Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

செவ்வாய், 18 மே, 2010







மணற்கூடுகள்....


எல்லா வெயில்காலங்களையும் போலில்லை இந்த வருடம், அடுத்த வெள்ளாமையைப் பற்றி பேசின தினங்கள் எப்பொழுதோ மறைந்து போனதொன்றாகிவிட்டிருக்க பிள்ளைகள் இப்பொழுது தறிக்கம்பெனிகளுக்கும் பிளாஸ்டிக் கம்பெனிகளுக்கும் வேலைக்குப் போகத் துவங்கியிருந்தனர். ஊரின் பாதிக்குமதிகமான வீடுகளில் விவசாயத்தினை நம்பியிருக்க வேண்டிய நிலையில்லாமல் வெவ்வேறு தொழில்களை பார்த்துக் கொண்டிருந்தனர். எலும்புகள் துருத்த பனங்காய் வண்டிகளை ஓட்டிவிளையாடும் சிறுவர்களுக்கு நினைப்பெல்லாம் திருவிழாவைப் பற்றியதாகத்தானிருந்தது எப்பொழுதும். வெள்ளையம்மா வீட்டில் பொம்பளைப் பிள்ளைகள் நாலும் வேலைக்குப்போயின, தறிக்கம்பெனிக்கு. கடைசியாகப் பிறந்த தம்பியை மட்டும் பள்ளிக்கூடம் அனுப்பிக் கொண்டிருந்தனர். செம்மண் புழுதியப்ப வெயில் மழையென எதைப்பறியதான அக்கறையுமின்றி கம்பெனிக்குப் போகிற பிள்ளைகளுக்கு காலநேரம் இல்லை வேலை முடிந்து வருவதற்கும் போவதற்கும். நாற்பது வயதை நெருங்கியிருக்கும் ஆத்தாவின் கருத்த உடலில் முறுக்கேறிப் போயிருந்தன தசைகளும், நரம்புகளும் தீவிரமாய். அவளைப் பார்த்துப் பார்த்தே உழைக்கக் கற்றுக்கொண்ட பிள்ளைகளின் நினைப்பு முழுக்க சதாவும் சுற்றிக் கொண்டிருந்தது கொஞ்ச வருசம் முந்தி விற்றுவிட்டிருந்த காட்டைத் திருப்பவதில்தான்.

அய்யா இறந்து எட்டாவது மாசத்தில் பிள்ளைகள் ஐந்தையும் நடுவீட்டில் பட்டினியாய் போடுவது இனியும் முடியாதென யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிரயம் முடித்துவிட்டு வந்தாள், அந்தப்பிள்ளைகளின் எல்லா சந்தோசங்களும் அந்தக் காட்டில்தான் கிடந்தன என்பதைத் தெறிந்து கொள்ளாமலேயே. கனவுகளின் ரேகைவிரிந்த அந்தப்பிள்ளைகளின் மனம் முழுக்க வயக்காட்டின் துவரைகொடிகளின் வாசத்தினைப் பற்றிய நினைப்பும் கொடிக்காகிணத்து குதியாட்டமும் நாளில் சில முறைகளாவது நினைத்துப் பார்த்துக் கொள்ளமுடிகிறதாயிருந்தது. மூத்தவளுக்கு ஒத்தநாடி உடல், மடித்துக் கட்டிய பாவாடைக்குக் கீழாக லவாப்பழ நிறத்தில் அவள் கால்களில் நிலைகொள்ளாத வேகமிருக்கும் தறி ஓட்டுகையில். அவலுடலுக்கு அவ்வளவு வேலைகள் பார்க்கிறாளென்பதனை அடுத்தடுத்திருந்த தங்கச்சிகள்கூட ஆச்சர்யமாகத்தான் பார்த்தார்கள். நுனியில் ஒளிரும் வசீகரமான மூக்கவளுக்கு. கண்ணாடி பார்க்கிற நேரங்களில் எப்பொழுதாவது தனித்து ரசிப்பதைத் தவிர்த்து அதைப் பற்றின கவனமொன்றுமில்லை அவளிடம். கடைசி தங்கச்சியைத் தவிர்த்து ருதுவெய்திவிட்டிருந்த மூன்று பிள்ளைகளுக்கும் கல்யானம் செய்து பார்ப்பதென்பதை சாகஸமாக நினைத்த ஆத்தாளுக்கு அதைப்பற்றின கவலையேதுமில்லாமல் இந்தப்பிள்ளைகள் காட்டை மீட்கவேண்டுமென உழைப்பதை நினைத்து அவசமில்லாமலில்லை. எரிந்து நிர்கதியற்றுக் கிடக்கும் இந்தப்பகுதி நிலங்களில் என்னயிருக்கிறது மிச்சமாய் இனி விளைப்பதற்கும் வெள்ளாமை செய்வதற்கும். இரும்புக்கூடாரங்கள் கவிழ்ந்த நீள்கட்டிடங்கள் வயல்வெளியின் பொட்டல் பகுதிகளெங்கும் அதிவேகமாய் தறிச் சத்தங்களை எதிரொலிக்க விட்டபடியிருக்க காவலுக்கு வைக்கப்படும் பொம்மைகள் கொடுந்தனிமையில் வானம் பார்த்துக் கிடந்தன ஆங்காங்கே.

புதிதாக தம்பி என்ன செய்தாலும் முதலில் சொல்லிவிடுவது அக்காக்களிடம்தான் இப்பொழுது வரையிலும். நிதந்தோறும் பிடித்து விளையாடும் பட்டுப்பூச்சிகளின் வினோத நிறத்திலிருந்து உடைந்த கண்ணாடிகளின் மண்ணப்பிய அழகிய நுனைகள் வரை அவன் காட்டும் அதிசயங்கள் வினோதமானவை, சுவாரஸ்யமானவை. பள்ளிகூடம் போவதிலிருந்த ஆர்வத்தைவிடவும் அவனுக்கு மிகுந்திருந்தது இதுமாதிரியான விசயங்களுக்கு காடுமேடுகளில் சுற்றுவதில்தான். வீட்டில் அய்யா இல்லாமல் போய்விட்டதும் அக்காக்கள் வேலைக்குப் போவதிலும் மாற்றமொன்றையும் உணர்ந்திருக்கவில்லை அவன். ஆத்தாவும் அக்காக்களும் காட்டிய பாசத்தில் எப்பொழுதும் நிறமங்காத சுவராகவேத் தெரிந்தது அவ்வீடும் அவர்கள் அவ்வளவு பேரின் முகங்களும். மழைவிட்ட பகல்பொழுதுகளில் வீட்டில் ஊரும் ஈரத்தில் எறும்புகள் சாலையமைத்து கடந்து போகும் அடுத்த வீட்டை நோக்கி. அவ்வளவிற்கும் வழியமைத்து துணையாய் விரல்களை கோடுகிழிக்க கொடுக்குமவனை அக்காக்கள் திட்டுவதில் செல்லமான கோபமிருக்கும். அவனாக திரிந்து வீடுவருகையில் குளிக்கவைப்பதற்கென அக்காக்களில் ஒருத்திதான் மீண்டும் கம்மாய்க்குக் கூட்டிப்போக வேண்டும்.

மில்லுக்குப் போகிற பிள்ளைகளுக்கு பஞ்சமில்லை ஊரில். அப்படியாகிப்போயிருந்த நிலையில் கம்பெனிகள் பெருக்காமல் என்ன? ஆனாலும் கொஞ்ச நஞ்ச விவசாயம் பார்க்காமலில்லை ஆட்கள் இன்னும். துவரையும் எள்ளும் பார்க்காமல் சில வருசங்களாக புரண்டு கிடந்த கரிசல் காடுகள் சமீபமாய் மிளகாய்த் தோட்டத்தின் காரமான பச்சை நெடியில் நிறைந்து போயிருந்தது. அம்மாவுடன் காட்டுராசா தோட்டத்திற்கு பழம் பழுக்கிற காலங்களின் அதிகாலையில் பழம்பொறுக்கப் போவான் இவனும். மிளகாய்ப் பழத்தின் காரநெடியில் தும்மல் வந்து கொஞ்ச நாட்கள் மூக்கெரிந்தாலும் காட்டுராசா வீட்டு அத்தை கொண்டுவரும் காலைநேரத்துக் கஞ்சியிலிருக்கும் வினோத சுவைக்காகவே நாளடைவில் பழகிப்போயிருந்தான். அப்பா இல்லாத பிள்ளையென்று அந்த அத்தைக்கு அளவில்லாத ப்ரியம் இவன்மேல். இவர்கள் விற்றிருந்த காட்டையும் சேர்த்து அவர்கள்தான் வாங்கியிருந்தார்கள் என்பதால் அக்காக்கள் அவ்வளவு பேருக்கும் இவர்களின் மீது வருத்தம்தானெனினும் யாரும் சொல்லிக் கொள்வதில்லை. வஞ்சகமில்லாமல் அந்த அத்தை ஏண்டி ஒருத்தியும் வீட்டுப்பக்கம் வரமாட்றிய? என இவர்களில் யாரிடம் கேட்டாலும் பதில் ஒரே மாதிரியாகத்தானிருக்கும் கம்பெனியில் ஆளில்லாததால் ஓ.டீ பார்க்கிறோமென்று. சொல்லி சொல்லியே இந்த சமயங்களில் நன்றாக பொய் சொல்லப் பழகியிருந்தன அந்தப் பிள்ளைகள்.

கடைசித் தங்கச்சியும் ருதுவெய்தின தினத்தில்தான் ஐந்தாவதிலிருந்து தம்பி ஆறாவது வகுப்பிற்குச் சென்றிருந்தான். வீட்டில் முன்னில்லாதபடி இவளின் சடங்கை கொண்டாட்டமாய் நடத்தவேண்டுமென விடாப்பிடியாய் இருந்தன மற்றப் பிள்ளைகள் மூன்றும், தங்களின் சடங்குகள் எப்படி நடக்க வேண்டுமன விரும்பி நடக்காமல் போன ஏக்கத்தில். அதிகக் கொண்டாட்டம் தம்பிக்குத்தான். ஆனால் கொஞ்ச நாட்களுக்கு அவளுக்குப் பக்கத்தில் போகக்கூடாதென அம்மாவும் மற்றவர்களும் சொன்னதில்தான் கொஞம் சங்கடப்பட்டான். அக்காவுக்கும் இவனைப் பக்கத்தில்வைத்து பார்க்காமல் நிலைகொள்ளாதென்பதால் அவனைப் பள்ளிக்கொடத்திற்கு லீவ் போடச்சொல்லிவிட்டு துணைக்கு இருக்கச் செய்துவிட்டாள். நிலாவைப் பாம்பு விழுங்குவதாக எப்பொழுதோ மூத்தக்கா சொன்ன கதையின் தினமான அமாவாசையில்தான் சடங்கு வைத்தார்கள். காட்டுராசா வீட்டிலிருந்துதான் எல்லாம் வந்திருந்தது அக்காவின் சீராய். அக்காக்கள் சாமர்த்யமாக எதுவாகயிருந்தாலும் முதலிது எங்களுடையதாகத்தான் இருக்கவேண்டுமென சொல்லி விடாப்பிடியாய் நின்றதைப் பார்த்து கிறுக்குக் கழுதைகளுக்கு தங்கச்சி மேல அம்புட்டுப்பிரியம் என்று பேசிக்கொண்டார்களேயொழிய ஒருவரும் வேறுமதிரியாய்ப் பார்க்கவில்லை. அம்மாவிற்கு எல்லாம் புரிந்திருந்த போதிலும் எதையும் அவள் கேட்டுக் கொள்ளவில்லை.

சொந்த பந்தமென இருந்ததெல்லாம் நல்லது கெட்டதிற்குக்கூட வரத்தயங்குகிற சென்மங்களாகவே எப்பொழுதும் இவர்களிடமிருந்து விலகியிருக்கவே நினைத்ததால் இந்த நாலு பிள்ளைகளையும் எப்படிக் கரையேற்றுவதென்கிற கலக்கமிருந்தது ஆத்தாளுக்கு. கம்பெனிக்கு வேலைக்குப் போகிற பிள்ளைகளில் நிறையபேர் யாராவது பையன்களோடு பழகி சீக்கிரமாகவே கல்யாணம் செய்து கொள்வது சகஜமாகிவிட்டிருந்தது சுற்றியிருந்த ஊர்களில். அப்படியும்கூட இந்தப் பிள்ளைகள் எதுவுமில்லாமல் சதாவும் காட்டைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறதுகளென வருத்தமிருந்தது அவளுக்கு. முறையாகப் பெண்கேட்டு வந்து இதுகளுக்கு கல்யாணம் நடக்குமென்பதை ஆசைக்காகக்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை அவளால். வெயில் மழை பாராமல் காட்டு வேலைக்குப் போகிறவள் வீட்டில் தனித்துக்கிடக்கிற வேதனை தாளாமலேயே ஆனமட்டும் யார் காட்டிலாவது வேலைக்குப் போவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டிருந்தாள். அந்த ஊரின் காடுகளெங்கும் எரிந்து முடிந்திருந்த வெறுமையில் இவளைப் போன்ற எவ்வளவோபேர் சொந்த நிலத்தில் கூலியாக வேலை பார்க்கிற துயரத்தினை விட்டுவிட்டிருந்தது. வேதனைகள் எதனையும் காட்டிக் கொள்ளாமல் வேலை செய்யும் பெண்கள் சிரித்தும் பேசியும் ஊர்க்கதைகளில் நாட்களை கடத்தினர். எப்பொழுதாவது காட்டைப் பற்றின நினைவு வருகையில் வீட்டில் முன்பு அடைத்து வைத்திருந்த துவங்கொலைகளின் வாசனையினை பூர்ணமாக உணர்வாள்.

இயந்திரங்களுக்கு மத்தியில் உருளும் துணிமூட்டைகளை நகர்த்தியபடியே சீக்கிரமாக வீவராக வேண்டுமெனக் கனவிருந்தது முன்பு பிள்ளைகள் நான்கு பேருக்கும். இரண்டாவது பிள்ளை முதலில் வீவராக மூத்தவளும் அடுத்தவளும் அடுத்தடுத்து வீவரானார்கள், கடைசிப் பிள்ளை மட்டும் குவாலிட்டி செக்கிங்கிற்குப் போய்விட்டாள். அலுப்பில்லாத வேலையென்பதோடு எட்டாவதுவரை அவள் படித்திருந்தாள் என்பதால் மற்ற மூன்றுபேரும் அவளை கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டுமென நினைத்துக் கொண்டார்கள். மூத்தவளுக்கும் அடுத்தவளுக்கும் சதாவும் போட்டியிருக்கும் யார் நம்பர் அதிகமாக ஓட்டுவதென. சிரமெமெல்லாம் வைண்டர்களுக்கும் பேட்டரி பில்லர்களுக்கும். இந்தப் பிள்ளைகளுக்கு பேட்டரி பில்லர்களாக வைக்கிற பிள்ளைகள் மூன்று மாதங்களுக்கு மேல அந்த லைனில் வைக்காதுகள். ராட்சசி எப்படி ஓட்டினாலும் நூறு நம்பர் வந்திடப்போவுது, கொள்ள போறது மாதிரி பத்து இருபது நம்பர் அதிகமா ஓட்டின அவங்குடுக்கிற பத்து ரூபா பெருசுன்னும் பேயா திரியுதுங்க எனப் புலம்புவார்கள். சில சமயங்களில் பிட்டர்களும் சூப்பர்வைசர்களுமேகூட ஏம்மா இந்தப்பாடு படுறீய, உடம்புக்கு எதாச்சும் வந்திச்சுன்னா அப்பறம் நோக்காடு பாக்க ஆஸ்பத்திரி போகனும் செத்துப் பொறுத்துப் பாருங்க... என்பார்கள். சிரித்துக் கொண்டே அந்தப் பிள்ளைகள் மழுப்பி சமாளித்து விடும்ங்கள்.

தங்கச்சிகள் ஒவ்வொவருவரும் மணம் முடிந்து போனதன் பின்பாகவே தனக்கான விருப்பங்கள் குறித்து யோசிக்க வேண்டுமென விடாப்பிடியாய் இருந்தவளிடம் என்ன செய்தாலும் அக்காவிற்குப் பின்பே தாங்களும் மணம் செய்து கொள்வதெனெ சொல்லி விட்டன அந்தப்பிள்ளைகள். சதைகள் எலும்புகள் கொண்ட பிணையப்படிருந்த பொம்மைகளென நினைவுச் சுழலுக்குள் பதிந்து போனவைகளையே செய்துப் பழகிப்போன இவர்களின் உடலிலிருந்து சதாவும் உதிரும் மிச்சப் பஞ்சுகள். பஞ்சுகள் கொத்துக் கொத்தாய் வீட்டில் உதிர்வதை சேர்த்து வைக்கவும் விளையாடவும் அக்காக்களுக்கும் தம்பிக்கும் குதியாட்டமிருக்கும் இரவுகளில். தினந்தவறாது இப்படியுதிரும் பஞ்சுகளின் பொதி சேர்த்து ஆளுக்கொன்றாய் தலையனை செய்து விடலாமென்கிற கனவு கொண்டிருந்த தம்பி, ஜவுளிக்கடை பிளாஸ்டிக் தாள்களிலும் பைகளிலுமாய் சேகரித்து வைத்திருந்தான் சிறு சிறு பொதிகளாய். அவனுக்கு வாங்கிக் கொடுப்பதற்கு யோசிக்காத பிள்ளைகள் சம்பளம் உயர்த்தியிருந்த அந்த வருட மே மாதத்தில்தான் ஊதா நிறத்தில் கோடுபோட்ட சட்டையும் டவுசரும் எடுத்துக் கொடுத்தார்கள், அம்மாவிற்கு வெந்தயக் கலரில் சேலையும், இந்தப் பிள்ளைகளுக்குப் பாவாடை தாவனிகளுமாய் கொஞ்சம் வாங்கி வந்திருந்தைப் பார்த்து வேப்பங்கொழுந்துகள் தளிர்விடுதலைக் கண்ட சந்தோசம் அவளுக்கு. அதேவீடுதான் மாறாத கூரைதான், எல்லாவற்றிலிருந்தும் கசிந்த பிரகாசம்தான் இவர்களை ஆச்சர்யப்படுத்தவும் உறக்கம் பிடிக்காத இரவில் தூரத்திலிருக்கும் காட்டை நினைத்து பார்த்துக் கொள்ளவும் செய்திருந்தது.

வெள்ளாமை செழித்திருந்த நாட்களில் காவலுக்குப் போகும் அய்யாவுடன் பிள்ளைகள் நாலும் காட்டுக்கு உடன் போகுங்கள். எவ்வளவு மறுத்தாலும் கேட்காத பிடிவாதத்தோடு இவர்களின் சண்டையை பொறுக்க மாட்டாமல் தம்பியைத் துணைக்கு வைத்துக் கொண்டு அய்யாவுடன் அம்மா அனுப்பிவைக்கும். பூப்போட்ட இவர்களின் வெவ்வேறு நிறப் பாவாடைகளிலிருந்து உதிரும் பூக்கள் காடு முழுக்க உதிர்ந்து கிடக்கும் இருளில். உதிரும் பூக்கள் அவ்வளவிலும் அய்யாவிடம் கேட்ட கதைகளை சேமித்து வைத்திருந்தனர். துவரை செடியாகவோ எள்ளுச் செடியாகவோ எதுவாக இருந்தாலும் செடிகளின் மத்தியில் உறங்குவது உடலையும் மனதையும் விட்டு எளிதில் பிரித்துவிட இயலாத ஈர்ப்பு கொண்டதாயிருக்கும். பக்கத்துக் காடுகளில் பேச்சுத் துணைக்கு வந்திருப்பவர்கள் சகிதமாய் பகிரும் கஞ்சியில் கரிசல் மண்ணின் வாசமும் தவறாமலிருக்கும். இவர்களை உறங்கப்போட்டுவிட்ட நெடுநேரத்திற்குப் பின்பாகவே உறங்கப் போவார் அய்யா. ஆள் மாற்றி ஆள் பக்கத்து காடுகளிலிருப்பவரும் இவரும் பார்த்துக் கொள்ளவும் தூங்கவும் நேரம் பிரித்துக் கொள்வார்கள். பிள்ளைகள் நான்கும் காட்டில் படுத்திருப்பதைப் பார்க்க செடிகளில் ஒவ்வொன்றிலும் தம் மகள்களின் சிரிப்பிருப்பதாகப் படும் அய்யாவிற்கு. அந்த சிறிய நிலத்தின் எல்லா மூலைகளிலும் ஒளிந்து கிடந்த அந்தக் குடும்பத்தின் சந்தோசம் ஒரு பிற்பகலில் அய்யா இறந்து போனபின் அழிந்துபோகத் துவங்கிவிட்டிருந்தது.

யாருக்கு சந்தோசமோ இல்லையோ அம்மாவிற்கு சந்தோசமளிக்கும் படியாய் மூத்தவளைப் பெண்கேட்டு வந்திருந்தனர் தூரத்து சொந்தத்திலிருந்து. காலில் சக்கரம் கட்டிவிட்ட பரபரப்பு அம்மாவிற்கு. அக்கம்பக்கத்தில் சொல்லிவிட்டு வீடு திரும்புகிற நேரத்திற்கெல்லாம் காட்டுராசா மாமாவின் வீட்டுக்காரம்மா வந்து நின்றது முதல் ஆளாய். புள்ள வந்திருச்சா மயினி எனக் கேட்டபடியே வாங்கி வந்திருந்த பூவை தண்ணியில் போடச் சொல்லிவிட்டு வீட்டை ஒதுங்க வைக்கத் துவங்கியது உரிமையுடன். அப்பொழுதே கல்யாணம் நடத்திப் பார்த்துவிட்ட பாதி சந்தோசம் வந்திருந்த ஆத்தாவுக்கு மூத்தவள் ஒத்துக்கொள்வாளா என்கிற பயம்தான் அதிகமும். ஓ. டீ பார்க்கவேண்டமென சொல்லி வரச்சொல்லியிருந்தவளிடம் அத்தைதான் விசயத்தை மெதுவாக எடுத்துச் சொல்லியது. கண்களில் தடுமாற்றம் வழிய நின்றவள் எந்தப் பதிலுமில்லாமல் அம்மாவைப் பார்க்க சலனமில்லை அவளிடம். நேரமும் கொஞ்சமாகவே மிஞ்சியிருந்த கொடுமையில் சமாதானம் சொல்வதற்கும் அவகாசமில்லை பெரிதாய். மெளனத்தின் நீண்ட படலங்கள் சில நிமிடங்கள் படர்ந்து கிடந்த வீட்டினுள் எதுவும் புரியாதவனாய்த் தம்பி அவ்வளவு பேரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். சில்லரைக்காசுகளைக் கொடுத்து அத்தை அவனை கடைக்குப் போய்வரச் சொன்னாள். மிச்சமான நம்பிக்கையாய் அப்போதைக்கு மற்ற மூன்று பிள்ளைகளைத் தவிர்த்து வேறொன்றும் இருக்க முடியாதெனத் தோன்ற கேட்டுக்கொள்ளாமலேயே அந்தப் பிள்ளைகள் அக்காவிற்கு சமாதானம் சொல்லின. சாதாரணத்தில் நடக்கிற விசயமில்லையெனினும் பரஸ்பரம் தங்களுக்குள் அந்தரங்கமான உறவுப் பிணைந்திருந்த அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளவும் சரிசெய்யவும் முடியும். கொஞ்ச நேரத்திலேயே ஒப்புக்கு மெளனமாக அந்தப் பிள்ளை சம்மதித்து தயாராகி நின்றது.

சிடுமூஞ்சி முத்துக்குக் கல்யாணமெனக் கேள்விப்பட்ட யாரும் கம்பெனியில் ஆச்சர்யப்படாமலில்லை, யாரிடமும் அதிகம் பழகாத அவளிடம் எல்லோருக்கும் அன்பே மிகுந்திருந்தது. கல்யாணக்களை வந்திருப்பதாக கேலி செய்யும் பிள்ளைகளிடமும் மற்றவர்களிடமும் உயிர்ப்பில்லாததொரு புன்னகையும் தலையசைப்பையுமே தந்துவிட்டுப் போவாள். தங்கச்சிகளுக்கு அக்கா தங்களுடன் இருக்கப்போவதில்லை என்னும் துயரம் வந்த அதே நேரத்தில் அடுத்தடுத்த தாங்களும் அந்த ஊரிலிருந்தும் உறவுகளிலிருந்தும் தனித்துப்போகப்போகிறோமே என கலக்கம் வந்தது. திருமணத்திற்கு இரண்டுநாள் எஞ்சியிருந்த இரவில் பாதி உறக்கத்திலிருந்த அம்மா மூத்தவளின் படுக்கை வெறும் போர்வையுடன் கிடந்ததைக் கண்டு அடுத்த மகள்கள் இரண்டு பேரையும் சின்னவனையும் அவசரமாக எழுப்பி அக்காவ எங்க பிள்ளையளா? எனக்கேட்டது. பாதியுறக்கத்திலிருந்து விழித்த மயக்கத்தில் சிலநிமிடங்கள் எதுவும் விளங்கியிருக்கவில்லை பிள்ளைகளுக்கு. தம்பி அவிழ்ந்து கிடந்த டவுசரின் கொக்கியைப் போடவும் சாய்ந்து படுப்பதுமாய்க் கிடந்தான். பேச்சு சத்தத்தினூடாய் அக்காவைக் காணோமென்பதை மட்டும் சற்றுத் தெளிவாகக் கேட்டுவிட்டவன் சத்தமாக அலறத் துவங்கினான் இவர்கள் கட்டுப்படுத்த முடியாமல். சிரமத்தோடு அவனழுகையை நிறுத்திய அம்மா சத்தமில்லாமல் வெளியேபோய் தேடச் சொல்லி கேட்டது. சற்று யோசித்த பிள்ளைகள் பழைய டார்ச் லைட்டை மட்டும் எடுத்துத் தரச்சொல்லி அம்மாவை வரவேண்டாமென சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்கள்.

சத்தங்கசியாமல் ஒப்பாரி வைத்த அம்மாவின் முகம் முழுக்க அழுது அழுது வடிந்திருந்தது கண்ணீர்த் தடங்கள். வாசல் உரலில் போய் சற்றுநேரம் உட்கார்வதும் மீண்டும் வீட்டிற்குள் வந்து மாரிலடித்து அழுவதுமாய்க் கிடந்தவள் விடியும் பொழுதை நினைத்து இன்னும் அதிகமாய் அழுதாள். சின்னவனும் விடப்பிடியாய் அவர்களுடன் சென்று விட்டிருந்ததில் தனியாகிக் கிடந்த அம்மாவின் கவலையை சொல்லிக் கொள்ள முடியாமல் கதறினாள் அய்யாவின் பழைய புகைப்படமொன்றைப் பார்த்தபடி. நேரங்கழித்துத் திரும்பின பிள்ளைகளுடன் உடல்முழுக்க கரிசல்மண்ணும் எள்ளுச் செடிகளின் காய்களுமாய் வந்துகொண்டிருந்த மூத்தவளிடம் காட்டின் மிச்ச உடலைக் கண்டாள். கண்கள் மிரள வெறித்துக் கிடந்த அவளின் முகத்தினைப் பிடித்து சேர்த்தணைத்துக் கொண்டவள் எதுவும் கேட்காமலேயே அழுது கொண்டிருந்தாள் நிறுத்த முடியாமல். உணர்ச்சிகளெதுவுமின்றி உறங்கப் போனவளின் உடலில் முன்பு காணாத தளர்ச்சி தெரிந்தது. பார்த்த எல்லாவற்றிலும் அய்யா விட்டுப் போன காட்டை மட்டுமே உணரமுடிந்தவளால் அந்த ஊருக்கு சம்பந்தமே இல்லாத பனங்காட்டு கிராமத்தினில் வாழ்வதனை நம்பக்கூடிய விசயமாய் ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கவில்லை. காட்டைக் கொஞ்சங் கொஞ்சமாக தன் சேலைகளுக்குள் அள்ளிமுடிந்து கொள்ளத் துவங்கியவளின் சேகரிப்பில் முக்கால்வாசிக்கும் அதிகமான நிலம் வந்துவிட்டிருந்தது. கல்யாணத்தின் அத்தனை பரபரப்பிலும் உறுத்தாகக் கிடந்து நல்லது கெட்டதுகளைப் பார்த்த காட்டு ராசாவிடமும் அந்த அத்தையிடமும் எதுவுமே பேசாதிருந்தது என்னவோபோலிருந்தது பிள்ளைகளுக்கு. மறுவீடு வந்தவர்களை திருப்பியனுப்ப வந்த அந்த அத்தை இவளுக்கு சின்ன சின்னதாகக் கொஞ்சம் மூட்டைகளைக் கொடுத்தாள். ஒன்றை மட்டும் பிரித்துப் பார்த்தவளின் கண்களில் காட்டில் விளைந்திருந்து முதலறுப்பு எள். உடலில் சேர்த்திருந்த கரிசல் மண்ணெல்லாம் உதிர்ந்து நீராய் வெளியேற சத்தமாக அழுதபடியே அவளை அணைத்துக்கொண்டாள் நீண்ட நேரத்திற்கு.



நன்றி --- தாமரை மாத இதழ்

1 கருத்து:

  1. இந்த கதைதான் தாமரையில் வந்ததா,நல்லா இருக்கு, பத்தியை இன்னும் கொஞ்சம் பிரித்து போட்டால் படிக்க வசதியாக இருக்கும்,

    பதிலளிநீக்கு