்ப்பதைப் போல்தான் பார்ப்பார்கள். தொண்டு நிறுவனத்துக்காரர்கள் எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் வித்தை தெரிந்தவர்கள் எனபதால் அவர்களின் அக்கரையை நான் மதிப்பதில்லை, வெகுஜன ஊடகங்கள் அடுத்தகட்டமாய் என்ன செய்யப்போகின்றன?
இன்றைக்கும் உலகளவில் நாம் மதிக்கின்ற எவ்வளவோ ஆளுமைகள் பலர் ஓரினப்புணர்ச்சியாளர்களாய் இருக்கிறார்கள், பல நாடுகளில் சட்டபூர்வமான அங்கீகாரத்துடன் இவர்களின் திருமணமும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நாம் இனிமேலும் கலாச்சாரமென்னும் போலித்தனமான காரணம் சொல்லிக்கொண்டிருந்தால் நம்மைவிட முட்டாள்கள் யாரும் இருக்கமுடியாது.கலாச்சாரமென்பது வாழ்க்கைமுறைதான், எல்லாகாலங்களிலும் ஒரேமாதிரியான வாழ்க்கைமுறை இருக்க வேண்டுமென்பது கட்டாயமுமில்லை. இல்லாத புதிய விசயம் ஒன்றுமில்லை, காலங்காலமாக இருந்துவருவதுதான், பிரிட்டீஸ் காலத்தில் போடப்பட்ட முட்டாள்தனமான சட்டங்களில் இதுவும் ஒன்று, மெக்காலே கல்வி முறையைப்போல். சட்டம் இயற்றிய நாட்டில்கூட இன்று பெரும் மாற்றம் ஏற்ப்பட்டிருக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான gay organasations உள்ளன. இங்கு மட்டும்தான் சட்டம் கொண்டுவரலாமென யோசிக்கும் போதெ கொந்தளித்து அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.புரட்சி வந்துவிடுமென கொக்கரிக்கிற கூட்டம்கூட இவ்விசயத்தில் வாய்திறக்கக் காணோம். எல்லாமுமே ஒரே நாளில் மாறிவிட வேண்டுமென நானும் நிர்பந்திக்கவில்லை,ஆனால் மாற்றத்தினை நோக்கின நகர்தலில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக