புதன், 19 மே, 2010
கல் மண்டபம்
சிதைவுற்றவைகளின் தேக்கமாய் சூழல் கிரகித்தபடி அவ்வெளியில் மெல்ல மறையத் துவங்கி விட்டிருந்த இருளுக்குப் பிறகான செவ்விளம் வெளிச்சத்தில் உடைந்து சிதிலமான கற்கள் சாம்பல் நிற ஓவியமெனக் கிடக்கிறது. மேடு பள்ளங்கள் மிகுந்த மண்சாலையின் முடிவில் உயிரற்ற தாவரங்கள் ஸ்பரிசமற்று துவண்டு கிடக்க, தங்கிப்போன பகல் வெக்கையின் எச்சத்தில் எரிந்து பெருமூச்செரியும் அச்சமவெளி. சாத்தான்களின் ஓலமாய் எழும் நாயின் குரைப்பில் மெளனமாய் விரிந்து கிடக்கும் வேட்கை, அதிகாலை உறக்கமற்ற சேவல்களிலொன்றை விழுங்கும் ஆர்வத்தில். ரெளத்ரம் பொங்கும் விழிகளுடனும், பசி நிரம்பிய வயிற்றுடனும் அலைந்து கொண்டிருக்கும் அதன் கண்களில் நூற்றாண்டு கால வன்மத்தின் தேக்கம்.
கந்தல் மூட்டைகள் கொஞ்சத்தினை சுமந்தபடி மங்கலான வெளிச்சத்தினூடாய் நடந்து வருமவன் அசைவினில் சலனமுற்று கூச்சலிடுகின்றன பறவைகள். சமீபமாய் சவங்களின் இருப்பிடமாகிப் போயிருக்கிற இவ்விடத்துடன் அந்தரங்கத் தொடர்புடையவனெனத் தெரிந்தவனுக்கு யார் யாரோ சொல்லிப்போன கதைகளின் சொற்களை திரட்டியிருந்ததைப் போன்ற செந்நிறக்கண்கள். இந்த நூற்றாண்டு மனிதன் தானென அறுதியிட்டுச் சொல்ல முடியாதபடி இருந்தது அவனின் தோற்றம், பசியுற்றவனாய் தாபங்கள் மறந்து எதுவும் கிடைக்கப்பெறாத ஓரிடத்தில் ஏதாவது கிடைக்குமென்கிற ஆவலில் அவன் நடந்து வருவது யுத்த நிலத்தின் அகதியைய்ப் போன்ற பிரம்மையை உருவாக்கியது. அநாதியாய்க் கிடந்த கற்குவியலொன்றில் விழத் துவங்கியிருந்த சூர்யோதயத்தின் முதல் வெளிச்சக் கதிரை ருசித்துக் கொண்டிருந்தன தேரைகள் நிசப்தமாய்.
யாரிடமும் சொல்லப்படாமல் திரண்டிருக்கும் கதைகள் சாணம் மெழுகிய தரைகளில் பதிக்கப்பட்டிருக்கும் குழுமைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. பூனைகளற்ற ஊரின் சிதிலமடைந்த மண்வீடொன்றில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தின் நூற்றாண்டு பழமையான சாவியை தனிமையின் துயர்கொண்ட நாய்கள் சதாவும் தேடியபடி அலைகின்றன தங்களை விடுவித்துக் கொள்கிற தவிப்பில். மனிதயிருப்பு குறைந்து போயிருக்கும் கடைசித் தலைமுறையினரென குழந்தைகள் பிறந்து சில தசாப்த வருடங்கள் கடந்து போய்விட்டிருந்தது. முதியவளொருத்திக்கு அன்மையில் பிறந்திருந்த குழந்தை வரமா சாபமாவென்னும் கலக்கமிருந்தது மங்கலான இவ்வூர்க்காரர்களின் பார்வையில்.
துயரம் படிந்த நீள்கரங்களில் மெளனம் கரைத்துவிட்ட குருதியின் சூடு, அத்துவான வெளியெங்கும் இடைவெளியற்றபடி அலையும் காற்றலைகளை ஸ்வீகரித்துக் கொண்டிருந்தன அவன் விழிகள் நிசப்தமாய். ஊரெல்லையில் அவ்வதிகாலையில் குரைத்துக் கொண்டிருந்த நாய் மனித வாசனையற்ற இவன் நடந்து வருவதின் வினோதத்தில் இனம் புரியாதவொரு மிருகமென அச்சங்கொண்டு பின்வாங்கி நின்றது. முழங்கால்வரை அடர்ந்திருந்த காட்டுப் புற்களினூடாக உற்சாகமாக ஓடித்திரிகிற எலிகளின் மீது எவ்விதமுமான கவனிப்புகளும் கொள்ளாமல் நடந்து வந்தான்.
வறட்சியின் ரேகைகள் அழுத்தமான வேர்களென படர்ந்து கிடக்கும் அக்கிராமத்தில் முப்பது, நாற்பது குடிசைகள் மட்டுமே இருந்தன. இயல்பிற்கும் அதிகமாய் மெலிந்து உடல் வற்றிப்போன பெரும்பாலனவர்களின் தொழிலும் களவாடுதலாகவே இருந்ததுடன் ரோகிகளாகவும் பிணியுற்றவர்களுமாய் மிகுந்திருந்ததில் தவிர்க்கவியலாத சாபமிருப்பதை உணர்ந்திருந்தனர். கலவியின் வசீகரம் முழுமையாய் நிரம்பப்பெறாத அவ்வூர்ப் பெண்களின் அக்குள்களில் அடர்ந்திருந்தன மயிர்கள் சுருள் சுருளாய் வினோதமான வாசனையை கசியவிட்டபடி. பிரேதங்களின் ருசிக்குப் பழகின நாவுகளில் எப்போதுமிருக்கும் சதையின் வாசனை முன்னோர்களின் கனவுகளை செரித்தபடி. தானியக்குதிர்களில் நிரம்பிய காற்றில் சதாவும் அலைவுறும் வனமிருகமொன்றின் வேட்கையும், வெக்கையும் படர்ந்து கிடந்ததுடன் தீர்ந்து போன பின்னும் தேவைப்படுவதாயிருந்தது.
வெம்மை நிரம்பிய ஊரின் ஒன்றிரண்டு கிணறுகளிலும் கந்தகம் உதிர்ந்த நெடியே மிகுதியாயிருந்ததன்றி நீரிருப்பதற்கான அறிகுறிகள் இருந்திருக்க வில்லை என்பதால் நெளிவுகளடங்கிய குடங்களைத் தூக்கியபடி பெண்கள் மண்டபத்திற்கு அருகாமையிலிருந்த குளத்தில்தான் நீரெடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. விடிந்திருக்கலாம்?..கருக்கலற்ற வெளியில் நித்சலனமாய் காட்சியளிக்கத் துவங்கிவிட்டிருந்தன மண்டபத்தில் ஆங்காங்கே சிதிலமுற்றிருந்த சிலைகள், இன்னதென்று சொல்ல முடியாத முகங்களுடன். முலைகளற்ற ஓர் பெண் சிற்பத்தினை நினைவுபடுத்துவதைப்போல் குளத்தினை நோக்கி யுவதியொருத்தி மண்டபத்தின் ஆழ் மெளனத்தினை உள்வாங்கியபடி கொஞ்சம் தண்ணீருக்காக அங்கு வந்து கொண்டிருந்தாள். இயற்கைத் தம் இயல்பில் பெருமூச்சுவிடும் சாமத்திற்குப் பின்னால் எங்கோ நிகழ்ந்த வேட்டையில் மிருகமொன்று திண்ணப்படுவதை ஊளையிட்டு தெளிவுபடுத்தின நரிகள். விழியற்ற நீள்முகத்தின் வளைமூக்கை கவ்விப் பிடித்த்தபடியிருக்கும் சிறு, சிறு பூச்சிகளை உதிரமற்று வறண்டு போன விரல்களால் விரட்டிக் கொண்டிருந்தவன் அவ்யுவதியின் முகத்தில் படர்ந்திருந்த இருள் வெளிச்சம் கண்டுக்கொண்டவனாய் குளம் நோக்கி நடந்து வரும் அவளின் பாதங்களை புற்களினூடாகத் தேடினான்.
இந்நிலத்திற்கு சற்றும் சம்பந்தமற்றவனாய்த் தெரிந்த இவனை தயக்கத்தோடு பார்த்துச் சென்றவள் சில நிமிடங்களுக்குப்பின் அவன் தொடர்ந்து வருகிற பிரக்ஞையில் திரும்பியபோது சற்றேறக்குறைய நெருங்கி வந்துவிட்டிருந்தவனின் முகத்தில் எவ்விதமுமான உணர்ச்சி வெளிப்பாடுகளும் இல்லை. அவளுக்கு முன்பாக குளத்தில் இறங்கி கொஞ்சம் நீரள்ளிக் குடித்தவன் கண்களை மூடிக் கொண்டு அந்தச் சுவையை உள்வாங்கிக் கொண்டவனாய் பாத்திரமொன்றில் நீரள்ளித் திரும்பி நடந்தான். மிஞ்சியிருந்த உணவினை பிரித்தெடுக்கையில் பலநாள் பாதுகாத்த துர்வாடை கசிந்தது அதிலிருந்து. தயக்கமின்றி திண்ணத் துவங்கியவனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கொடும் பசியிலும் அருவருப்பூட்டியது அவ்வாடை,முகத்தை இறுக மூடியபடி அவசரமாகத் திரும்பிச் சென்றவளை அணிந்திருந்த அரக்கு நிற சேலையுடன் பார்த்தவனுக்கு அவ்வுடலின் சாயலும் ஓடியதும் பல காலங்களுக்கு முன்பு தவறிப்போன அவன் மனைவியின் நினைவுகளாய்ப் பெருக்கியது மனதில். நூல்கோர்த்து உலர்ந்து போன மலர்களின் மிச்ச வாசனையினைப் போல் கசியத் துவங்கிய ஞாபகங்கள் சுருள் சுருளாய் திருப்பிப் போட்டது கடந்த காலத்தினை.
இரண்டு சாலைகள் முட்டிக்கொண்டு திரும்பி கிளைபரப்பி எதிர்த்தாற்போல் புரண்டோடிய நீள்வெளியில், தம் வண்டிமாட்டினை மிக மெதுவாய்ப் பத்திக் கொண்டிருந்தவன் முணகலான தம் பாடலால் வெளிச்சமற்ற வீதியை சலனப்படுத்தினான். வண்டிக்குக் கீழாக ஆடியபடித் தொங்கிக் கொண்டிருந்த லாந்தரில் வெளிச்சம் முன்னும் பின்னுமாய் பரவி நகர்ந்தது உதிரும் சிறுபூக்களின் கூட்டமென. தவிட்டு நிறக்கண்கள் உருள விழித்திருந்த நரிகள் உருத்தெரியாதபடி அலைந்து கொண்டிருந்தன இலந்தைகள் உருளும் அந்த காடு முழுவதிலும். காட்டு இலந்தைகளின் வாசனையில் மூர்க்கங் கொள்ளும் ஸர்ப்பங்கள் பிணைந்து கிடந்தன சட்டை கிழித்து. பதிமூன்று வயதிருக்கலாம் அவளுக்கு. ஜடையைப் பற்றியிருந்த பூச்சரத்தில் உதிர்ந்தவைபோக, எஞ்சியிருந்தவைகள் சிறபமொன்றின் அழகான மிச்சமாய்க் கிடந்தன வாசனையைக் கசிய விட்டபடி. பேச்சிலும்,உரசல்களிலும் கலவிக்குப் பிறகான இளந்தம்பதிகளின் பிரத்யேகமான ஒட்டுதல். கருப்பு சட்டைப் போட்டிருந்த மரங்களை எண்ணிக் கொண்டிருந்தவளின் கண்களில் சேகாரமாகியிருந்தன அவ்வளவும் இடைவெளியின்றி, சில நிமிடங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இடது தொடையில் கிள்ளியபோது ஆவ் வென நினைவு திரும்பியவள் பதிலுக்குக் கிள்ளுவதும் அடித்துக் கொள்வதுமாய் அவனோடு பிணைய பூதமென பெருங்காற்று அவர்களை ஊடுருவிப் போனது. அருகாமையில் ஊர் நெருங்கியிருப்பதை உணர்த்தும்படி கேட்க முடிந்த கால்நடைகளின் குரல்களில் அடுத்த தினத்திற்கான துவக்கமிருந்தது.
மாரிக்காலம். சாமப்பூசைகளும் கடாபலிகளும் ஈரமிக்க வீடுகளெங்கும் சந்தோசத்தின் ரேகைகளாய்த் தூவிக்கிடக்க, ஊர் முழுக்க வியாபித்துக் கிடந்தன திருவிழாத் தோரணங்கள். ஊனும் உறக்கமும் தீராக்கலவியும் கொடுத்த மதர்ப்பில் மிளிர்ந்த சந்தோசம் உடல் பிரிந்து கொள்ள முடியாதவர்களாய் இன்னும் இன்னுமென கூடிக் கிடந்தனர் இரவு பகலென நேரகாலமின்றி. வீடென்று சொல்ல முடியாத அளவிற்கு செம்மண்ணால் எழுந்திருந்த சிறு மேடுதான் அவர்களின் வீடாயிருந்தது புதுமனையென்னும் பெயரில். வெளிச்சமும் இருளும் மெல்லிய பனியும் இடையிடையே தூவிக் கிடக்கும் குடிசையினுள் ஊடிக் கிடக்கும் சாமக்குளிருக்கு இதமாய் அவளை அனைக்கிற வேளைகளில் பால்யம் முழுமையாய் வற்றிப் போயிருக்காத குழந்தையாகவேக் கிடந்தாள் படுக்கையில். இருவருக்குமான நேசம் முடிவுறாப் புதிராகப் பிணைந்து கொண்டிருந்தது மணற்சுவடுகளாய். பூப்பெய்தி ஒரு வருட காலம் முடிவதற்குள்ளாகவே மணம் முடித்துக் கொடுக்கப்பட்டவளின் பால்யம் வெகு குறுகியதாய்ப் போனது, சிதைவுற்ற உடலிலிருந்து வெளியேறிய வாயுவினைப்போல்.
தினசரியின் ஒவ்வொரு நகர்தலுக்குமான தேவையனைத்திலும் களவின் துணையின்றி எதுவுமில்லை உணமயில். ஊரின் அனேக ஆண்களைப் போலவே களவுக்குச் சென்று கொண்டிருந்தவனை தயக்கமின்றி அனுப்பிக் கொண்டிருந்தவளின் மனதில் பிணைக்கப்பட்ட அங்கமென சதாவும் ஊரும் அவன் திரும்பி வருதலுக்கான பிரார்த்தனை. மற்றவர்களுக்கு எப்படியாகிலும் அவ்வூரைப் பொறுத்தவரையிலும் தொழில் என்பதையும் மீறின சடங்கு களவு, ஒளித்து வைத்து விளையாடும் சிறுபிள்ளைகளின் விளையாட்டினைப்போல எப்பொழுதும் ஏதாவதொன்றை மீட்டுக் கொண்டிருக்கும் சிறுவர்களாக இருக்குமிவர்கள் எலிகளின் தீணிக்காய் காத்துக்கிடக்கும் வயல்வெளி நெல்மூட்டைகளிலிருந்தும், பின்னிரவு நீள்மூச்சு உறக்கத்திலும் இறுக்கிப் பிடித்த நகைகளுடன் உறங்கும் மனித ஜென்மங்களிடமிருந்தும் போதுமான அளவுக்குமேல் திருடுவதில்லை. விளையாட்டில் எல்லா சமயங்களிலும் வெற்றி மட்டுமே கிடைப்பதில்லை. இந்த விளையாட்டினைப் பொறுத்த வரை தோல்வி உயிர் மாய்க்கும் பிரயத்தனத்தின் கடும் பந்தயமாயிருக்கும். ஆண்கள் களவுக்குச் செல்கிற இரவுகளில் ஊர்ப்பொதுவில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பிற்குக் காவலாய் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெண்கள் ஒருவர் மாற்றியொருவராய்ப் போய்வந்து கொண்டிருப்பார்கள். புதிதாக நெருப்புக்காவலுக்கு வருமிவளின் தயக்கமும் பயமும் நிறைந்த தோற்றத்தினை பரிகசித்தபோதும் தங்களின் துவக்க காலத்தினை நினைவுபடுத்திக் கொள்ளாமலில்லை அப்பெண்கள். சேலையால் சுற்றப்பட்ட சிறுமி என்பதனைத்தாண்டி இவள் குறித்து எதுவும் யோசிக்க முடியாது அச்சமயங்களில் அவர்களால்.
காலம்காலமாய் களவுக்குறி சொல்லி பழக்கப்படுப்போன அவ்வூரின் ஒரேயொரு குடும்பத்தில் எல்லா வயதிலும் முதுமை மட்டுமே இருந்தது குழந்தைகள், பெரியவர்கள் வேறுபாடின்றி. சகுனம் பார்த்துச் சொல்லும் அவர்களின் சாமர்த்யத்தில் சந்தேகங் கொண்டவளாய் பின்வாசல் வழி நுழைந்து எட்டிப்பார்த்தவளை வீட்டுக்காவலுக்கிருந்த முனியடித்தாய்ச் சொல்லி தூக்கி வந்து போட்டனர் குடிசையில். வெளிறிய முகத்தில் கடைசியாய் மிஞ்சின அச்சம் அப்படியே கிடக்க, இடைக்குக் கீழாக கசிந்த குருதி நீருற்றென கசிந்து கொண்டிருந்தது. ஓமத்தூளினை அள்ளி காயம் கண்ட இடத்தில் தூவ எத்தனித்த பெண்களால் கடைசி வரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை சிறியதொரு கீறலையும். அடி சற்று பலமானதுதான் என்று மட்டும் பேசிக்கொண்டவர்கள் அடுத்த பூசைக்கான மொத்த ஏற்பாடுகளையும் இவனே பார்த்துக்கொள்ள வேண்டுமென்றனர். கசக்கி எறிந்த மலரென கிடக்கும் அவளைப் பார்த்தவன் மெளனமாக சம்மதித்தான். களவுக்குடில்களில் முனிகளும் சாமப்பேய்களும் சாதாரணமாக பார்க்க முடிபவைகள் தான். எனினும் எதைக் கண்டு இவள் பயந்திருப்பாளென்பது ஒருவராலும் விளங்கி கொள்ள முடியாத்தாயிருந்தது. சில தினங்களுக்குப் பின் நினைவு திரும்பியவளிடம் எதைக்கேட்டாலும் பூனை காட்டுப்பூனை என்பதை மட்டும் பதிலாய் சொல்லிக் கொண்டிருந்தாள். பூனைகள் எல்லாப் பூசைகளிலும் பலி கொடுக்கப்படுவது வழக்கம்தான் அதனால் என்ன? சாபம் தூவிய தங்கள் உணவினை உண்ணுகிற போதெல்லாம் இருளுக்கு சமர்ப்பிக்கவும் அப்பூனைகளுக்கு நன்றி சொல்லவும் தவறுவதில்லை. கடைசியான பூசைக்குப் பிறகு, எங்கு தேடியும் இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை பூனைகளை, அடுத்த களவு தினத்திற்கான சமயத்தினை நாட்கள் உணர்த்திக் கொண்டிருந்தாலும் குறி கேட்பது தடங்கல் பட்டுச் சென்றது. வீட்டிலிருக்கும் நாய்கள், காடைகள் என அவ்வளவும் வரிசையாய் இறந்து போவதைக் கவனித்த குறி சொல்லி அமாவாசைக்கு முந்தின இரவில் மனநலம் பாதிக்கப்பட்டவனாய் அந்தக் கிராமத்தை விட்டு ஓடத்துவங்கினான் பூனை, பூனை, காட்டுப்பூனை என கத்தியபடியே. விரியத் துவங்கிய வெம்மையில் ஸ்ர்ப்பங்கள் நஞ்சேரிப் போனதுடன் ரெளத்ரம் நிரம்பியவைகளாய் நிலம்விட்டு வெளியேறி சதாவும் சுற்றியபடியிருக்கும் பசியுடனும், ஈரம் படர்ந்த நிலம் தேடியும்.
குறிகாரனும் இல்லாமல் வேறு வேலைகளுக்குச் செல்வதற்கான சாத்தியங்களும் இல்லாமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தவர்களின் குழந்தைகள் சாத்தான்களின் ஆசிர்வாதம் பெற்றவர்களாய் கருகிக் கொண்டிருந்தனர் உடலும் மனமும். பூனை பூனையென புலம்பிக் கிடந்த இவனின் மனைவி ஒருவாறாக குணப்பட்டவளாய் மாறியிருந்தும் நள்ளிரவுகளில் எழுந்து ஊரெல்லை வரை சென்று குறிகாரனை சத்தமாக கூப்பிடுபவளாய் இருந்தாள். ஊர் சனம் முழுக்க கவனித்துக் கொண்டிருந்த பொழுதும் பதிலில்லை ஒருவரிடமும். சில மாதங்களில் வழியெதுவும் இனி சாத்தியமில்லை என்றானபின் அடுத்த களவுக்கான குறி நமது வயிற்றின் உசுப்பலில்தான் இருக்கிறது என முடிவு செய்தவர்களாய் தோராயமாக ஒரு தினத்தினை முடிவு செய்து பூசைக்குத் தயாரானார்கள். ஊரில் மிஞ்சியிருந்த எருமைகளில் ஒன்றை சாமப்பலி கொடுத்து முடித்தபின், ஆறுகல் தொலைவிலிருந்த கிராமமொன்றில் இலக்கு வைத்து கிளம்பிய பதினாறு பேரில் இரண்டுபேர் மணம் முடித்திடாதவர்கள்.
ஊரிலிருந்து பிரியும் சாலையில் நவ்வாலு பேரான குழுவாய் தனித்து நடக்கத் துவங்கியவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடங்களில் வேலை முடிந்த பின்பாக இரண்டு ஊருக்கும் மையாமாயிருக்கும் ஐய்யனார் கோவிலில் சேர்ந்து கொள்வதென முடிவாகியிருந்தது. நடக்க நடக்க அவர்கள் அவ்வளவு பேரிடமிருந்தும் கசிந்தது வெப்பம். கோவிலையும் ஊர்ப்பொது தானியக்கிடங்கையும் மற்ற மூன்று குழு பார்த்துக் கொள்ள பெரு நிலக்காரனின் வீட்டினை இவனிருந்த குழு நெருங்கி விட்டிருந்தது. சில மாதங்களின் விடுதலிலேயே பல தலைமுறையாய் செய்த தொழில் மீண்டு வர அச்சங் கொடுத்தது. யோசிக்கவும் பாதியில் திரும்புதற்குமான அவகாசமில்லையென இன்னும் வேகமாய் வீட்டை நெருங்கியவர்கள் முன்பே நோட்டம் கண்டதின் படி சொந்த பந்தம் ஒருவரும் விருந்திற்கு வந்திருக்க வில்லையென்கிற தெளிவான முடிவுடன் உள்ளிறங்கிப் போகையில் கூடம் வரையிலும் படுத்திருந்த ஆட்களைப் பார்த்து தயங்கினர். சந்தேகமில்லை, பகலில் இல்லாமல் மாலைக்குப் பின்பாக விருந்திற்கு வந்திருக்கிறார்கள். விருந்தாள் வந்த வீட்டில் களவாடுதலென்பது வழக்கமில்லை என்பதுடன் சாமிக்குத்தமும் கூட, ஆனால் திரும்பிச் சென்று வெறும் வயிற்றோடு படுப்பதென்பது இனி சாத்தியமில்லை. காவலுக்கு ஒருவன் நிற்க, மற்ற மூவரும் விரைந்து தேவையானவற்றை சேகரிக்கத் துவங்கினார்கள். கடைசியாக பால் குடித்த குழந்தையினை ஸ்தனத்திலிருந்து விலக்காமலே உறங்கிப் போயிருந்த பெண்ணொருத்தி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தவள் புரட்டு படுக்க வேண்டி குழந்தையை விலக்கியவள் தெளிவின்றி யாரோ சில ஆட்களின் அசைவினை உணர்ந்தவளாய் அருகில் உறங்கியவர்களை எழுப்பினாள் அவசரமாய். காவலுக்கிருந்தவன் மற்றவர்களை உசார் படுத்த அவகாசமற்றவனாய் அப்போதைக்கு அவர்களின் பாதையை மாற்ற கவனத்தைத் தன் பக்கம் திருப்பச் செய்பவனாய் வாசல் நோக்கி ஓடினான். சிலர் அப்பொழுதே வாசல் பக்கமாக ஓடினாலும் களவுக்கு வருகிறவர்கள் தனியாக வருவதில்லை என்பதை நன்கறிந்தவர்களாய் வீட்டைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.
களவு முடிந்து சந்திப்பதற்காக குறித்த கோவிலில் நான்கு பேரும் கட்டி வைக்கப் பட்டிருந்தனர். கோவிலுக்கு அருகாமையில் ஆற்றோரமாய் ஊர் பிரச்சனை சரியாக வேண்டி இவர்கள் கட்டியிருந்த கல் மண்டபம். உண்மையில் அது ஆலயமாகவும் சாமப்பூசைக்கான இடமாகவும் மாற்றிக் கொள்ள வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டது, பிற்பாடாக நிகழ்ந்த துயரங்கள் பாதிக்கு மேல் அதனை வளர விட்டிருக்கவில்லை. விட்டுப்போன ஆட்களைத் தேடிக் கொண்டிருந்த மற்றவர்கள் திருடியதை முன்பாக ஊர் சேர்த்துவிட்டு தெளிவானதொரு அனுமானத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தனர். குறித்த நேரம் தாண்டியும் ஊர்திரும்பாத கணவர்களைப் பற்றின கவலையில் மூச்சுக் கட்டிப் போயிருந்தது இவளைத் தவிர மற்ற மூன்று பெண்களுக்கும். சில மாதங்களாக மறந்திருந்தவள் மீண்டும் பழைய வார்த்தைகளான பூனை காட்டுப்பூனை என இவள் முனுமுனுத்தாளேயன்றி வேறு எந்த விதமான கவலைகளையும் கொண்டிருக்கவில்லை. வீட்டிற்குள் எரிந்த விளக்கு எப்போதோ அணைந்து போய் புகை மண்டிக் கிடந்தது, பிரக்ஞையின்றிக் கிடந்தவளுக்கு கொஞ்சம் கஞ்சியைக் கொடுத்தபோது ஆவலுடன் குடித்தவள் பூனையென்றாள் சிரித்தபடியே. முதல் முறையாக பச்சையான உதிர வாசனை ஊரில் கமழ்ந்து வரத்துவங்கியிருந்தது மனிதக் குருதியா அல்லது மிருகங்களுடையதாவென்கிற தெளிவின்றி. தங்களின் ஆட்களை மீட்டு வரவேண்டி சென்றவர்கள் துவட்டியெடுக்கப்பட்ட உடலுடனும் சூடு வைக்கப்பட்ட கால்களுடனும் கோவிலில் கட்டப்பட்டிருப்பதை பார்த்துத் தடுமாறி நின்றனர். இப்பொழுது போவது மொத்தமாக எல்லோருமே பிடிவிடுவதற்கான வாய்ப்பாகிவிடுமெனக் கருதி நின்றவர்கள் மறைவாயிருந்து நடப்பவற்றைக் கவனித்தனர். நான்கு பேரில் இரண்டுபேர் சூடுவைக்கப்பட்டதின் நஞ்சில் உடல் தாங்காதவர்களாய் இறந்து போயினர். ஊரிலிருந்து கொண்டு வந்து போட்ட தானிய மூட்டைகளை இவர்களுகுக் காட்டி அந்த ஊர்க்காரர்கள் இனியொருபோதும் திரும்பி வரக்கூடாதென எச்சரித்து விட்டுச் சென்றனர். கடைசியாய்க் கொடுத்த தானியம் காயம் தீரும் வரையிலும் வந்தாலுமே ஆச்சர்யம்தான், திருட வந்தவனை வெறுங்கையுடன் அனுப்புவது ஊரின் பெருமைக்கு அழகில்லை என்பதினால்தான் இதுவும், இல்லாதபட்சத்தில் உடலைத் தவிர எதுவும் மிஞ்சியிருக்காது. கட்டிவைக்கப்பட்டு உதிரம் வழிந்த இவர்களின் உடல்களில் ஈக்கள் மொய்க்கவும் பூச்சிகள் அப்பவும் துவங்கி விட்டிருந்தன சீக்கிரமாகவே. ஊர்க்காரர்கள் கிளம்பிப்போன நீண்ட நேரத்திற்குப்பின் மறைவிலிருந்து வெளிப்பட்டவர்கள் இவர்களின் நிலமையில் என்ன செய்வதெனப் புரியாதவர்களாய் இறந்து போன இரண்டு பேரையும் மண்டபத்தினருகில் புதைத்து விட்டு வந்தனர். ஊர் நெருங்குகிற நேரமாக இன்னொருவனும் இறந்துவிட, இவனை பாதுகாப்பாக இருக்கச் சொல்லிவிட்டு அவனையும் புதைத்து வந்தனர். களவுக்குப் போன நால்வரில் இவனைத் தவிர்த்த மூன்று பேரும் இறந்து போனார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாத ரகசியமாகிப் போனது அதன்பிறகு.
தொடர்ந்து ஊரில் நடக்கும் அவ்வளவு துர்நிகழ்வுகளுக்கும் இவளே காரணமாயிருக்க முடியுமென நம்பிய சனம் இவளின் இருப்பு மொத்தமாக அவ்வளவு பேரின் முடிவுக்குமான சாத்தியமாகிவிடுமென்கிற அச்சத்தில் அவளை அவ்வூரைவிட்டு வெளியேற்ற யோசித்தனர். நஞ்சு பரவிய உடலும் நரம்பு அறுபட்ட கால்களுமாய் இருக்குமவனைக் கவனித்துக் கொள்ள வேறு ஒருவரும் இல்லையென்பது சிக்கலாகத் தோன்ற என்ன செய்வதென்கிற தயக்கம். மற்றவர்கள் மனதில் நினைத்திருந்ததைப் புரிந்து கொண்டவனாய் இவன் ஒரு பின்னிரவில் ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிலக்கிக் கிளம்பியபோது, அவனைத் தடுத்து நிறுத்தும் திராணியற்றவர்களாய் அவ்வளவு பேரும் ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கென்று பாதுகாத்தப் பொருள்கள் சேர்ந்திருந்த குதிரைத் தவிர்த்து கையில் சில பொருட்களுடன் மட்டுமே அவர்கள் வெளியேறியிருந்தனர். திசைபோன போக்கில் நீண்ட இவர்களின் பயணத்தில் வெவ்வேறான சீதோஸ்ன நிலைக்குப் பழக்கப்படாத அவளுடல் துவண்டு பிணிதொற்றிவிட, கன்னட தேசத்தின் எல்லைக் கிராமமொன்றில் கடைசியாய் மூன்று இரவுகளும் பகல்களும் தொடர்ச்சியாக சிரிப்பதும் விழிப்பதுமாய் இருந்தவள் ஒரு மார்கழி மாதத்தின் அதிகாலையில் மரித்துப்போனாள்.
தன்னைத் தவிர்த்து தன்னிடமிருந்த யாவும் பிரிந்து சென்று விட்டதென தனிமைப்படுத்தப்பட்டவன் ரோகிகள் நிரைந்த உலகில் ஒருவனாய் தன்னைக் கலந்து போகச் செய்திருந்தான். மிக மெதுவாக நடக்கும் இவனால் நெடுந்தூரப் பயணமென்று எதனையும் மேற்கொண்டுவிட முடியாததால் சிலநாட்களுக்கு சில ஊர்களென வெவ்வேறு ஊர்களாய்க்கிடந்து பல காலங்களுக்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வந்துவிட்டிருந்தான். மாற்றங்களென நிறம் மங்கிப் போனதைத் தவிர்த்து பெரிதாய் ஒன்றுமில்லை மண்டபத்தில். வெறுமை மிகுந்ததொரு புன்னகையை உதிர்த்தவன் இறங்கிச் சென்று குளத்தில் முகம் கழுவி நடந்தான். சலனமின்றிக் கிடந்த பார்வை, வெளி முழுக்க விரியத் துவங்கியிருந்த வெளிச்சத்தில் எரிந்த ஊரின் சதைப்பிண்டங்களின் நெடி மிகுந்து வீசியது காற்றில். அவ்வூரின் உயிர்களுக்கு கடைசி நம்பிக்கையென இன்னுமிருப்பது முன்பு எப்பொழுதோ ஆறாயிருந்து குளமாய் சுருங்கிப் போயிருக்கிற அந்நீர்வெளிதான். எவ்வளவோ ஊர்களை கடந்து வந்தவனுக்கு இனி கடந்து செல்ல எதுவுமில்லையெனத் தோன்றியதுடன் சொந்த நிலத்தின் உதிர பசி புரிந்தவனாய் ஆவலோடு தன்னை அர்ப்பனிக்கத் தயாரானான். இதுதான் தகனம் செய்யுமிடுமென வேறுபாடின்றி வழிமுழுக்க சிதறிக் கிடந்தது மண் கலயங்கள் எவ்வளவோ பேரின் ஆத்மாக்களை அவ்வெளியில் சங்கமிக்க வைத்துவிட்டு.
மிஞ்சியிருந்த ஒன்றிரண்டு நாய்களும் எவ்விதமுமான வேகமுமின்றி மெளனித்திருந்தன இவன் ஊர் நுழைகையில். ஒருவராலும் அடையாளம் கண்டு கொள்ளப்பட முடியாத இவனை தீவிரமாக நினைக்கச் செய்வதென இப்பொழுது உணர முடிவது நரம்பறுபட்ட கால்களை மட்டும்தான். கரும்புகை சூழ்ந்த ஒடிசலான வீதியில் பெரிதான ஆள்நடமாட்டமில்லாதிருந்தடன் வீடுகள் பலவும் வெறுமையாய்க் கிடந்தன. மூக்கனாங்கயிற்றை நக்கிச் சுவைத்துக் கொண்டிருந்தது உடல் வற்றிய காளையொண்று சிறுநீர் கழித்தபடி. எதையோ தேடுபவனாய் ஒவ்வொரு வீடாகப் பார்த்தபடி சென்றவன், புதிதாகப் பிறந்திருந்த குழந்தையின் வீட்டருகே சில நிமிடங்கள் நின்று வாசலையே கவனித்துக் கொண்டிருந்தான். பெண்சிசு. பிறப்பின் உதிரவாசனை தெருவில் ஈரப்பசையுடன் கசிந்து நிரம்பியிருந்தது. கணகள் ஒளிர அவ்வீதியைக் கடக்க முயன்றவன் சற்றுத்தள்ளி துஷ்டி நடந்த வீட்டிலிருந்து கசியும் ஊதுபத்திகளின் சாவு நெடியை தவிர்க்க விரும்பியவனாய் நடந்து மறைந்தான். இன்னும் சற்று நேரத்தில் அடக்கத்திற்கு காத்திருக்கும் சவம் இறுக வாய்மூடி வெள்ளைத்துணி கட்டப்பட்டு பேச முற்பட்ட வார்த்தைகளை திரட்டி உருண்டிருந்த கண்களும் இமை மூடிக்கிடக்க கட்டப்பட்ட கட்டை விரலின் வழி கசிந்து வெளியேறத் துவங்கியிருந்தது குருதி.
எப்பொழுதோ வாளிப்புடனிருந்த இவனின் குடிசை கரையான் புற்றுகளாய் மேடாகிவிட்டிருந்ததுடன் ஊரின் மொத்த வெக்கையினையும் உட்கொண்டு வைத்திருந்தது. நிதானமாகத் தான் தேடிவந்ததை காண முற்பட்டவன் பாதி சிதைந்த நிலையில் பள்ளமொன்றிலிருந்து வெளியே எடுத்தான் இவர்கள் கடைசியாய் விட்டுப்போன குதிரை. அவளின் பழைய துணிமனிகளும் அறுப்பிற்குப் பயன்படுத்தும் குறுங்கத்திகளும் கிடந்ததில் இடைவெளியின்றி அப்பியிருந்தன கரையான்கள். ஊர் முழுக்க மரித்துப்போன உயிர்களின் ஆழ்மூச்சு இன்னும் உயிருடனிருக்கிறோமென தங்களை வெளிக்காட்டியபடி விரவிக்கிடக்க, தன்னுடனிருந்து எப்பொழுதோ இறந்து போன தோழர்களின் குரலிலிருந்த அழைப்பை தீவிரமாக உணரமுடிந்தவனுக்கு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இது தொடரப்போகும் ஒன்றாயிருக்குமெனப் பட்டது. சொந்த நிலமெரியும் காலத்தில் கொள்ளும் மெளனம் அடுத்ததாய் அதற்கடுத்தாயென நீண்டதொரு சாபமாய் தொடர்வது தவிர்க்க முடியாதது. துரதிர்ஸ்டவசமாய் இவ்வூர் எரிகிற எல்லாக் காலங்களிலும் இவர்களால் மெளனித்திருக்க மட்டுமே முடிந்ததால் சாபத்தினை அங்கத்தின் மேல் போர்த்தப்பட்ட தவிர்க்கவியலாததொரு ஆடையாகவே நினைக்க முடிந்தது. இவனை அடையாளம் கண்டு நலம் விசாரிக்க வந்த முதியவளொருத்தி உண்மையில் உயிர்தானா அல்லது இறந்துபோன ஆத்மாவின் மிச்சமா என்கிற குழப்பத்திலிருந்தவன் தயங்கி நிற்க, ஆத்மாவேதானெனினும் நீ அச்சங்கொள்ள வேண்டியதில்லையென சொன்னவள் இங்கிருக்கும் பெரும்பாலான உயிர்களும் ஆத்மாக்கள்தான் என்றாள், பல பத்து வருடங்களுக்குப் பின்பாக பிறந்திருக்கும் பெண் சிசுவிற்கு உடமையானவன் நீயென்று சொல்லி விட்டு அவனைக் கடந்து சென்று விட்டாள்.
எப்பொழுதும் ஒரேமாதிரியாய் இருக்கும் வீதிகளின் அடர்த்தியான வெம்மையில் உலர்ந்து வற்றிக்கிடந்த நாய், இறப்பின் விளிம்பிலோ அல்லது எப்பொழுதோ இறந்திருக்கலாம் என்றோ எண்ணும்படிதான் இருந்தது. யாரும் எதிர்பாராததாய் மழை பெய்யலாமென திரண்டிருந்த மேகம் கருத்து கருத்து முற்றிலுமாக சுற்றுப்புறத்தை இருளாக்கியிருந்தது. ஊரின் பல கால சாபத்தையும் குதிரில் திரட்டி சுமந்து கொண்டு வந்தவன் எல்லை தாண்டி மண்டபம் நோக்கி வந்து கொண்டிருந்தான். மிக நீண்ட நேரமாய் அமைதியாயிருந்த மண்டபத்தில் பறவைகள் சாணமிட்டு சென்றதைத் தவிர்த்து பெரிய நிகழ்வுகள் எதுவுமில்லை. புதிதாகப் பரவியிருந்த இருளினில் மெல்ல தடுமாறினாலும் மிக மெதுவாக பழைய இடத்தினைத் தேடினான், அவனுடலில் முழுமையாய் கலந்து போயிருக்கிற நஞ்சு கொல்வதற்குப் பதிலாக அவனை வாழ்வதற்கு நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்க, தான் கொண்டு வந்த குதிரை இடம் கண்டு கொண்டு பள்ளமொன்றைத் தோண்டி வைத்தவன் துருப்பிடித்துப் போன குறுங்கத்தியினை வெளியே எடுத்து கால்களிலிருந்து உடலைக் கீறினான். உதிரம் வழிந்தது நஞ்சையும் வெளியேற்றியபடி. நிதானமாக குதிருக்குள் இறங்கிக் கொண்டவன் கைக்கெட்டிய வரையிலுமிருந்த மணலை வாரியிழுத்து தன்னுள் கிடத்தினான். மணலும் உதிரமுமாய் புதுவிதமான கலவையாய் நிரம்பத் துவங்கிய அப்பள்ளம் முக்கால் உடல் வரையிலும் மறைக்கப்பட்டும், தலைக்கு சற்று மேல் வரையிலுமாக வெளித்தெரிந்தும் சில்நாட்களாய் அப்படியே கிடந்தது அவனின் திறந்த விழிகள் மூடப்படாமல். காத்திருந்து பெய்த பெரும் மழை தொலைந்து அடையாளமற்றுப் போயிருந்த ஆற்றின் உடலை மீட்டெடுக்கையில் அப்பகுதியிலிருந்த சிறு கிராமங்கள் ஆற்று நீரோடு இடம்பெயர்ந்து வந்திருப்பதை பல கல் தொலைவுகளுக்கு அப்பாலிருந்த மக்கள் மீட்டெடுத்துக் கண்டனர். சில காலங்களுக்குப்பின் அப்பகுதி கடக்க சிரமமான ஆற்றுப் பாலமாகியிருந்தது. தொலைவிலிருந்து சொந்த ஊருக்கு அரிதாக இறை வழிபாட்டிற்காக வரும் மக்களில் சிலர் அப்பாலத்தைக் கடந்து கொண்டிருந்தனர். புதிதாகத் திருமனம் முடிந்திருந்த யுவதியொருத்தி கணவன் முன்னால் நடக்க பிந்தி வந்தவள் அந்தரங்கமானதொரு நீள்மூச்சினை உணர்ந்தவளாய் சில நிமிடங்கள் பாலத்தின் ஓரிடத்தில் நின்றாள், முன்பு எப்பொழுதோ கேட்டதான ஞாபகத்தில் மெல்லியக் குரலில் பாடலொன்று நீரிலிருந்து கசிந்து எழுந்ததை அவளைத் தவிர்த்து ஒருவரும் கேட்டிருக்கவில்லை.
லக்ஷ்மி சரவணக்குமார்.
செவ்வாய், 18 மே, 2010
மணற்கூடுகள்.
எல்லா வெயில்காலங்களையும் போலில்லை இந்த வருடம், அடுத்த வெள்ளாமையைப் பற்றி பேசின தினங்கள் எப்பொழுதோ மறைந்து போனதொன்றாகிவிட்டிருக்க பிள்ளைகள் இப்பொழுது தறிக்கம்பெனிகளுக்கும் பிளாஸ்டிக் கம்பெனிகளுக்கும் வேலைக்குப் போகத் துவங்கியிருந்தனர். ஊரின் பாதிக்குமதிகமான வீடுகளில் விவசாயத்தினை நம்பியிருக்க வேண்டிய நிலையில்லாமல் வெவ்வேறு தொழில்களை பார்த்துக் கொண்டிருந்தனர். எலும்புகள் துருத்த பனங்காய் வண்டிகளை ஓட்டிவிளையாடும் சிறுவர்களுக்கு நினைப்பெல்லாம் திருவிழாவைப் பற்றியதாகத்தானிருந்தது எப்பொழுதும். வெள்ளையம்மா வீட்டில் பொம்பளைப் பிள்ளைகள் நாலும் வேலைக்குப்போயின, தறிக்கம்பெனிக்கு. கடைசியாகப் பிறந்த தம்பியை மட்டும் பள்ளிக்கூடம் அனுப்பிக் கொண்டிருந்தனர். செம்மண் புழுதியப்ப வெயில் மழையென எதைப்பறியதான அக்கறையுமின்றி கம்பெனிக்குப் போகிற பிள்ளைகளுக்கு காலநேரம் இல்லை வேலை முடிந்து வருவதற்கும் போவதற்கும். நாற்பது வயதை நெருங்கியிருக்கும் ஆத்தாவின் கருத்த உடலில் முறுக்கேறிப் போயிருந்தன தசைகளும், நரம்புகளும் தீவிரமாய். அவளைப் பார்த்துப் பார்த்தே உழைக்கக் கற்றுக்கொண்ட பிள்ளைகளின் நினைப்பு முழுக்க சதாவும் சுற்றிக் கொண்டிருந்தது கொஞ்ச வருசம் முந்தி விற்றுவிட்டிருந்த காட்டைத் திருப்பவதில்தான்.
அய்யா இறந்து எட்டாவது மாசத்தில் பிள்ளைகள் ஐந்தையும் நடுவீட்டில் பட்டினியாய் போடுவது இனியும் முடியாதென யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிரயம் முடித்துவிட்டு வந்தாள், அந்தப்பிள்ளைகளின் எல்லா சந்தோசங்களும் அந்தக் காட்டில்தான் கிடந்தன என்பதைத் தெறிந்து கொள்ளாமலேயே. கனவுகளின் ரேகைவிரிந்த அந்தப்பிள்ளைகளின் மனம் முழுக்க வயக்காட்டின் துவரைகொடிகளின் வாசத்தினைப் பற்றிய நினைப்பும் கொடிக்காகிணத்து குதியாட்டமும் நாளில் சில முறைகளாவது நினைத்துப் பார்த்துக் கொள்ளமுடிகிறதாயிருந்தது. மூத்தவளுக்கு ஒத்தநாடி உடல், மடித்துக் கட்டிய பாவாடைக்குக் கீழாக லவாப்பழ நிறத்தில் அவள் கால்களில் நிலைகொள்ளாத வேகமிருக்கும் தறி ஓட்டுகையில். அவலுடலுக்கு அவ்வளவு வேலைகள் பார்க்கிறாளென்பதனை அடுத்தடுத்திருந்த தங்கச்சிகள்கூட ஆச்சர்யமாகத்தான் பார்த்தார்கள். நுனியில் ஒளிரும் வசீகரமான மூக்கவளுக்கு. கண்ணாடி பார்க்கிற நேரங்களில் எப்பொழுதாவது தனித்து ரசிப்பதைத் தவிர்த்து அதைப் பற்றின கவனமொன்றுமில்லை அவளிடம். கடைசி தங்கச்சியைத் தவிர்த்து ருதுவெய்திவிட்டிருந்த மூன்று பிள்ளைகளுக்கும் கல்யானம் செய்து பார்ப்பதென்பதை சாகஸமாக நினைத்த ஆத்தாளுக்கு அதைப்பற்றின கவலையேதுமில்லாமல் இந்தப்பிள்ளைகள் காட்டை மீட்கவேண்டுமென உழைப்பதை நினைத்து அவசமில்லாமலில்லை. எரிந்து நிர்கதியற்றுக் கிடக்கும் இந்தப்பகுதி நிலங்களில் என்னயிருக்கிறது மிச்சமாய் இனி விளைப்பதற்கும் வெள்ளாமை செய்வதற்கும். இரும்புக்கூடாரங்கள் கவிழ்ந்த நீள்கட்டிடங்கள் வயல்வெளியின் பொட்டல் பகுதிகளெங்கும் அதிவேகமாய் தறிச் சத்தங்களை எதிரொலிக்க விட்டபடியிருக்க காவலுக்கு வைக்கப்படும் பொம்மைகள் கொடுந்தனிமையில் வானம் பார்த்துக் கிடந்தன ஆங்காங்கே.
புதிதாக தம்பி என்ன செய்தாலும் முதலில் சொல்லிவிடுவது அக்காக்களிடம்தான் இப்பொழுது வரையிலும். நிதந்தோறும் பிடித்து விளையாடும் பட்டுப்பூ
மில்லுக்குப் போகிற பிள்ளைகளுக்கு பஞ்சமில்லை ஊரில். அப்படியாகிப்போயிருந்த நிலையில் கம்பெனிகள் பெருக்காமல் என்ன? ஆனாலும் கொஞ்ச நஞ்ச விவசாயம் பார்க்காமலில்லை ஆட்கள் இன்னும். துவரையும் எள்ளும் பார்க்காமல் சில வருசங்களாக புரண்டு கிடந்த கரிசல் காடுகள் சமீபமாய் மிளகாய்த் தோட்டத்தின் காரமான பச்சை நெடியில் நிறைந்து போயிருந்தது. அம்மாவுடன் காட்டுராசா தோட்டத்திற்கு பழம் பழுக்கிற காலங்களின் அதிகாலையில் பழம்பொறுக்கப் போவான் இவனும். மிளகாய்ப் பழத்தின் காரநெடியில் தும்மல் வந்து கொஞ்ச நாட்கள் மூக்கெரிந்தாலும் காட்டுராசா வீட்டு அத்தை கொண்டுவரும் காலைநேரத்துக் கஞ்சியிலிருக்கும் வினோத சுவைக்காகவே நாளடைவில் பழகிப்போயிருந்தான். அப்பா இல்லாத பிள்ளையென்று அந்த அத்தைக்கு அளவில்லாத ப்ரியம் இவன்மேல். இவர்கள் விற்றிருந்த காட்டையும் சேர்த்து அவர்கள்தான் வாங்கியிருந்தார்கள் என்பதால் அக்காக்கள் அவ்வளவு பேருக்கும் இவர்களின் மீது வருத்தம்தானெனினும் யாரும் சொல்லிக் கொள்வதில்லை. வஞ்சகமில்லாமல் அந்த அத்தை ஏண்டி ஒருத்தியும் வீட்டுப்பக்கம் வரமாட்றிய? என இவர்களில் யாரிடம் கேட்டாலும் பதில் ஒரே மாதிரியாகத்தானிருக்கும் கம்பெனியில் ஆளில்லாததால் ஓ.டீ பார்க்கிறோமென்று. சொல்லி சொல்லியே இந்த சமயங்களில் நன்றாக பொய் சொல்லப் பழகியிருந்தன அந்தப் பிள்ளைகள்.
கடைசித் தங்கச்சியும் ருதுவெய்தின தினத்தில்தான் ஐந்தாவதிலிருந்து தம்பி ஆறாவது வகுப்பிற்குச் சென்றிருந்தான். வீட்டில் முன்னில்லாதபடி இவளின் சடங்கை கொண்டாட்டமாய் நடத்தவேண்டுமென விடாப்பிடியாய் இருந்தன மற்றப் பிள்ளைகள் மூன்றும், தங்களின் சடங்குகள் எப்படி நடக்க வேண்டுமன விரும்பி நடக்காமல் போன ஏக்கத்தில். அதிகக் கொண்டாட்டம் தம்பிக்குத்தான். ஆனால் கொஞ்ச நாட்களுக்கு அவளுக்குப் பக்கத்தில் போகக்கூடாதென அம்மாவும் மற்றவர்களும் சொன்னதில்தான் கொஞம் சங்கடப்பட்டான். அக்காவுக்கும் இவனைப் பக்கத்தில்வைத்து பார்க்காமல் நிலைகொள்ளாதென்பதால் அவனைப் பள்ளிக்கொடத்திற்கு லீவ் போடச்சொல்லிவிட்டு துணைக்கு இருக்கச் செய்துவிட்டாள். நிலாவைப் பாம்பு விழுங்குவதாக எப்பொழுதோ மூத்தக்கா சொன்ன கதையின் தினமான அமாவாசையில்தான் சடங்கு வைத்தார்கள். காட்டுராசா வீட்டிலிருந்துதான் எல்லாம் வந்திருந்தது அக்காவின் சீராய். அக்காக்கள் சாமர்த்யமாக எதுவாகயிருந்தாலும் முதலிது எங்களுடையதாகத்தான் இருக்கவேண்டுமென சொல்லி விடாப்பிடியாய் நின்றதைப் பார்த்து கிறுக்குக் கழுதைகளுக்கு தங்கச்சி மேல அம்புட்டுப்பிரியம் என்று பேசிக்கொண்டார்களேயொழிய ஒருவரும் வேறுமதிரியாய்ப் பார்க்கவில்லை. அம்மாவிற்கு எல்லாம் புரிந்திருந்த போதிலும் எதையும் அவள் கேட்டுக் கொள்ளவில்லை.
சொந்த பந்தமென இருந்ததெல்லாம் நல்லது கெட்டதிற்குக்கூட வரத்தயங்குகிற சென்மங்களாகவே எப்பொழுதும் இவர்களிடமிருந்து விலகியிருக்கவே நினைத்ததால் இந்த நாலு பிள்ளைகளையும் எப்படிக் கரையேற்றுவதென்கிற கலக்கமிருந்தது ஆத்தாளுக்கு. கம்பெனிக்கு வேலைக்குப் போகிற பிள்ளைகளில் நிறையபேர் யாராவது பையன்களோடு பழகி சீக்கிரமாகவே கல்யாணம் செய்து கொள்வது சகஜமாகிவிட்டிருந்தது சுற்றியிருந்த ஊர்களில். அப்படியும்கூட இந்தப் பிள்ளைகள் எதுவுமில்லாமல் சதாவும் காட்டைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறதுகளென வருத்தமிருந்தது அவளுக்கு. முறையாகப் பெண்கேட்டு வந்து இதுகளுக்கு கல்யாணம் நடக்குமென்பதை ஆசைக்காகக்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை அவளால். வெயில் மழை பாராமல் காட்டு வேலைக்குப் போகிறவள் வீட்டில் தனித்துக்கிடக்கிற வேதனை தாளாமலேயே ஆனமட்டும் யார் காட்டிலாவது வேலைக்குப் போவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டிருந்தாள். அந்த ஊரின் காடுகளெங்கும் எரிந்து முடிந்திருந்த வெறுமையில் இவளைப் போன்ற எவ்வளவோபேர் சொந்த நிலத்தில் கூலியாக வேலை பார்க்கிற துயரத்தினை விட்டுவிட்டிருந்தது. வேதனைகள் எதனையும் காட்டிக் கொள்ளாமல் வேலை செய்யும் பெண்கள் சிரித்தும் பேசியும் ஊர்க்கதைகளில் நாட்களை கடத்தினர். எப்பொழுதாவது காட்டைப் பற்றின நினைவு வருகையில் வீட்டில் முன்பு அடைத்து வைத்திருந்த துவங்கொலைகளின் வாசனையினை பூர்ணமாக உணர்வாள்.
இயந்திரங்களுக்கு மத்தியில் உருளும் துணிமூட்டைகளை நகர்த்தியபடியே சீக்கிரமாக வீவராக வேண்டுமெனக் கனவிருந்தது
தங்கச்சிகள் ஒவ்வொவருவரும் மணம் முடிந்து போனதன் பின்பாகவே தனக்கான விருப்பங்கள்
வெள்ளாமை செழித்திருந்த நாட்களில் காவலுக்குப் போகும் அய்யாவுடன் பிள்ளைகள் நாலும் காட்டுக்கு உடன் போகுங்கள். எவ்வளவு மறுத்தாலும்
யாருக்கு சந்தோசமோ இல்லையோ அம்மாவிற்கு சந்தோசமளிக்கும் படியாய் மூத்தவளைப் பெண்கேட்டு வந்திருந்தனர் தூரத்து சொந்தத்திலிருந்து. காலில் சக்கரம் கட்டிவிட்ட பரபரப்பு அம்மாவிற்கு. அக்கம்பக்கத்தில் சொல்லிவிட்டு வீடு திரும்புகிற நேரத்திற்கெல்லாம் காட்டுராசா மாமாவின் வீட்டுக்காரம்மா வந்து நின்றது முதல் ஆளாய். புள்ள வந்திருச்சா மயினி எனக் கேட்டபடியே வாங்கி வந்திருந்த பூவை தண்ணியில் போடச் சொல்லிவிட்டு வீட்டை ஒதுங்க வைக்கத் துவங்கியது உரிமையுடன். அப்பொழுதே கல்யாணம் நடத்திப் பார்த்துவிட்ட பாதி சந்தோசம் வந்திருந்த ஆத்தாவுக்கு மூத்தவள் ஒத்துக்கொள்வாளா என்கிற பயம்தான் அதிகமும். ஓ. டீ பார்க்கவேண்டமென சொல்லி வரச்சொல்லியிருந்தவளிடம் அத்தைதான் விசயத்தை மெதுவாக எடுத்துச் சொல்லியது. கண்களில் தடுமாற்றம் வழிய நின்றவள் எந்தப் பதிலுமில்லாமல் அம்மாவைப் பார்க்க சலனமில்லை அவளிடம். நேரமும் கொஞ்சமாகவே மிஞ்சியிருந்த கொடுமையில் சமாதானம் சொல்வதற்கும் அவகாசமில்லை பெரிதாய். மெளனத்தின் நீண்ட படலங்கள் சில நிமிடங்கள் படர்ந்து கிடந்த வீட்டினுள் எதுவும் புரியாதவனாய்த் தம்பி அவ்வளவு பேரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். சில்லரைக்காசுகளைக் கொடுத்து அத்தை அவனை கடைக்குப் போய்வரச் சொன்னாள். மிச்சமான நம்பிக்கையாய் அப்போதைக்கு மற்ற மூன்று பிள்ளைகளைத் தவிர்த்து வேறொன்றும் இருக்க முடியாதெனத் தோன்ற கேட்டுக்கொள்ளாமலேயே அந்தப் பிள்ளைகள் அக்காவிற்கு சமாதானம் சொல்லின. சாதாரணத்தில் நடக்கிற விசயமில்லையெனினும் பரஸ்பரம் தங்களுக்குள் அந்தரங்கமான உறவுப் பிணைந்திருந்த அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளவும் சரிசெய்யவும் முடியும். கொஞ்ச நேரத்திலேயே ஒப்புக்கு மெளனமாக அந்தப் பிள்ளை சம்மதித்து தயாராகி நின்றது.
சிடுமூஞ்சி முத்துக்குக் கல்யாணமெனக் கேள்விப்பட்ட யாரும் கம்பெனியில் ஆச்சர்யப்
சத்தங்கசியாமல் ஒப்பாரி வைத்த அம்மாவின் முகம் முழுக்க அழுது அழுது வடிந்திருந்தது கண்ணீர்த் தடங்கள். வாசல் உரலில் போய் சற்றுநேரம் உட்கார்வதும் மீண்டும் வீட்டிற்குள் வந்து மாரிலடித்து அழுவதுமாய்க் கிடந்தவள் விடியும் பொழுதை நினைத்து இன்னும் அதிகமாய் அழுதாள். சின்னவனும் விடப்பிடியாய் அவர்களுடன் சென்று விட்டிருந்ததில் தனியாகிக் கிடந்த அம்மாவின் கவலையை சொல்லிக் கொள்ள முடியாமல் கதறினாள் அய்யாவின் பழைய புகைப்படமொன்றைப் பார்த்தபடி. நேரங்கழித்துத் திரும்பின பிள்ளைகளுடன் உடல்முழுக்க கரிசல்மண்ணும் எள்ளுச் செடிகளின் காய்களுமாய் வந்துகொண்டிருந்த மூத்தவளிடம் காட்டின் மிச்ச உடலைக் கண்டாள். கண்கள் மிரள வெறித்துக் கிடந்த அவளின் முகத்தினைப் பிடித்து சேர்த்தணைத்துக் கொண்டவள் எதுவும் கேட்காமலேயே அழுது கொண்டிருந்தாள் நிறுத்த முடியாமல். உணர்ச்சிகளெதுவுமின்றி உறங்கப் போனவளின் உடலில் முன்பு காணாத தளர்ச்சி தெரிந்தது. பார்த்த எல்லாவற்றிலும் அய்யா விட்டுப் போன காட்டை மட்டுமே உணரமுடிந்தவளால் அந்த ஊருக்கு சம்பந்தமே இல்லாத பனங்காட்டு கிராமத்தினில் வாழ்வதனை நம்பக்கூடிய விசயமாய் ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கவில்லை. காட்டைக் கொஞ்சங் கொஞ்சமாக தன் சேலைகளுக்குள் அள்ளிமுடிந்து கொள்ளத் துவங்கியவளின் சேகரிப்பில் முக்கால்வாசிக்கும் அதிகமான நிலம் வந்துவிட்டிருந்தது. கல்யாணத்தின் அத்தனை பரபரப்பிலும் உறுத்தாகக் கிடந்து நல்லது கெட்டதுகளைப் பார்த்த காட்டு ராசாவிடமும் அந்த அத்தையிடமும் எதுவுமே பேசாதிருந்தது என்னவோபோலிருந்தது பிள்ளைகளுக்கு. மறுவீடு வந்தவர்களை திருப்பியனுப்ப வந்த அந்த அத்தை இவளுக்கு சின்ன சின்னதாகக் கொஞ்சம் மூட்டைகளைக் கொடுத்தாள். ஒன்றை மட்டும் பிரித்துப் பார்த்தவளின் கண்களில் காட்டில் விளைந்திருந்து முதலறுப்பு எள். உடலில் சேர்த்திருந்த கரிசல் மண்ணெல்லாம் உதிர்ந்து நீராய் வெளியேற சத்தமாக அழுதபடியே அவளை அணைத்துக்கொண்டாள் நீண்ட நேரத்திற்கு.
நன்றி --- தாமரை மாத இதழ்
திங்கள், 17 மே, 2010
சாமத்தில் எப்போதுமிருக்கும் கனவில்
சிரித்துக் கொண்டிருக்கும் புத்தனின்
இதழ்களில் குருதி வழிவது
வழமையாகியிருக்கிறது
எம்
சமர் பற்றின கதைகளில்
எரியும் நிலமொன்றின் மீது
நடனமாடிக்கொண்டிருக்கும் கடவுளர்களும்
கைகளில் கொஞ்சம் ஆயுதம்
எடுத்திருக்கிறார்கள்
பேரதிகாரத்தின் நாவுகளில்
இன்னும் சமாதானத்திற்கான
பாடலிருக்கிறது..
ஒரு மழை நாளில் நிகழ்ந்ததென
சந்தோசமான வொன்றை சொல்லிக்கொள்ள
முடிகிற சாத்தியமில்லை
எப்பொழுதிற்கும்
எம் குழந்தைகளின்
தலைகளில் சொந்த நிலம்
சிறு புள்ளியாகிருக்கிறது
என்னால் தொடர முடியாத இக்கவிதையை
யார் வேண்டுமானாலும் நிரப்பலாம்..
எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதப்படலாம்..
( இதிலாவது இணைவீர்களா என பார்ப்போம் எம் தமிழினமே)
ஞாயிறு, 16 மே, 2010
கரைந்து போகிறது காலம் ரேலை பிரித்து
அனாமத்தாய் வனம் சேரும்
முடுமரங்களின் வேர்களென
விருப்பங்கள் சொற்களாய்
நீண்டு கொண்டிருக்க்கின்றன நொடிதோறும்
இமைப் பிளவில் கசிந்த முதல் ஈரத்தில்
உறவின் சுழி உணர்ந்தேன்
தம் பாதையின் முடிவறியா
ஜிப்ஸியாய்
துயர் சுமந்தைந்தவனை
தயக்கமின்றி தம்பியாக்கிக் கொண்டாய்
சுமப்பதின் சுகம் உணர்ந்தபின்
சிலுவைகளின் கனம் தெரிவதில்லை
நீயின்னும் காணாத என அம்மாவும்
நானின்னும் காணாத உன் அம்மாவும்
நமக்கு அம்மாவான நாளில்
நாமிருவருமே மீண்டும் ஜனித்திருக்கிறோம்
பால்யமறியாத குழந்தையென
உன் உள்ளங்கைகளுக்குள்
சரணடைகிறேன்
நீ தொலைத்த உன் தம்பியாய்
நான் தேடிய அக்காவிடம்